
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரபலமான முகமாக திகழும் மகேந்திர சிங் தோனி (எ) எம்.எஸ்.தோனி இன்று (ஜூலை 7-ம்தேதி) தனது 44வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளான இன்று அவரது சாதனைகள் அடங்கிய கிரிக்கெட் வாழ்க்கை பற்றி ஒரு பார்வை இதோ உங்களுக்காக!
இந்தியாவின் ராஞ்சியில் 1981-ம் ஆண்டு ஜூலை 7-ம்தேதி எம்.எஸ்.தோனி பிறந்தார். அவர் ஆரம்பத்தில் கால்பந்து மற்றும் பூப்பந்து விளையாட்டில் சிறந்து விளங்கினார், கோல்கீப்பராக விளையாடினார் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்றார். அவரது பள்ளி விளையாட்டு ஆசிரியர் அவரது விக்கெட் கீப்பிங் திறமையைக் கவனித்து கிரிக்கெட் விளையாட ஊக்குவித்தார்.
தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை 1995-ல் தொடங்கினாலும் தோனியின் சர்வதேச அறிமுகமானது 2004-ம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் தன்னை ஒரு சக்திவாய்ந்த பேட்ஸ்மேனாக நிலைநிறுத்திக் கொண்டதன் மூலம் தொடங்கியது.
சச்சினுக்கு அடுத்ததாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஃபேவரைட் ஆக திகழ்ந்தவர் என்றால் அது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தான். பதற்றமான சூழலில் கூட செம கூலாக விளையாடுவது, ஜெயிக்க முடியாத போட்டியில் அணியை உற்சாகப்படுத்தி ஜெயிக்க வைப்பது என அவரின் முடிவுகளுக்கும் கூட இங்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு என்றே சொல்ல வேண்டும்.
களத்தில் தனது திறமை மற்றும் அமைதியான தோற்றத்திற்கு பெயர் பெற்றவர் தோனி. போட்டிகளின் பரபரப்பான சூழலிலும் எந்தவித பதற்றத்துக்கும் ஆளாகாமல் அமைதியாக இருந்து ஆட்டத்தின் போக்கை மாற்றுவதே அவரது தனித்திறமை ஆகும். அணி தோல்வியின் விளிம்புக்கே சென்றாலும் முகத்தில் எந்தவித சலனமும் காட்டாமல் அமைதியின் உருவமாக போட்டியை வழிநடத்துவது, தனது விதிவிலக்கான விக்கெட் கீப்பிங் திறமை, ஆக்ரோஷமான பேட்டிங் மற்றும் அமைதியான கேப்டன்சி ஆகியவற்றால் அவரை, ‘கூல் கேப்டன்’ என ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி ரசிகர்களால் ‘தல’ என்றும் செல்லமாக அழைக்கப்படுகிறார். கிரிக்கெட் விளையாட்டில், தனது இரண்டு தசாப்த காலப் பயணத்தில், தோனி ஒவ்வொரு ஆட்டத்திலும் தனது முத்திரையை பாதிக்க தவறியதேயில்லை.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகிய போதிலும், தோனி இந்தியாவின் மிகவும் பிரபலமான விளையாட்டு சின்னமாக, ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்துடன் வலம் வருகிறார்.
தோனி எங்கு சென்றாலும் அவருடன் புகைப்படம் எடுக்கவும், ஆட்டேகிராப் வாங்கவும் ரசிகர்கள் கூட்டம் அவரை பின்தொடர்ந்து செல்ல தயங்குவதில்லை. தோனி இன்று வெறும் ஒரு கிரிக்கெட் வீரர் அல்ல, ஒரு கல்ச்சுரல் ஐகானாக மாறியுள்ளார். அவரது அமைதி தன்மை, திட்டமிடல் திறன், 'ஹெலிகாப்டர் ஷாட்' எனும் தனித்துவமான பாணி மற்றும் ஆட்டத்தின் மூலமாக பேசும் பாணி அவரது ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் முதன்மையானவர் தோனி. 44 வயதான ஜாம்பவான் ராஞ்சியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் மற்றும் வலது கை மட்டையாளர்.
2007-ம் ஆண்டு ஒருநாள் அணியின் கேப்டன்சியை ஏற்றுக்கொண்டார், அதே ஆண்டு ஐசிசி T20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.
2011 கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வெல்ல அவர் தலைமை தாங்கினார், இது சொந்த மண்ணில் ஒரு வரலாற்று வெற்றியாகும்.
2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்லவும் அவர் தலைமை தாங்கினார், இதன் மூலம் 50 ஓவர் உலகக் கோப்பை, 20 ஓவர் உலகக்கோப்பை, ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையை வென்றுத்தந்த ஒரே கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார்.
இத்துடன், 200 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்து 110 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். 72 T20 போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தி 41 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் 60 டெஸ்ட் போட்டிகளில் தலைமை வகித்து 27 வெற்றிகளை பெற்றுள்ளார்.
தோனியின் சர்வதேச புள்ளிவிவரங்கள்
ODI: 350 போட்டிகள், 10,773 ரன்கள், சராசரி 50.57
T20I: 98 போட்டிகள், 1,617 ரன்கள், சராசரி 37.60
டெஸ்ட்: 90 போட்டிகள், 4,876 ரன்கள், சராசரி 38.09
மொத்தமாக, மூன்று வடிவிலான கிரிக்கெட்டையும் சேர்த்து மொத்தம் 538 சர்வதேச போட்டிகளில் ஆடி 17,266 ரன்கள் எடுத்து இருப்பதுடன், விக்கெட் கீப்பிங்கில் 829 பேரை ஆட்டமிழக்கச் செய்திருக்கிறார்.
இப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் தோனி கடந்த 2015-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் இருந்தும், 2019-ம் ஆண்டு டி20 போட்டிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.
தற்போது தோனி ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். அதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக 17 ஆண்டுகளாக வலம் வருகிறார். ஐபிஎல் தொடர் துவங்கிய ஆண்டு முதல் இப்போது வரை (2008-2024) சுமார் 17 ஆண்டுகளாக விளையாடி வரும் தோனி இதுவரை 264 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஐபிஎல்லில் கேப்டனாக இருந்த 226 போட்டிகளில், தோனி 133 வெற்றிகளையும், 91 தோல்விகளையும், 58.84 வெற்றி சதவீதத்துடன் பதிவு செய்துள்ளார். வீரராக பேட்டிங்கில் 264 போட்டிகளில், 137.54 ஸ்ட்ரைக் ரேட்டிலும், 39.13 சராசரியிலும், 5,243 ரன்கள் எடுத்துள்ளார். பேட்டிங், விக்கெட் கீப்பிங் மற்றும் அவரது கேப்டன்சி என மூன்று துறைகளிலும் தோனி சென்னை அணிக்காக முக்கியமானவராக இருந்துள்ளார். கேப்டன்சியின் அழுத்தத்தைக் கையாண்ட போதிலும், ஐபிஎல் முழுவதும் அவர் தன்னை எளிதாகக் கையாண்டு அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார்.
இந்நிலையில் இந்தாண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ‘ஹால் ஆப் பேம்’ என்ற புகழ்பெற்ற வீரர்களின் பட்டியலில் தோனியை சேர்த்து அவருக்கு கௌரவத்தை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு வரலாற்றில் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் சிறந்த கேப்டன்களில் ஒருவராக கருதப்படும் எம்.எஸ் தோனியின் சாதனைகள் இந்தியாவிலும் உலக அளவிலும் உள்ள ஒரு தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளன என்று சொல்லலாம்.