டிச 27, வெள்ளிக் கிழமை, இன்று வதோதராவில் உள்ள கொட்டாம்பி மைதானத்தில் இந்தியா மற்றும் மே.இந்திய தீவுகள் மகளிர் அணியினர் மோதிய தொடரின் இறுதி ஒரு நாள் போட்டி நடைபெற்றது. இந்த தொடரை ஏற்கனவே இந்திய அணி 2-0 என்ற அளவில் கைப்பற்றி விட்டதால், இந்த போட்டி இந்திய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. ஆனால், அதே வேளையில் மே.இந்திய தீவுகள் அணி டி20 தொடரையும், ஒரு நாள் தொடரையும் இழந்து சோர்ந்து உள்ளதால், ஒரு நாள் தொடர் இறுதி போட்டியிலாவது ஆறுதல் வெற்றியை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இம்முறை டாஸ் வென்ற மே. இந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய சுற்றுப் பயணத்தில் டாஸ் வெல்வதில் மே.இந்திய தீவுகள் அணிக்கு அதிர்ஷ்டம் அதிகம் இருந்தது. பெரும்பாலான டாஸ்களை அவர்களே வென்றனர். டாஸ் வெல்வதில் போட்டி வைத்தால் 'டாஸ் ஆப் தி சீரிஸ்' அவர்களே கைப்பற்றுவார்கள். டாஸ் வெல்லும் போது வழக்கமாக பவுலிங் தேர்வு செய்யும் அவர்கள் இம்முறை முடிவை மாற்றியுள்ளனர்
முதலில் பேட்டிங்கை தொடங்கிய மே.இந்திய தீவுகள் அணி சார்பில் கேப்டன் ஹெய்லி, கியானா ஜோசப் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரை ரேணுகா சிங் வீச, முதல் பந்திலேயே ரிச்சா கோஷிடம் கேட்ச் கொடுத்து, டக் அவுட்காக வெளியேறினார் கியானா ஜோசப். தோழி தனியே வெளியேறுவது பிடிக்காமல், ஹெய்லி மாத்யூவும் டக் அவுட்டாகி வெளியேறினார்.
இந்த தொடரில் இருவரும் டக் அவுட் ஆவது இரண்டாவது முறை. அடுத்து கேம்பெல் களமிறங்கி நிலைத்து நின்று ஆடத் தொடங்கினார். அவருடன் ஹென்றி ஜோடி சேர்ந்து நல்ல ஒத்துழைப்பை வழங்கினார். கேம்பெல் 46 ரன்கள் எடுத்து தீப்தி பந்தில் பிரத்திகாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அரைசதம் அடித்த ஹென்றியை (61) தீப்தி போல்ட் ஆக்கி வெளியேற்றினார்.
அதன் பின்னர் களமிறங்கிய ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். 38.5 ஓவர்கள் முடிவில் மே.இந்திய தீவுகள் அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 162 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியின் சார்பாக தீப்தி 6/31 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரேணுகா 4/29 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்திய அணி தனது விரட்டுதலை தொடங்கியது. ஸ்மிருதியும் பிரத்திகா ராவலும் பேட்டிங்கில் களமிறங்கினர். தொடர்ச்சியாக ஒவ்வொரு போட்டியிலும் அரைசதம் அடித்த ஸ்மிருதி இம்முறை 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் அடித்த ஹர்லீன் தியோலும் இந்த ஆட்டத்தில் 1 ரன்னில் வெளியேறினார். கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் அதிரடியாக விளையாடி 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜெமிமா நிதானமாக விளையாடி 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தீப்தி ஷர்மா (39) பவுலிங்கில் கலக்கியது போல பேட்டிங்கிலும் சிறந்த பணியை தொடர்ந்தார். 28.2 வது ஓவரில் ரிச்சா கோஷ் ஒரு சிக்சர் அடித்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். தொடரின் இறுதி போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய அணி 3-0 என்ற கணக்கில் மே.இந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான தொடரை சிறப்பான முறையில் கைப்பற்றியது.
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்த தீப்தி ஷர்மா ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார். தொடரின் நாயகியாக ரேணுகா சிங் தேர்வு செய்யப்பட்டார். 2024 ஆம் ஆண்டு இறுதியை இந்திய மகளிர் அணி மகிழ்ச்சிகரமாக மாற்றியுள்ளது.