
இந்திய கிரிக்கெட் அணியில் மூத்த வீரர்கள் விடைபெறும் படலம் தொடருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 38 வயதான சென்னையை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென விடைபெற்றார். கடந்த வாரம் 38 வயதான இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த நிலையில் நட்சத்திர பேட்ஸ்மேனும், முன்னாள் கேப்டனுமான 36 வயது விராட்கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 6 மாதங்களில் 3 சீனியர் வீரர்கள் ஒதுங்கி இருக்கின்றனர்.
3 முக்கியமான வீரர்கள் இல்லாததால் இந்திய டெஸ்ட் அணி, இளம் வீரர்களை கொண்டு எப்படி சமாளிக்க போகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20 ஓவர் உலகக் கோப்பையுடன் இருவரும் (கோலி, ரோகித் சர்மா) சர்வதேச 20 ஓவர் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டனர்.
இதனால் இருவரும் இந்திய அணிக்காக இனி ஒருநாள் போட்டியில் மட்டுமே தொடர்ந்து ஆடுவார்கள். இரு ஜாம்பவான்களும் அடுத்தடுத்து ஓய்வை அறிவித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது இடத்தை நிரப்பப்வோது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சினிமாவிற்கு அடுத்தபடியாக கிரிக்கெட்டிற்கு தான் அதிகளவு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது என்றே சொல்லலாம். கிரிக்கெட்டில் தோனி, கோலி, தொண்டுல்கர், ரோகித் சர்மா போன்ற ஜாம்பவான்களின் ஆட்டத்தை பார்க்கவே தனி கூட்டம் கூடும். இந்நிலையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அடுத்தடுத்து ஓய்வை அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு மட்டுமல்ல கிரிக்கெட் வீரர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மூத்த வீரர்கள் ஒரு சேர ஒதுங்கி விட்டதால் டெஸ்ட் அணியில் இனி தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சென்னையைச் சேர்ந்த அஸ்வின் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், ‘டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு குறித்து ரோகித் சர்மாவும், விராட் கோலியும் ஒருசேர அடுத்தடுத்து ஏன் அறிவித்தார்கள் என்பது எனக்கு தெரியவில்லை.
இது இந்திய கிரிக்கெட்டுக்கு சோதனையான காலக்கட்டமாக இருக்கும். அதே சமயம் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் சகாப்தம் தொடங்கி விட்டது என்று சொல்ல வேண்டும். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்துக்கு கம்பீர் அழைத்து செல்லும் இந்திய அணி முற்றிலும் புதியதாக இருக்கும். அனேகமாக அதில் ஜஸ்பிரித் பும்ரா தான் சீனியர் வீரராக இருப்பார். டெஸ்ட் கேப்டன்ஷிப் வாய்ப்பில் பும்ராவும் இருக்கிறார். என்னை பொறுத்தவரை கேப்டன் பதவிக்கு பும்ரா தகுதியானவர். ஆனால் தேர்வாளர்கள் அவரது உடல்தகுதி அடிப்படையில் முடிவு எடுப்பார்கள்" என்று கூறினார்.
அஸ்வின், ரோகித் சர்மா, கோலி ஆகிய 3 பேரும் முறைப்படி களத்தில் ரசிகர்களின் முன் விடைபெறுவதற்கு தகுதியானவர்கள். ரசிகர்களும் இதைத்தான் எதிர்பார்ப்பார்கள். இந்த விஷயத்தில் கிரிக்கெட் வாரியம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்பிளே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.