
2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்), உலகின் முதன்மையான டி20 கிரிக்கெட் போட்டியாகும். இந்தியாவில் நடைபெறும் 10 அணிகள் இடையிலான உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல் 18-வது சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்கி மே 25-ம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த சீசனில் மொத்தம் 65 நாட்கள் 13 நகரங்களில் 74 ஆட்டங்கள் நடக்கிறது. இவற்றில் 12 நாள் இரட்டை ஆட்டங்களும் அடங்கும். மூன்று அணிகள் தங்கள் சொந்த மைதானங்களில் குறைந்தது இரண்டு போட்டிகளை விளையாடும்.
மார்ச் 22-ம்தேதி ஈடன் கார்டனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான மோதலுடன் இந்த சீசன் தொடங்கி மே 25-ம்தேதி அதே இடத்தில் முடிவடைகிறது.
2025 ஐபிஎல் தொடங்குவதற்கு எட்டு நாட்கள் உள்ள நிலையில், டெல்லி அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரும், அணியில் நீண்ட காலம் விளையாடிய வீரருமான அக்சர் படேலை கேப்டனாக அறிவித்த நிலையில், போட்டியில் பங்கேற்கும் கேப்டன்களுக்கான பட்டியல் முடிந்தது.
2019-ம் ஆண்டு ஆரம்பத்தில் டெல்லி அணியில் இணைந்த 31 வயதான அக்சர், அந்த அணிக்காக ஆறு சீசன்களில் 82 போட்டிகளில் விளையாடி, அதில் அவர் 62 விக்கெட்டுகளை வீழ்த்தி 967 ரன்கள் எடுத்துள்ளார். அக்சர் 150 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர், அதில் அவர் 1653 ரன்கள் எடுத்து 123 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் 2016-ம் ஆண்டில் பஞ்சாப் அணிக்காக ஐந்து பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.
டெல்லி அணியில் நீண்டகால கேப்டனாக இருந்த பந்த்தை அணி தக்கவைத்துக் கொள்ள மறுத்ததால், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மாறினார். ஏலத்தின் போது எல்எஸ்ஜி அவரை ரூ.27 கோடிக்கு வாங்கியது, பின்னர் அவரை கேப்டனாக நியமித்தது குறிப்பிடத்தக்கது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இந்த சீசனில் 5 அணிகள் புதிய கேப்டன்களுடன் களம் காணுகிறது. ஏலத்தில் முக்கியமான வீரர்கள் வேறு அணிக்கு தாவியதால் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இந்த தொடரில் பங்கேற்க உள்ள அனைத்து அணிகளும் தங்களது கேப்டன்களை அறிவித்து விட்டன. இந்நிலையில் 10 அணிகளின் கேப்டன்கள் குறித்த முழு விவரத்தை இங்கு காணலாம்..!
1. சென்னை சூப்பர் கிங்ஸ் - ருதுராஜ் கெய்க்வாட்
2. குஜராத் டைட்டன்ஸ் - சுப்மன் கில்
3. மும்பை இந்தியன்ஸ் - ஹர்திக் பாண்ட்யா
4. பஞ்சாப் கிங்ஸ் - ஸ்ரேயாஸ் ஐயர்
5. ராஜஸ்தான் ராயல்ஸ் - சஞ்சு சாம்சன்
6. சன்ரைசர்ஸ் ஐதராபாத் - பேட் கம்மின்ஸ்
7. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ரஜத் படிதார் (கடந்த சீசனில் ஃபாஃப் டு பிளெசிஸ் கேப்டனாக இருந்தார்)
8. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அஜிங்க்யா ரஹானே (கடந்த சீசனில் சிரேயாஸ் ஐயர் கேப்டனாக இருந்தார்)
9. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ரிஷப் பண்ட் ( கடந்த சீசனில் கே.எல். ராகுல் கேப்டனாக இருந்தார்)
10. டெல்லி கேப்பிடல்ஸ் - அக்சர் படேல் (கடந்த சீசனில் ரிஷப் பந்த் கேப்டனாக இருந்தார்)