18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 22-ந்தேதி தொடங்கி மே 25-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. கொல்கத்தா ஈடன்கார்டனில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
ஐ.பி.எல். போட்டி தொடங்க சில நாட்களே உள்ள நிலையில், இந்த சீசனில் பங்கேற்கும் வீரர்களுக்கும் அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
போட்டி நடைபெறும் மைதானத்தில் முதல் ஆட்டத்திற்கு முன்பு, 7 முறை மட்டுமே பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று பிசிசிஐ உத்தரவிட்டுள்ளதால் சிஎஸ்கே போன்ற அணிகள் தங்களது சொந்த மைதானத்திலேயே பயிற்சி செய்து வருகின்றனர்.
இதுமட்டுமல்ல, மேலும் பல அதிரடியான கட்டுப்பாடுகளை பிசிசிஐ விதித்திருப்பது வீரர்களிடையே கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக போட்டி முடிவடைந்த உடன் பரிசளிப்பு நிகழ்ச்சி நடக்கும். அதில் வீரர்கள் ஸ்லீவ்லெஸ் ஜெர்சி அணிந்து வரக்கூடாது என்று உத்தரவு போடப்பட்டுள்ளது. முதல் முறை இந்த தவறை செய்தால் எச்சரிக்கை விடப்படும் என்றும் மறுமுறை இதே தவறை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுமட்டுமின்றி வீரர்கள் அணி நிர்வாகிகள் விளம்பரப் பலகைக்கு முன் தங்களது நாற்காலிகளை போட்டு உட்கார கூடாது என்றும் அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி போட்டி நடக்கும் நாளில் வீரர்களின் குடும்பத்தினர் யாரும் இனி வீரர்களின் உடை மாற்றும் அறைக்கு போகக்கூடாது என்றும், போட்டி இல்லாத நாட்களில் கூட குடும்பங்கள் மற்றும் அணி உரிமையாளர்கள் கூட வீரர்களின் உடை மாற்றும் அறைக்கு போக அனுமதியில்லை என்று பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.
பயிற்சி நாட்களில் (போட்டிக்கு முந்தைய மற்றும் போட்டியின் போது), அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்கள் மட்டுமே டிரஸ்ஸிங் அறையிலும் விளையாட்டு மைதானத்திலும் அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும், கடந்த சீசனில் சில வீரர்கள் ஒரு ஆட்டத்திற்குப் பிறகு அணியின் பேருந்தில் பயணம் செய்யாமல், தனித்தனியாக சொந்த வாகனத்தில் பயணம் செய்தனர். இந்த சீசன் முதல் இது அனுமதிக்கப்படாது என்றும், வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் வேறு வாகனத்தில் பயணிக்கலாம் மற்றும் விருந்தோம்பல் பகுதியில் இருந்து அணி பயிற்சியைப் பார்க்கலாம் என்றும் பிசிசிஐ நிர்வாகி கூறினார்.
இது தொடர்பாக பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறுகையில், ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி படு மோசமாக விளையாடி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டது. இதனால் குடும்பத்தினர் வீரர்களுடன் செல்வதற்கு அணி நிர்வாகம் தடை விதித்ததையடுத்து இந்திய அணியின் ஆட்டத்தில் முன்னேற்றம் காணப்பட்டதால், இதனை ஐபிஎல் தொடரிலும் அமல்படுத்த உள்ளதாக கூறினார்.
மேலும் குடும்பத்தினர் வீரர்களுடன் செல்வதால் தங்களால் அணியை சிறந்த முறையில் நடத்த முடியவில்லை என சில அணியின் உயர் அதிகாரிகள் கருத்து தெரிவித்ததையடுத்து இந்த நடவடிக்கையை கொண்டு வந்ததாக கூறினார்.
பயிற்சி செய்யும் போது எல்லைக் கயிறுகளுக்கு வெளியே விளம்பர LED பலகையைத் தாக்க வேண்டாம் என்றும் பிசிசிஐ வீரர்களை எச்சரித்துள்ளது. ஹிட்டிங் நெட்களை வழங்கிய போதிலும், வீரர்கள் LED பலகைகளில் தொடர்ந்து அடிக்கிறார்கள். எனவே அணிகள் அதைக் கடைப்பிடிக்குமாறு பிசிசிஐ கூறியுள்ளது.