
இந்தியாவில் நடைபெறும் 10 அணிகள் இடையிலான உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.18-வது சீசன் மார்ச் 21-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மார்ச் 22-ம்தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் 2025 அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்ததுள்ளது. அதன்படி மார்ச் 22-ம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்கி, இறுதிப்போட்டி மே 25-ம் தேதி வரை நடக்கவுள்ளது.
போட்டியின் தொடக்க ஆட்டம் மார்ச் 22 ஆம் தேதி நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்று மற்றும் மெகா நிகழ்வான இறுதிப்போட்டி (மே 25-ம் தேதி) கொல்கத்தாவில் அரங்கேறுகிறது. ஐ.பி.எல்.இறுதிப்போட்டி கொல்கத்தாவில் நடப்பது 10 ஆண்டுக்கு பிறகு இதுவே முதல்முறையாகும்.
ஐபிஎல் 18வது சீசனில் மொத்தம் 65 நாட்கள் 13 நகரங்களில் 74 ஆட்டங்கள் நடக்கின்றன. இவற்றில் 12 நாள் இரட்டை ஆட்டங்களும் அடங்கும்.
இதில் பங்கேற்கும் 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் ஒரு பிரிவிலும், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் மற்றொரு பிரிவிலும் அங்கம் வகிக்கின்றன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும், எதிர்பிரிவில் 4 அணிகளுடன் தலா ஒரு முறையும், ஒரு அணியுடன் மட்டும் 2 முறையும் மோத வேண்டும். இவ்வாறு ஒரு அணி மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.
லீக் ஆட்டம் மார்ச் 22 முதல் மே 18 வரை நடைபெறும். பிளேஆஃப்கள் ஆட்டம் மே 20 முதல் மே 25 வரை நடைபெறவுள்ளது. அதாவது பிளே ஆஃப் போட்டிகளை பொறுத்தவரை மே 20-ம்தேதி குவாலிஃபயர் போட்டியும், மே 21-ம் தேதி எலிமினேட்டர் போட்டியும், மே 23-ம் தேதி குவாலிஃபயர் 2வது போட்டியும் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 7-ம் தேதி வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை ஒருமுறை மட்டுமே எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆர்சிபியுடன் இரண்டு முறை சென்னை (மார்ச் 28) மற்றும் பெங்களூரில் (மே 3) மோத உள்ளது. 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் சவாலை பரம எதிரியான மும்பை இந்தியன்சுடன் மார்ச் 23-ம் தேதி சென்னையிலும், ஏப்ரல் 20-ம் தேதி மும்பையிலும் இரண்டு முறை எதிர்கொள்ளும்.
10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக கடந்த நவம்பர் மாதம் 24 மற்றும் 25-ம் தேதிகளில் நடைபெற்றது.