
18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா கொல்கத்தாவில் 22-ம்தேதி கோலாகலமான கலைநிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று இரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் 3-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இந்த ஆட்டம் தொடங்கும் முன்னதாக இசையமைப்பாளர் அனிருத் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அவர் பாட்டு பாடி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
‘டாஸ்’ ஜெயித்த சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடத்தொடங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா முதல் ஓவரிலேயே கலீல் அகமது பந்துவீச்சில் டக் அவுட் ஆக, அதனை தொடர்ந்து வந்த ரிக்கல்டன் 13 ரன்களிலும், வில் ஜேக்ஸ் 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் அந்த அணி 4.4 ஓவரில் 36 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து பரிதவித்தது.
பின்னர் சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா இருவரும் இணைந்து நிதானமாகவும், நேர்த்தியாகவும் ஆடி அணியை சரிவில் இருந்து மீட்க முயற்சித்த நிலையில் சூர்யகுமார் யாதவ் 29 ரன்னில் நூர் அகமதுவின் சுழலில் விக்கெட்டை இழந்தார்.
அதனை தொடர்ந்து வந்த ராபின் மின்ஸ் 3 ரன்னிலும், திலக் வர்மா 31 ரன்னிலும், நமன் திர் 17 ரன்னிலும், மிட்செல் சான்ட்னெர் 11 ரன்னிலும், டிரென்ட் பவுல்ட் ஒரு ரன்னிலும் அவுட்டாகி வெளியேறிய நிலையில் இறுதியில் மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் சேர்த்தது.
சென்னை அணி தரப்பில் நூர் அகமது (4 விக்கெட்) மற்றும் கலீல் அகமது (3 விக்கெட்)இணைந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் முதுகெலும்பை உடைத்தனர். நாதன் எலிஸ், ஆர்.அஸ்வின் தலா ஒரு விக்கெட்டை சாய்த்தனர்.
இதனையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ராகுல் திரிபாதி 2 ரன்னில் அவுட்டாகி வெளியேற, இதைத்தொடர்ந்து கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திராவுடன் கைகோர்த்து அதிரடியாக ஆடத்தொடங்கி, 22 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
ஸ்கோர் 78 ஆக உயர்ந்த போது ருதுராஜ் கெய்க்வாட் 53 ரன்னில் (26 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) அவுட்டாகி வெளியேற, அவரை தொடர்ந்து அடுத்து வந்த ஷிவம் துபே 9 ரன்களிலும், தீபக் ஹூடா 3 ரன்களிலும், சாம் கர்ரன் 4 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.
இதைத்தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா, ரச்சின் ரவீந்திராவும் இணைந்து அணியை வெற்றியை நோக்கி நகர்த்தினர். முடிவில் 19.1 ஓவர்களில் சென்னை அணி 6 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் விக்னேஷ் புதூர் 3 விக்கெட்டும், தீபக் சாஹர், வில் ஜாக்ஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 4 விக்கெட்டை வீழ்த்திய சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது ஆட்டநாயகன் விருது பெற்றார்.
சூர்யகுமார் யாதவ் கிரீசை விட்டு சற்று முன்னால் இறங்கி பந்தை அடிக்க முயற்சித்த போது அவரை ஏமாற்றி சென்ற பந்தை விக்கெட் கீப்பர் தோனி பிடித்து மின்னல் வேகத்தில் ‘ஸ்டம்பிங்’ செய்து வியக்க வைத்தார். தோனியின் இந்த நிகழ்வை மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கைத்தட்டியும், விசில் அடித்தும் கொண்டாடினர்.
ஐ.பி.எல். தொடரில் சமபலம் வாய்ந்த மற்றும் பரம எதிரிகளாக பார்க்கப்படும் இவ்விரு அணிகளும் மோதிய ஆட்டம் என்பதால் ஆட்டம் தொடக்கம் முதல் கடைசி வரை ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருந்தது.