
2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்), உலகின் முதன்மையான டி20 கிரிக்கெட் போட்டியாகும். இந்தியாவில் நடைபெறும் 10 அணிகள் இடையிலான உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். 18-வது சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்கியது. இறுதிப்போட்டி கொல்கத்தாவில் மே 25-ம் தேதி வரை நடக்கவுள்ளது. ஐபிஎல் 18-வது சீசனில் மொத்தம் 65 நாட்கள் 13 நகரங்களில் 74 ஆட்டங்கள் நடக்கிறது.
இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. அதாவது 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் தலா ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிபட்டியலில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். ‘பிளே-ஆப்’ சுற்றை எட்டுவதற்கு குறைந்தது 7-8 வெற்றி தேவையாகும்.
5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணி நடப்பு சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறது. உள்ளூரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி வெற்றிகரமாக தொடங்கிய சென்னை அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் (பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப் அணிகளிடம்) தோல்வியை சந்தித்துள்ளது. இதில் சொந்த ஊரில் அடைந்த 3 தோல்விகளும் அடங்கும்.
சென்னை அணி இதுவரை 17 வீரர்களை பயன்படுத்தியும் அவர்களால் இன்னும் சரியான அணி கலவையை அடையாளம் காண முடியவில்லை. பேட்டிங், பந்து வீச்சு மட்டுமின்றி பீல்டிங்கும் மோசமாக இருக்கிறது. கடந்த 6 ஆட்டங்களில் 12 கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்டுள்ளனர். அது அந்த அணிக்கு பெருத்த பின்னடைவாக அமைந்துள்ளது. எனவே பீல்டிங்கில் வெகுவாக முன்னேற்றம் காண வேண்டியது அவசியம் என பல்வேறு முன்னாள் வீரர்களும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பேட்டிங்கில் ரச்சின் ரவீந்திரா, டிவான் கான்வே, ஷிவம் துபே நம்பிக்கை அளித்தாலும், தொடக்கம் முதலே வலுவான ஷாட்கள் மூலம் ரன் வேகத்தை அதிகரிக்கும் துடிப்பான பேட்ஸ்மேன்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும். மிடில் வரிசையும் பலவீனமாக தெரிகிறது. தோனி களத்தில் நின்றும் இலக்கை விரட்டிப்பிடிக்க முடியவில்லை. ஒவ்வொரு அணியிலும் உள்ள இளம் வீரர்கள் அதிரடி காட்டி வரும் நிலையில் சிஎஸ்கே அணியில் உள்ள இளம் வீரர்கள் பெஞ்சை தேய்த்து வருவதாக பலரும் குறை கூறுகின்றனர்.
இந்நிலையில் 11-ம்தேதி சென்னை அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் தோனியின் கேப்டன்ஷிப்பில் சென்னை அணி எழுச்சி பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது.
மோசமான ஆட்டம், கவனக்குறைவான பீல்டிங் என அனைத்திலும் சொதப்பி வரும் சிஎஸ்கே அணியை முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பல்வேறு சாதனைகளை புரிந்த சிஎஸ்கே அணி இந்த ஐபிஎல் சீசனில் தொடர் தோல்விகளால் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்கு (அதாவது 10-வது இடம்) தள்ளப்பட்டுள்ளது. எப்போதுமே புள்ளி பட்டியலில் டாப் இடத்தில் இருக்கும் சிஎஸ்கே அணி இம்முறை பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முதல் இடத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், 2-ம் இடத்தில் குஜராத் டைட்டன்ஸ், 3-ம் இடத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளும் உள்ளன.
இன்று சிஎஸ்கே அணி லக்னோ அணியை எதிர்த்து அதன் சொந்த மண்ணில் விளையாடுகிறது. தோனியின் கேப்டன்ஷிப்பில் இந்த போட்டியிலாவது சிஎஸ்கே வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.