
இந்தியாவில் நடைபெறும் 10 அணிகள் இடையிலான உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். 18-வது சீசன் மார்ச் 21-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மார்ச் 22-ம்தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளுக்கும் கேப்டன் யார் என்று அறிந்து கொள்ளலாம்.
* சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டுள்ளார். ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், கடந்த சீசனில் பிளேஆஃப் இடங்களுக்கு வெளியே முடித்த போதிலும், ருதுராஜ் கெய்க்வாடை தலைமையில் தக்கவைத்துள்ளது.
* குஜராத் டைட்டன்ஸ் வரவிருக்கும் 2025 ஐபிஎல் பதிப்பிற்காக இளம் இந்திய ஆல் ரவுண்டரான ஷுப்மான் கில்லை கேப்டனாக தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வரலாற்றில் மிக இளம் வயது கேப்டன் ஷுப்மன் கில் ஆவார். 2024 சீசனுக்கான குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டபோது அவருக்கு 24 வயது.
* கடந்த சீசனில் ஆதரவாளர்களிடையே அமைதியின்மை இருந்தபோதிலும், ஹர்திக் பாண்டியா தொடர்ந்து அணியை வழிநடத்துவார் என்பதை மும்பை இந்தியன்ஸ் உறுதிப்படுத்தியது. ஐந்து முறை சாம்பியன்கள், ஆல்-ரவுண்டர் மீது நம்பிக்கை வைத்து, புதிய சீசனுக்கான பாத்திரத்தில் அவரைத் தக்க வைத்துக் கொண்டனர்.
* சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த சீசனில் இரண்டாவது இடத்தைப் பிடித்ததைத் தொடர்ந்து, இந்தாண்டும் ஐபிஎல் தொடரிலும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸை கேப்டனாகத் தக்க வைத்துக் கொண்டது.
* கடந்த 2022 முதல் 2024-ம் ஆண்டு வரை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த பாப் டுபிளிஸ்சிஸ் கடந்தாண்டு இறுதியில் கழற்றி விடப்பட்டு ரஜத் படிதார் அறிவிக்கப்பட்டுள்ளார். பெங்களூரு அணியின் 8-வது கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ரஜத் படிதார், ஐ.பி.எல். போட்டியில் கேப்டன் பொறுப்பை ஏற்பது இதுவே முதல்முறையாகும். கேப்டன் மாற்றம் அந்த அணியின் கோப்பை ஏக்கத்தை தணிக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
* 2025 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவால் ரூ. 27 கோடிக்கு எடுக்கப்பட்டார்.
* 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இந்தியன் பிரீமியர் லீக் உரிமையாளரான பஞ்சாப் கிங்ஸ் ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக அறிவித்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் ரூ.26.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
* ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டி20 போட்டியின்போது சஞ்சு சாம்சனுக்கு காயம் ஏற்பட்டு விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அதிலிருந்து முழுமையாக குணமடைய ஒரு மாத காலம் ஆகும் என கூறப்படுகிறது. ஒருவேளை சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடருக்குள் குணமடையவில்லை என்றால் அது ராஜஸ்தான் அணிக்கு பெரிய பிரச்னையை கொண்டுவரும்.
* டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா கிங்ட் ரைடர்ஸ் ஆகிய இரண்டு அணிகள் மட்டுமே 2025க்கான ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள் குறித்த அறிவிப்புகளை இன்னும் வெளியிடவில்லை.