ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் யார் அடுத்த கேப்டன் என்ற எதிர்பார்ப்புக்கு ஒரு விடை வந்துவிட்டது. ஆம்! பெங்களூரு அணியின் கேப்டன் அறிவிக்கப்பட்டாகிவிட்டது.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் பல எதிர்பார்ப்புகளுக்கும் ட்விஸ்ட்களுக்கும் நடுவே விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மூன்று கேப்டன்கள் சாதாரண வீரர்களாக அணியில் விளையாடினர். விராட் கோலி, தோனி மற்றும் ரோஹித் ஷர்மா. தோனி தனது பதவியை ருதுராஜிடம் ஒப்படைத்தார்.
ஆனால், மும்பை அணி நிர்வாகமே ரோஹித் கேப்டன் பதவியை ஹார்திக் பாண்டியாவிடம் கொடுத்தது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்தன. ஹார்திக் பாண்டியா மிகவும் வருத்தப்பட்டார். பின் உலகக்கோப்பையில் இந்தியா வெற்றிபெறுவதில் பாண்டியா சிறப்பான பங்களிப்பை கொடுத்ததன் மூலம் மீண்டும் ரசிகர்கள் மனதைக் கவர்ந்தார்.
இப்படியான நிலையில், பெங்களூரு அணியின் கேப்டனாக செயல்பட்ட டுபிளசிஸ், இந்த ஆண்டு டெல்லி அணிக்கு சென்று விட்டார். இதனால் புதிய கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு ஆர் சி பி ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
இந்தநிலையில்தான், பார்டர் கவாஸ்கர் தொடரில் பும்ராவுக்கு காயம் ஏற்பட்ட போது விராட் கோலி கேப்டனாக களத்தில் செயல்பட்டார். இதனால் ரசிகர்கள் கோலி கேப்டனாக செயல்பட வாய்ப்புகள் இருக்கிறது என்று வீண் ஆசையை வளர்த்துக்கொண்டனர்.
இப்படியான நிலையில், யாரும் எதிர்பாரா விதமாக ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதாரை அறிவித்திருக்கிறது.
இதனால் மீண்டும் விராட் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
ரஜத் பட்டிதார் விஜய் அசாரே போட்டியிலும் கேப்டனாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது. இதனால் கேப்டன் பணி என்பது ரஜத் பட்டிதாருக்கு புதியது கிடையாது. இந்த வாய்ப்பு வழங்கப்பட்டதற்கு விராட் கோலி வரவேற்பு தெரிவித்திருக்கிறார். இது குறித்து ரசிகர்களிடம் கோரிக்கை ஒன்றையும் விராட் கோலி வைத்து இருக்கிறார்.
அதாவது கேப்டன் ரஜத்திற்கு ரசிகர்கள் முழு ஆதரவையும் கொடுக்க வேண்டும். இந்த நிலைமைக்கு வர அவர் கடுமையாக உழைத்திருக்கிறார் எனவே ரஜத் பட்டிதாரையும் ஆர்சிபி யையும் ஒரு குடும்பம் போல் நாம் ஆதரவு அளிக்க வேண்டும்.” என்று பேசியிருக்கிறார்.