‘தோனி கேப்டன்ஷிப்’: லக்னோவை வீழ்த்தி கம்பேக் கொடுத்த சென்னை அணி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தோனி கேப்டன்ஷிப்பில் அபாரமாக விளையாடிய சென்னை அணி லக்னோவை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது.
LSG vs CSK
LSG vs CSK
Published on

10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 5 முறை சாம்பியனான சென்னை அணி நடப்பு சீசனில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. முதல் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்திய சென்னை அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது. சென்னை அணி இதுவரை 18 வீரர்களை பயன்படுத்தி பார்த்தும் அவர்களால் இன்னும் சரியான கலவையை கண்டறிய முடியவில்லை. பேட்டிங், பந்து வீச்சு மட்டுமின்றி பீல்டிங்கும் மெச்சும் வகையில் இல்லை. சென்னை அணி ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் தங்களது எஞ்சி 8 ஆட்டங்களில் 7-ல் வெற்றி பெற வேண்டியது அவசியமானதாகும்.

அதேசமயம் லக்னோ அணி இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி (ஐதராபாத், மும்பை, கொல்கத்தா, குஜராத் அணிகளுக்கு எதிராக), 2 தோல்வி (டெல்லி, பஞ்சாப் அணிகளிடம்) கண்டுள்ளது.

இந்நிலையில் லக்னோவில் நேற்று இரவு (திங்கட்கிழமை) நடைபெற்ற 30-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து உள்ளூர் ரசிகர்கள் முன் மார்க்ரமும், மிட்செல் மார்சும் லக்னோவின் பேட்டிங்கை தொடங்கினர்.

கலீல் அகமது வீசிய முதல் ஓவரிலேயே மார்க்ரம் 6 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதனை தொடர்ந்த வந்த நிகோலஸ் பூரனை பூரன்(8) வந்த வேகத்திலேயே சென்னை பவுலர்கள் காலி செய்தனர்.

அடுத்து வந்த மிட்செல் மார்சுடன், கேப்டன் ரிஷப் பண்ட் இணைந்து அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டாலும், ஸ்கோர் 73-ஐ எட்டிய போது மார்ஷ் (30 ரன்னில் கிளீன் போல்டு ஆகி வெளியேற அடுத்து வந்த ஆயுஷ் பதோனி தனது பங்குக்கு 22 ரன் எடுத்தார்.

நடப்பு தொடரில் முதல்முறையாக அரைசதம் அடித்த ரிஷப் பண்ட் (63 ரன்) கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷர்துல் தாக்குர் 4 ரன்னில் கடைசி பந்தில் கேட்ச் ஆனார். முன்னதாக அப்துல் சமத் 20 ரன்கள் சேர்த்த நிலையில், ரன்அவுட் ஆகி வெளியேறினார்.

20 ஓவர் முடிவில் லக்னோ அணி 7 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் 57 ரன்கள் திரட்டினர். சென்னை தரப்பில் ஜடேஜா, பதிரானா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது விக்கெட் ஏதும் வீழ்த்தாவிட்டாலும் 4 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சிக்கனத்தை காட்டினார்.

இதையும் படியுங்கள்:
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லியிடம் பணிந்த சிஎஸ்கே: தொடர்ந்து 3-வது தோல்வி
LSG vs CSK

பின்னர் 167 ரன் இலக்கை நோக்கி சென்னை அணியில் ரச்சின் ரவீந்திராவுடன், புதிய தொடக்க ஆட்டக்காராக ஷேக் ரஷீத் களம் இறங்கினார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 52 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் தந்த நிலையில் ஷேக் ரஷீத் 27 ரன்களிலும், ரச்சின் ரவீந்திரா 37 ரன்களிலும், அதனை தொடர்ந்து வந்த ராகுல் திரிபாதி 9 ரன்னிலும், ரவீந்திர ஜடேஜா 7 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

மிடில் வரிசை தள்ளாடியதால், சென்னை அணிக்கு நெருக்கடி அதிகமான சூழலில் 6-வது விக்கெட்டுக்கு இம்பேக்ட் வீரர் ஷிவம் துபேவுடன் கேப்டன் டோனி கூட்டணி அமைத்தார். ஆவேஷ்கான், ஷர்துல் தாக்குரின் ஓவர்களில் டோனி சில பவுண்டரிகளை ஓடவிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தினார். துபேவும் ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு விரட்ட தவறவில்லை. கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 24 ரன் தேவைப்பட்ட போது, 19-வது ஓவரில் 19 ரன்கள் எடுத்தனர். இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ரன் மட்டுமே தேவையாக இருந்தது.

இறுதி ஓவரில் 3-வது பந்தில் ஷிவம் துபே பவுண்டரி விளாசி ஆட்டத்தை முடித்து வைத்தார். சென்னை அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷிவம் துபே 43 ரன்களுடனும் (37 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), டோனி 26 ரன்களுடனும் (11 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர்.

சென்னை அணிக்கு இது 2-வது வெற்றியாகும். தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோற்றிருந்த சென்னை அணி ஒரு வழியாக வெற்றிப்பாதைக்கு திரும்பியிருக்கிறது. லக்னோவுக்கு இது 3-வது தோல்வியாகும்.

இதையும் படியுங்கள்:
புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட சிஎஸ்கே - எழுச்சி பெறுமா?
LSG vs CSK

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com