பார்டர் கவாஸ்கர் தொடரின் தோல்வி காரணமாக பிசிசிஐ இந்திய வீரர்களுக்கு கடும் கட்டுபாடுகளை விதித்துள்ளது. இதுகுறித்தான முழு விவரத்தையும் பார்ப்போம்.
இந்திய அணி நியூசிலாந்தை எதிர்த்து விளையாடிய டெஸ்ட் தொடரில் தனது சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தது. ஆகையால் அடுத்துவரும் ஆஸ்திரேலியா உடனான தொடரிலாவது இந்திய அணி கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்று பிசிசிஐ கூறியது. ஆனால், ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இதனால் கேப்டன் ரோஹித் சர்மாவும் பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் பல விமர்சனங்களுக்கு ஆளாகினர். அதேபோல், பிசிசிஐ இருவருடனும் கடந்த சில நாட்களாக கலந்தாலோசித்து வந்தது.
இதனால், சாம்பியன்ஸ் ட்ராபிக்கான இந்திய அணி வீரர்களை கூட இன்னும் பிசிசிஐ தேர்ந்தெடுக்கவில்லை.
இப்படியான நிலையில், இந்திய அணி வீரர்களுக்கு சில கட்டுபாடுகளை பிசிசிஐ விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய அணியில் ஆடும் வீரர்கள் அத்தனை பேரும் உள்ளூர் தொடர்களிலும் ஆடியே ஆக வேண்டும். சர்வதேச போட்டிகள் அதிகம் இல்லாத நேரங்களில் உள்ளூர் போட்டிகளில் ஆடும் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
அனைத்து வீரர்களும் வீரர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் அணியின் பேருந்தில்தான் பயணிக்க வேண்டும். அதைவிடுத்து குடும்பத்துடன் தனியாக பயணிப்பதை தவிர்க்க வேண்டும். வீரர்கள் ஒன்றாக பயணிப்பதன் மூலம் அவர்களுக்குள் குழு மனப்பான்மையை வளர்க்க முடியும். ஒருவேளை யாராவது தனியாக பயணிக்க விரும்பினால் அணியின் பயிற்சியாளரிடமும் தேர்வுக்குழுத் தலைவரிடமும் முன் அனுமதி பெற வேண்டும்.
அதேபோல் 45 நாட்களுக்கு அல்லது அதற்கும் மேல் வெளிநாடு சென்று இந்திய வீரர்கள் விளையாடும்போது மட்டும் இரண்டு வாரங்களுக்கு குடும்பத்தினரை அழைத்துக்கொள்ளலாம். அதற்கு குறைவான நாட்கள் தங்கும்போது ஒரு வாரம் மட்டுமே வீரர்களின் குடும்பம் அவர்களுடன் தங்க வேண்டும்.
போட்டி பயணங்களின்போது குறிப்பிட்ட லக்கேஜ் மட்டும்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கு மேல் எடுத்துக்கொண்டால், அந்த செலவுகளை வீரர்களே எடுத்துக்கொள்ள வேண்டும். வீரர்கள் தங்களுக்கென தனியாக மேக்கப் ஆர்ட்டிஸ்ட், சமையல் கலைஞர், உதவியாளர் ஆகியோரை அழைத்து வருவதையும் தவிர்க்க வேண்டும்.'
'போட்டிகளின் போது தனிப்பட்ட முறையில் விளம்பரங்களில் நடிக்க செல்வதை தவிர்க்க வேண்டும்.'
பிசிசிஐ சம்பந்தப்பட்ட விளம்பரங்களில் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும்.
போட்டிகளுக்கு முன் நடத்தப்படும் பயிற்சி முகாமில் அனைத்து வீரர்களும் ஒரே நேரத்தில்தான் விடைபெற வேண்டும். சீக்கிரம் யாரும் செல்ல கூடாது.
விரைவில் தொடர் முடிந்தவுடன் ஒரு வீரர் மட்டும் கிளம்பக்கூடாது. அணியோடு இணைந்து திட்டமிட்ட நாட்கள் முடிந்த பின்னரே அனைவரும் ஒன்றாக செல்ல வேண்டும்.
வீரர்கள் தங்களின் உடைமைகளை பெங்களூருவில் உள்ள 'Center of Excellence' க்கு அனுப்பும்போது அணி நிர்வாகத்துடன் சரியாக பேசி ஒத்துழைத்து அனுப்ப வேண்டும். தனிப்பட்ட முறையில் பொருட்களை அனுப்பி அதற்கு செலவு ஏற்படும்பட்சத்தில் வீரர்களே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் போன்ற கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.