
ஆண்டு முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் நடந்தாலும் ஐ.பி.எல். T20 ஓவர் போட்டிக்கு உள்ள வரவேற்பு தனி தான். இதோ 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நாளை (சனிக்கிழமை) கொல்கத்தா ஈடன்கார்டனில் கோலாகலமாக தொடங்கப்போகிறது. உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல் 18-வது சீசன் நாளை (மார்ச் 22-ம்தேதி) தொடங்கி மே 25-ம் தேதி வரை நடக்கவுள்ளது. முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுடன் கோதாவில் குதிக்கிறது. மே 25-ந்தேதி வரை இனி கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.
வழக்கம் போல் 10 அணிகள் களம் காணுகின்றன. ஒவ்வொரு அணி நிர்வாகமும் தேவையில்லாத வீரர்களை கழற்றி விட்டும், வியூகத்துக்கு ஏற்ப புதிய வீரர்களை ஏலத்தில் கண்டெடுத்தும் பட்டை தீட்டியுள்ளன. பயிற்சியாளர், கேப்டன்கள் மாற்றமும் கணிசமாக நடந்துள்ளது. ஆச்சரியம் அளிக்கும் வகையில் இந்த முறை 5 அணிகளின் கேப்டன்கள் மாறியுள்ளனர். எல்லா அணிகளுமே பார்க்க வலுவாக தோன்றுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை இப்போதே கணிப்பது இயலாத காரியம்.
ஐபிஎல் தொடக்க விழாவை அனைத்து சீசன்களிலும் பிரம்மாண்டமாக நடத்துவது வழக்கம். அதில் பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சிகளை நடத்துவார்கள். கடந்த 17-வது சீசனின் (2024) தொடக்க விழாவில் டைகர் ஷெராப், பின்னணிப் பாடகர் சோனு நிகம், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
அந்த வகையில் இந்த ஆண்டும், பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகளுடன் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. இதில் பங்கேற்கும் பிரபலங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
கோலாகலமாக நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில், பிரபல பாலிவுட் ஜோடியான ஷர்தா கபூர் மற்றும் வருண் தவான் ஆகியோர் இணைந்து நடனமாட உள்ளனர். அதுமட்டுமின்றி இந்த கலை நிகழ்ச்சியில் பிரபல பாப் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், பஞ்சாப் பாப் பாடகர் கரண் அஜ்லர், பிரபல பின்னணி பாடகர் ஆர்ஜித் சிங் தனது இனிமையான பாடல்களால் பார்வையாளர்களை மகிழ்விக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் தவிர பல்வேறு சினிமா பிரபலங்கள் ஐபிஎல் தொடக்க விழா கலை நிகழ்ச்சிகளில் ஆட்டம் போட்டு ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர்.
முந்தைய சீசன்களைப் போலல்லாமல், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஐபிஎல் போட்டிகளை நடத்தும் 13 இடங்களிலும் தொடக்க விழாக்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, வருகிற 22-ம் தேதி கொல்கத்தாவில் நடக்கும் தொடக்க விழா கொண்டாட்டத்தில் இந்தி நடிகை திஷா படானி மற்றும் பாடகி ஷ்ரேயா கோஷால் பங்கேற்க உள்ளனர். மற்ற இடங்களில் கலந்துகொள்ளும் பிரபலங்களின் தேர்வு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சல்மான் கான், வருண் தவான், கத்ரீனா கைஃப், திரிப்தி திம்ரி, அனன்யா பாண்டே, மாதுரி தீட்சித், ஜான்வி கபூர் போன்ற பாலிவுட் பிரபலங்கள் கலைநிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் முறையாக இவ்வளவு பெரிய அளவில் நடப்பதால், சில தளவாட சிக்கல்களும் உள்ளன. எனவே, போட்டிகள் தடையின்றி சீராக நடத்துவதற்காக பிசிசிஐ மற்றும் மாநில சங்கங்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
கடந்த ஐபிஎல் சீசனில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.