
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொண்டது.
‘டாஸ்’ ஜெயித்த கொல்கத்தா கேப்டன் ரஹானே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே சொதப்பலாக அமைந்தது. டிவான் கான்வே 12 ரன்னிலும், ரச்சின் ரவீந்திரா 4 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
இதைத் தொடர்ந்து அடுத்து களம் இறங்கிய விஜய் சங்கரும், ராகுல் திரிபாதியும் அணியை சரிவில் இருந்து மீட்க கடுமையாக போராடியும் கொல்கத்தாவின் பந்து வீச்சை அவர்களால் அடித்து ஆட முடியவில்லை.
‘பவர்-பிளே’ யான முதல் 6 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 31 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விஜய் சங்கர் 29 ரன்னிலும், ராகுல் திரிபாதி 16 ரன்னிலும் ‘இம்பேக்ட்’ பேட்ஸ்மேனாக தீபக் ஹூடா ரன் கணக்கை தொடங்கும் முன்பே நடையை கட்டினார். அதனை தொடர்ந்து வந்த அஸ்வின் 1 ரன்னிலும், ரவீந்திர ஜடேஜாவும் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினர்.
72 ரன்னுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி பரிதவித்த நிலையில் கேப்டன் தோனி வந்தாலும் அவராலும் ஒன்றும் செய்ய முடியாமல் எல்.பி.டபிள்யூ. ஆகி வெளியேறிய நிலையில் ஷிவம் துபே மட்டும் போராடி ஒரு வழியாக ஸ்கோர் 100-ஐ கடக்க வைத்தார். இந்நிலையில் 20 ஓவர் முடிவில் சென்னை அணி 9 விக்கெட்டுக்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது.
கொல்கத்தா தரப்பில் சுனில் நரின் 3 விக்கெட்டும், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 104 ரன் இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணியில் குயின்டான் டி காக்கும், சுனில் நரினும் சென்னை அணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்கி முதல் 4 ஓவருக்குள் 46 ரன்கள் திரட்டி வெற்றிவாய்ப்பை எளிதாக்கினர்.
டி காக் 23 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து சுனில் நரின் 44 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஆனாலும் அடுத்து களம் இறங்கிய கேப்டன் ரஹானேவும் (20 ரன், நாட்-அவுட்), ரிங்கு சிங்கும் (15 ரன், நாட்-அவுட்) இணைந்து வெற்றிக்கனியை பறித்தனர். கொல்கத்தா அணி 10.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தனது தொடக்க ஆட்டத்தில் வெற்றி கண்டிருந்த சென்னை அணி அதன் பிறகு தொடர்ச்சியாக சந்தித்த 5-வது தோல்வி இதுவாகும். கொல்கத்தாவுக்கு 3-வது வெற்றியாகும்.
தோல்வி குறித்து சென்னை அணியின் கேப்டன் தோனி கூறுகையில் "இந்த தொடரில் சில ஆட்டங்கள் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. எங்கு தவறு செய்கிறோம் என்பதை ஆழமாக பார்க்க வேண்டும். இங்கு நிறைய சவால்கள் உள்ளன. அதனை சமாளித்து தான் ஆக வேண்டும். நாங்கள் போதுமான ரன் எடுக்கவில்லை. சரியான பார்ட்னர்ஷிப் அமையாதது பின்னடைவை ஏற்படுத்தியது. ஆடுகளத்தில் பந்து சற்று நின்று வந்தது. அதை ஒரு காரணமாக சொல்ல முடியாது. ஏனெனில் கொல்கத்தா பேட்டிங்கின் போதும் ஆடுகளத்தன்மை அப்படி தான் இருந்தது" என்றார்.