

19-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ, பி என பிரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பிரிவிலும் உள்ள தலா 5 அணிகள் உள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் (ஏ,பி) உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், எதிர்பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
கடந்த சீசனில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட சென்னை அணி இந்த முறை அணியில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது.
11 ஆண்டுகளாக ராஜஸ்தானுக்கு ஆடிய சாம்சனும், 12 ஆண்டுகளாக சென்னை அணிக்காக விளையாடிய ஜடோஜாவும் இப்போது மாற்று அணிக்காக கோதாவில் குதிப்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இவ்விரு அணிகளும் இதுவரை 31 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில் 16-ல் சென்னையும், 15-ல் ராஜஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.
போட்டியின் மூன்றாவது நாளான இன்று அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடக்கும் 3-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் பலப்பரீட்சையில் இறங்கின.
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை (CSK) அணியின் சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ராஜஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்திலேயே ஆதிக்கம் செலுத்தியதால் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சஞ்சு சாம்சன், கெய்க்வாட் இருவரும் தலா 6 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அதனை தொடர்ந்து வந்த ஆயுஷ் மாத்ரே முதல் பந்திலேயே டக் அவுட்டாக, மேத்யூ ஷார்ட் 2 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சென்னை சூப்பர் கிங்ஸ் தடுமாறியது.
விக்கெட்டுகள் மளமளவென சரிந்ததால் சர்பராஸ் கானை இம்பேக்ட் சப் வீரராக களம் இறக்கியது. இவர் 12 பந்தில் 17 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்தில் ஆட்டமிழக்க, அதனை தொடர்ந்து கார்த்திக் சர்மா 18 ரன்கள் எடுத்து பிரிஜேஷ் சர்மா பந்தில் வெளியேறினார். மளமளவென விக்கெட்டுகள் சரிந்த நிலையில் சென்னை அணி 100 ரன்களை தாண்டுமா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில், ஜேமி ஓவர்டன் பொறுப்புடன் தாக்குப்பிடித்து விளையாடியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் 17.1 ஓவரில் 100 ரன்களை கடக்க முடிந்தது. கடைசி ஓவரில் ஒரு சிக்ஸ் விளாசிய ஓவர்டன் 4-வது பந்தில் 2 ரன்கள் எடுக்க முயற்சித்த போது ரன்அவுட் (36 பந்தில் 43 ரன்கள்)ஆனார். கடைசியில் ராஜஸ்தான் அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய சென்னை அணி 19.4 ஓவர்களில் 127 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
ராஜஸ்தான் தரப்பில் ஓவர்டன், பர்கர், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதனை தொடர்ந்து 128 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி, ஜெய்ஸ்வால் களம் இறங்கினர்.
ஜெய்ஸ்வால் நிதானமாக விளையாட, முதல் ஓவரில் சூர்யவன்ஷி தான் சந்தித்த முதல் பந்திலேயே கேட்ச் கொடுக்க, இதை கார்த்திக் சர்மா பிடிக்க தவறியதால் அந்த பந்து பவுண்டரிக்கு சென்றது.
அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யவன்ஷி 4 பவுண்டரி, 5 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இரு துவக்க வீரர்களும் அதிரடியாக ஆடி, ஐந்தாவது ஓவரின் முடிவிலேயே 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை எட்டினர். இளம் வீரர் சூர்யவன்ஷி, வரலாற்றில் மூன்றாவது அதிவேகமான அரைசதத்தைப் பதிவு செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். வெறும் 15 பந்துகளில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.
தொடர்ந்து விளையாடிய அவர் 15 பந்தில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த துருவ் ஜுரெல் 18 ரன்னிலும், ரியான் பராக் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் ராஜஸ்தான் 12.1 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.
இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மோசமான ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.