
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) நடத்தும் தொடர்கள் உலகளவில் பிரபலமானவை. தற்போது இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஐபிஎல் தொடர் ஐசிசி தொடர்களுக்கு இணையாக பிரபலமடைந்துள்ளது. இளம் வீரர்களின் திறமையை அங்கீகரிக்கும் மேடையாக ஐபிஎல் தொடர் பார்க்கப்பட்டாலும், மறுபுறம் பணமழை கொட்டும் கிரிக்கெட் தொடர் எனவும் விமர்சிக்கப்படுகிறது.
இதுவரை 17 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ள நிலையில், தற்பேது 18வது சீசன் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. 18 சீசன்களையும் சேர்த்து அதிக முறை பிளே ஆஃப்க்கு சென்ற டாப் 3 அணிகளின் விவரங்களை இப்போது பார்ப்போம்.
ஐபிஎல் ஒரு நீண்ட தொடர் என்பதால், தொடக்கத்தில் தோல்வியை சந்திக்கும் அணிகள் கூட அதிலிருந்து மீண்டு வந்து தொடர் வெற்றிகளைப் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. ஆகையால் எந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பதில் கடைசி வரை பரபரப்பாகவே இருக்கும். அதிலும் 3 மற்றும் 4வது இடத்தைப் பிடிக்கப் போராடும் அணிகள் தான் அதிகம்.
பொதுவாக எல்லா சீசனிலும் ஓரிரு அணிகள் மட்டும் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடும். இந்த அணிகளுக்கான பிளே ஆஃப் வாய்ப்பு மிக எளிதாகவே கிடைத்து விடும். லீக் சுற்றுகள் முடியும் தருவாயில் 3 மற்றும் 4வது இடத்திற்கு தான் கடுமையான போட்டி நிலவும். இம்மாதிரியான கடினமான சூழலில் சிறப்பாக செயல்படும் அணிகள் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும். அவ்வகையில் சென்னை மற்றும் மும்பை அணிகள் தான் கடினமான சூழலில் சிறப்பாக செயல்பட்டு பிளே ஆஃப் சுற்றுக்கு அதிகமுறை சென்றுள்ளன. இதுமட்டுமின்றி இரு அணிகளும் தலா 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளன.
1. சென்னை சூப்பர் கிங்ஸ்: 12 முறை
ஐபிஎல் தொடரின் 18 சீசன்களில் சென்னை அணி 12 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று, 5 முறை கோப்பையைக் கைப்பற்றியுள்ளன. சென்னை அணி மொத்தம் 16 சீசன்களில் மட்டுமே பங்கேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. சூதாட்ட சர்ச்சையில் சிக்கியதால் 2016 மற்றும் 2107 ஆகிய 2 ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் பங்கேற்காமல் இருந்தது. 2008 முதல் 2015 வரை தொடர்ந்து 8 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு சென்ற ஒரே அணி சென்னை மட்டும் தான்.
2. மும்பை இந்தியன்ஸ் - 11 முறை
அடுத்ததாக மும்பை இந்தியன்ஸ் அணி 11 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 5 முறை கோப்பையைக் கைப்பற்றிய மும்பை, இம்முறையும் கோப்பையை வெல்ல முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்: 10 முறை
திறமையான வீரர்களைக் கொண்டிருந்தாலும் 18 சீசன்களாக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் பெங்களூர் அணி தான் 3வது இடத்தில் உள்ளது. 10 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள பெங்களூர் இம்முறை எப்படியாவது கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற வேட்கையுடன் களத்தில் இறங்கியுள்ளது. 18 சீசன்களாக பெங்களூர் அணிக்காக மட்டுமே விளையாடி வரும் விராட் கோலிக்கு நடப்பு ஐபிஎல் தொடரில் கோப்பைக் கனவு நனவாகுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.