இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற்று வரும் போட்டியில் விரைவாக ஆட்டமிழந்த ரோஹித் ஷர்மா குறித்து ஹைடன் பேசியிருக்கிறார்.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்தது. அதுவும் ஐந்து நாட்களுக்கு குறைவான நாட்களிலேயே ஆட்டத்தை முடித்தது. இரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பானில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் தொடங்கியது.
இதன் முதல் நாள் ஆட்டத்தின்போது மழை குறுக்கிட்டதால் பாதியிலேயே ஆட்டம் நின்றது. அந்தவகையில் இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை. ஷர்மா 27 பந்துகளை எதிர்கொண்டு 10 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அவர் சரியாக விளையாடவில்லை.
இப்படி தொடர்ச்சியாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும் ரோஹித் ஷர்மா மீது தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில் முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டர் ஹைடன் ரோஹித் சர்மா விளையாட வேண்டிய முறை குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
“றோஹித் ஷர்மா குறித்து நினைக்கும்போது ஒரு ஃப்ரீ ஸ்கோரிங் பேட்ஸ்மேன் குறித்து நினைத்துப் பார்க்கிறேன். ஏனென்றால் ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் அடித்த இரட்டை சதம் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அவர் செய்த மகத்தான சாதனைகள் என அவர் இந்திய கிரிக்கெட்டிற்கு செய்திருக்கும் பங்களிப்பு மகத்துவம் வாய்ந்தது. அவரைப் பற்றி அவருக்கே ஒரு எண்ணமும் பெரிய ஆற்றலும் வேண்டும். நீண்ட நாட்களுக்குப் பிறகு மூன்றாவது போட்டியில் அவர் விளையாடும் போது மந்தமாக இருப்பதை உணர்ந்தேன்.
அவருடைய பேட்டிங் பார்ட்னராக அவர் பந்தை தடுத்து விளையாடுவதை நான் விரும்பவில்லை. அவர் பந்துக்கு எதிராக அதிரடியாக ஆட வேண்டும் என்று விரும்புகிறேன். இயல்பாகவே அவர் அடித்து ஆட கூடிய திறன் படைத்தவர் என்பதால் அப்படியே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விளையாட வேண்டும். ரோஹித் எனது சகோதரனாக மிகுந்த ஆற்றலுடன் விளையாட வேண்டும்.”