
ஐசிசி நடத்தும் 10வது டி20 உலகக்கோப்பைத் தொடர் அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கவிருக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவிருக்கும் இந்தத் தொடரில் தரவரிசையில் முதல் 10 இடங்களில் இருக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. அடுத்த 10 இடங்களுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. இதில் முதன்முறையாக இத்தாலி தகுதி பெற்றிருப்பது கிரிக்கெட் உலகில் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில் இத்தாலி என்றாலே பலருக்கும் கால்பந்து தான் நினைவுக்கு வரும். ஏனெனில் இத்தாலி இதுவரை 4 உலகக்கோப்பைகள், 2 நேஷனல் லீக் தொடர் மற்றும் 2 யூரோ சாம்பியன் தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. காலபந்தில் கொடிகட்டிப் பறக்கும் இத்தாலி, தற்போது கிரிக்கெட்டிலும் கால்தடம் பதிக்க முக்கிய காரணமாக இருப்பவர் ஆஸ்திரேலியாவின் ஜோ பர்ன்ஸ் தான்.
ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடி வந்த பர்ன்ஸ், தனது சகோதரரின் மறைவுக்குப் பின் இத்தாலி அணியில் விளையாடத் தொடங்கினார். அன்று முதல் இத்தாலியை உலகக்கோப்பையில் விளையாட வைப்பது ஒன்றை மட்டுமே இலக்காக கொண்டு செயல்பட்டு வந்தார். தற்போது அவரது இலக்கை வெற்றிகரமாக எட்டி விட்டார்.
டி20 உலகக்கோப்பையில் தகுதி பெற ஐரோப்பிய அணிகளுக்குள் தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வந்தன. இதில் நெதர்லாந்து அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்த இத்தாலி, ஸ்காட்லாந்து மற்றும் குர்யென்சி அணிகளை வீழ்த்தியது. மேலும் ஜெர்சி அணிக்கு எதிரான போட்டி மழையால் டிராவில் முடிந்ததால், 5 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்து, டி20 உலக்கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்பை உறுதி செய்தது இத்தாலி.
இத்தாலி கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோ பர்ன்ஸ், அணியை சிறப்பாக வழிநடத்தியதன் பலனாக முதன்முறையாக உலக கிரிக்கெட் அரங்கில் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளது இத்தாலி. கால்பந்தில் சாதித்த அளவிற்கு கிரிக்கெட்டில் இத்தாலி சாதிக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும், எதிரணிக்கு கடுமையான போட்டியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, நியூசிலாந்து, அயர்லாந்து, கனடா, நெதர்லாந்து மற்றும் இத்தாலி உள்ளிட்ட 15 அணிகள் தற்போது உலக்கோப்பையில் விளையாடத் தகுதி பெற்றுள்ளன.
இன்னும் 5 அணிகளுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெறவிருக்கிறது. இதில் ஆசிய கண்டத்தில் இருந்து 3 அணிகளும், ஆப்பிரிக்கா கண்டத்தில் இருந்து 2 அணிகளும் தகுதி பெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
டி20 கிரிக்கெட்டைப் போலவே, ஒருநாள் கிரிக்கெட் உலக்கோப்பையிலும் சிறிய அணிகளுக்கு விளையாடும் வாய்ப்பை ஐசிசி ஏற்படுத்தித் தர வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். சிறிய அணிகளாக கிரிக்கெட்டில் நுழைந்த வங்கதேசம், அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலம் வாய்ந்த பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளை எதிர்த்து வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆகையால் சிறிய அணி என எந்த அணியையும் நாம் மதிப்பட முடியாது. சிறிய அணிகளுக்கு அனுபவம் மட்டும் தான் குறைவு; ஆனால் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் அனைத்து வீரர்களுக்குமே உண்டு.