
கிரிக்கெட் வரலாற்றில் எத்தனையோ வீரர்கள் தடம் பதித்துள்ளார்கள். அதில் ஒருசிலர் மட்டுமே எக்காலத்திலும் பேசப்படும் வீரர்களாக திகழ்கின்றனர். விளையாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொருக்கும் ஒவ்வொரு வீரரைப் பிடிக்கும். அவ்வகையில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் தனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் ஒரு இந்தியர் என்பதைத் தெரிவித்துள்ளார். யார் அந்த இந்திய வீரர்? வாங்க தெரிந்து கொள்ளலாம்.
இந்திய அணி வெல்ல வேண்டிய இரண்டு ஐசிசி கோப்பைகளைத் தட்டிப் பறித்தவர் ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட். 2023 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி ஆகிய இரண்டிலும் இந்திய அணிக்கு எதிராக சதம் விளாசியவர் ஹெட். இவரது இந்த சதத்தால் இந்தியாவின் கோப்பைக் கனவு தகர்ந்தது. இந்திய அணியின் வெற்றிக்குத் தடையாய் இருந்த டிராவிஸ் ஹெட்டை, இந்தியாவின் தலைவலி என்று கூட கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரும் தனது தொடக்க காலத்தில் பல சறுக்கல்களை எதிர்கொண்டவர்தான். இருப்பினும் அதிலிருந்து மீண்டு வந்து, தற்போது அதிரடி ஆட்டக்காரராக மூன்று வடிவிலான ஆஸ்திரேலிய அணியிலும் இடம் பெற்றுள்ளார்.
இந்திய அணிக்கு எதிராக 2024/25 பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரிலும் 2வது மற்றும் 3வது டெஸ்டில் அடுத்தடுத்து சதமடித்து ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்ந்தார். களத்தில் அணியின் சூழ்நிலை எதுவாக இருந்தாலும், அதிரடியாக விளையாடுவதே இவரது இயல்பு. இந்த யுக்தி இவருக்கு வெற்றியையும் பெற்றுத் தந்துள்ளது. இந்நிலையில், தனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்விக்கு சுவாரஸ்யமான பதிலை அளித்துள்ளார் டிராவிஸ் ஹெட்.
இதுகுறித்து டிராவிஸ் ஹெட் கூறுகையில், “எல்லா காலத்திலும் எனக்கு மிகவும் பிடித்தமான வீரர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டின் கடவுள் என்று இவரை அழைக்கிறோம். அதற்கேற்ப பல சோதனைகளைக் கடந்து சாதனைகளைப் புரிந்துள்ளார். தொலைக்காட்சியில் நான் மற்றும் எனது நண்பர்கள் அதிக நேரம் பார்த்தது டெண்டுல்கரின் பேட்டிங்கைத் தான். ஏனெனில் வேறு யாரும் அவர் அளவுக்கு நீண்ட நேரம் பேட்டிங் செய்ய மாட்டார்கள். சச்சின் டெண்டுல்கர் மட்டும் தான் முழுநேரமும் பேட்டிங் செய்து கொண்டிருப்பார்” என அவர் கூறினார்.
நவீன கால கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு மிகச்சிறந்த பங்களிப்பை அளித்து வரும் டிராவிஸ் ஹெட், அவ்வப்போது பகுதிநேர சுழற்பந்து வீச்சாளராகவும் பங்களிக்கிறார்.
சச்சின் டெண்டுல்கரின் ஒருசில சாதனைகள் முறியடிக்கப்பட்டாலும், இன்னும் பல சாதனைகள் முறியடிக்கப்படவில்லை. அதிக ரன்கள், அதிக சதங்கள் மற்றும் அதிக நாட் அவுட் என இவரது சாதனைப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இந்திய வீரர்கள் மற்றும் ரசிகர்களைத் தவிர்த்து, வெளிநாட்டு வீரர்களாலும் விரும்பப்படும் ஒரு வீரர் சச்சின். சச்சின் விளையாடிய காலத்தில் அவரை பல வீரர்கள் புகழ்ந்தனர். இன்றைய காலத்து வீரர்களும் சச்சினின் ரசிகர்களாகவே இருக்கின்றனர்.