
இந்திய இளம் வீரர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு வீரர்களும் தங்கள் திறமையை ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த வரிசையில் குறிப்பிடத்தக்க வெளிநாட்டு இளம் வீரர் என்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டெவால்ட் பிரெவிஸை கூறலாம். சென்னை அணி கொடுத்த திடீர் வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டு, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் பிரெவிஸ். சென்னை அணி 2025 ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாவிட்டாலும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து அடுத்த ஆண்டு ஐபிஎல் கோப்பைக்கு குறி வைத்துள்ளது.
சென்னை அணியில் குர்ஜப்னீத் சிங் என்ற வீரர் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். இவருக்கான மாற்று வீரரைத் தேடி வந்த சென்னை அணி நிர்வாகத்திற்கு தென்னாப்பிரிக்காவின் டெவால்ட் பிரெவிஸ் நல்ல தேர்வாக அமைந்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா அணிக்கு விளையாடி வரும் இவரை, அடுத்த டிவில்லியர்ஸ் என்று சிலர் குறிப்பிடுகின்றனர். இதற்கு முக்கிய காரணமே பிரெவிஸின் அதிரடியான ஆட்டம் தான். அதனால் தான் சென்னை அணியும் இவரை தேர்ந்தெடுத்தது. அதற்கேற்ப கொல்கத்தாவிற்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி சென்னை அணியின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்தார் பிரெவிஸ்.
சர்வதேச கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா அணிக்கு விளையாடிய போதும் சரி; ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய போதும் சரி, பிரெவிஸின் ஜெர்சி நம்பர் 17 ஆகத் தான் இருந்தது. ஆனால் சென்னை அணியில் தனது ஜெர்சி நம்பரை 12 ஆக மாற்றி இருக்கிறார் பிரெவிஸ். இதற்கு என்ன காரணம் என சென்னை ரசிகர்கள் குழப்பத்தில் இருந்ததோடு, சமூக வலைதளத்தில் கேள்வியும் கேட்டு, விவாதிக்கவும் தொடங்கி விட்டனர்.
இந்நிலையில், தனது ஜெர்சி நம்பர் குறித்த ரகசியத்தைப் பகிர்ந்துள்ளார் டெவால்ட் பிரெவிஸ். இதுகுறித்து பிரெவிஸ் கூறுகையில், “கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதியன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்திடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அதில் உங்களை சென்னை அணியில் சேர்த்துக் கொள்ள அணி நிர்வாகம் விரும்புகிறது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அன்றைய தினம் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. எந்தத் தேதியில் எனக்கு அழைப்பு வந்ததோ, அந்தத் தேதியை மறக்கக் கூடாது என்பதற்காகவே எனது ஜெர்சி நம்பரை 12 ஆக வைத்தேன்” என அவர் தெரிவித்தார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சீனியர் வீரர்கள் சொதப்பியதால், சென்னை அணி தோல்விப் பாதையில் சென்று கொண்டிருந்தது. இதனைத் திசைதிருப்பும் முயற்சியாகவே இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஆயுஷ் மாத்ரே, உர்வில் படேல் மற்றும் டெவால்ட் பிரெவிஸ் உள்ளிட்ட இளம் வீரர்கள் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி அதிரடியாக விளையாடினர்.
அடுத்த சீசனில் இவர்கள் தான் சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக மிளிர்வார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. குறிப்பாக மாத்ரே மற்றும் உர்வில் படேல் ஆகிய இருவரும் டாப் ஆர்டரிலும், பிரெவிஸ் மிடில் ஆர்டரிலும், பௌலர்களை பதம் பார்ப்பார்கள் என்று சென்னை அணியின் பயிற்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.