
இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் விராட் கோலி சமீப ஆண்டுகளில் ரன் குவிக்கத் திணறி வருகிறார். எப்பேற்பட்ட வீரருக்கும் கடினமான காலம் வரும் என்பது விராட் கோலியின் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கரும் இம்மாதிரியான ஒரு சூழலை எதிர்கொண்டவர் தான். இருப்பினும் கோலியின் பேட்டில் இருந்து ரன்கள் வராததால், இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்வி எனும் மாய வலையில் சிக்கியுள்ளது. இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளில் கோலி தடுமாறுவது ஏன் என அலசுகிறது இந்தப் பதிவு.
இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கரின் இடத்தை மிகச் சிறப்பாக நிரப்பியவர் விராட் கோலி. ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் என 3 வடிவ கிரிக்கெட்டிலும் பல சாதனைகளைப் புரிந்துள்ள கோலி, சச்சினின் சாதனைகளையும் ஒவ்வொன்றாக தகர்த்து வருகிறார். இதனாலேயே கிரிக்கெட் உலகில் 'கிங் கோலி' என அழைக்கப்படுகிறார். இந்நிலையில் சமீபத்திய ஆண்டுகளில் அனைத்து விதமான போட்டிகளிலும் திணறி வருகிறார் கோலி. கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்கு முன்பு வரை பேட்டிங்கில் தடுமாறிய கோலி, உலகக்கோப்பையில் அதிக ரன்களை விளாசி தொடர் நாயகன் விருதை வென்றார்.
அடுத்ததாக நடப்பாண்டில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரில் லீக் போட்டிகளில் பிரகாசிக்கா விட்டாலும், இறுதிப்போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். அத்துடன் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வும் பெற்று விட்டார். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் இன்னமும் கோலி தடுமாறுவது இந்திய அணிக்கு பின்னடைவாக உள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்டிலும் சேர்த்து வெறும் 93 ரன்களே எடுத்தார். இருப்பினும் ஆஸ்திரேலியாவில் ஜொலிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டார். முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் சொதப்பினாலும், இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்து அசத்தினார்.
கோலி சதமடித்ததும், மீண்டு ஃபார்முக்குத் திரும்பி விட்டதாக பலரும் மகிழ்ந்தனர். ஆனால், இந்த மகிழ்ச்சி வெகு நாட்களுக்கு நீடிக்கவில்லை. இரண்டாவது டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸிலும் சொற்ப ரன்களில் அவுட்டானார். மேலும் இவர் அவுட்டாகிய விதம் முன்னாள் வீரர்களுக்கு மத்தியில் பேசு பொருளானது. ஏனெனில் ஆஃப் சைடில் போன பந்துகளை அவர் அடிக்க முற்பட்ட விதம் தவறான யுக்தியாகும். விட வேண்டிய பந்துகளை, அடித்தே தீருவேன் என்ற ஈகோ தான் கோலியின் இந்த தடுமாற்றத்திற்கு காரணம் என முன்னாள் வீரர்கள் எச்சரித்துள்ளனர்.
விராட் கோலி தனது முழு கவனத்தையும் டெஸ்ட் கிரிக்கெட்டில் திருப்பினால் மட்டுமே, மீண்டும் அவரால் ரன் குவிக்க முடியும். கடந்த 5 ஆண்டுகளில் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வரும் கோலி, ஃபார்முக்குத் திரும்புவது அவசியம். இங்கிலாந்தின் ஜோ ரூட் கூட ஒரு சமயத்தில் மோசமாக விளையாடி வந்தார். ஆனால் தற்போது, நீண்ட நேரம் விளையாடி தொடர்ந்து ரன் குவித்து வருகிறார். அதேபோல் விராட் கோலியும் ரன் குவிக்க வேண்டியது அவசியமாகும். மேலும் இந்திய அணி விராட் கோலியை மட்டுமே நம்பி இருக்காமல், மற்ற வீரர்களும் தங்களது பங்களிப்பை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.