நினைவாற்றலை அதிகரிக்கும் ‘மா ஜாங்’: மூளைக்கான சிறந்த பயிற்சியைப் பற்றித் தெரியுமா?

சீன பாரம்பரிய விளையாட்டான மா ஜாங் ஆடும் முறை, நன்மைகள் மற்றும் எச்சரிக்கைகள் இதோ!
மா ஜாங் - Mahjong game rules
மா ஜாங் - Mahjong game rules
கலைமதி சிவகுரு

கலைமதி சிவகுரு, 1983-ல் நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் பட்டம் பெற்றவர். இவரது படைப்புகள் மங்கையர் மலர், தேவதை, தினத்தந்தி குடும்ப மலர் இதழ்களில் வெளியாகிப் பரிசுகள் பெற்றுள்ளன. தற்போது கல்கி குழுமத்தில் எழுதுகிறார். சமையல், ஆன்மிக வாசிப்பு, தையல் கலையில் ஆர்வம் கொண்டவர்.

Updated on: 

மா ஜாங் என்பது சீனாவில் தோன்றி, இன்று உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களால் விரும்பப்படும் ஒரு பாரம்பரிய டைல்ஸ் விளையாட்டாகும். இது சீட்டாட்டம் (Rummy) போன்ற அமைப்பைக் கொண்டிருந்தாலும், அட்டைகளுக்குப் பதிலாக மரக்கட்டைகள் அல்லது பிளாஸ்டிக்கால் ஆன ‘டைல்ஸ்’ பயன்படுத்தப்பட்டு விளையாடப்படுகிறது.

மா ஜாங் எவ்வாறு விளையாடப்படுகிறது?

மா ஜாங் விளையாட்டுக்கு மூளைத்திறன், கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் மற்றும் சிறந்த உத்தி தேவை.

அடிப்படைத் தேவைகள்:

விளையாட்டாளர்கள் - பொதுவாக 4 நபர்கள்.

காய்கள் (Tiles) _ மொத்தம் 144 டைல்கள் பயன் படுத்தப்படும். இதில் சீன எழுத்துக்கள், மூங்கில் (Bamboo), புள்ளிகள் (Dots), காற்று (Winds), மற்றும் பருவகாலங்கள்/மலர்கள் போன்ற உருவங்கள் வரையப்பட்டிருக்கும்.

தாயக்கட்டைகள் (Dice) - விளையாட்டைத் தொடங்குவதற்கும் ஆட்டக்காரர்களின் வரிசையைத் தீர்மானிக்கவும் பயன்படுத்தப்படும்.

விளையாடும் முறை

சுவர் எழுப்புதல் (Wall Building): அனைத்து 144 டைல்களும் கவிழ்க்கப்பட்டு (Face down) நன்றாகக் குலுக்கப்படும். பின் ஒவ்வொரு ஆட்டக்காரரும் தங்களுக்கு முன்னால் இரண்டு அடுக்கு கொண்ட நீண்ட சுவரைப்போல டைல்களை அடுக்கி வைப்பார்கள்.

டைல்களைப் பிரித்தல்: தாயக்கட்டையை உருட்டி, சுவரிலிருந்து ஒவ்வொரு நபருக்கும் 13 டைல்கள் வீதம் பிரிக்கப்படும். (ஆட்டத்தைத் தொடங்குபவருக்கு மட்டும் 14 டைல்கள் கிடைக்கும்).

செட்களை உருவாக்குதல்: விளையாட்டின் முக்கிய நோக்கமே உங்கள் கையிலிருக்கும் 14 டைல்களையும் சேர்த்து சரியான செட்களாக (Sets) மாற்றுவதுதான்.

Pung: ஒரே மாதிரி இருக்கும் 3 டைல்கள்.

Chow: ஒரே பிரிவில் அடுத்தடுத்த எண்களாக இருக்கும் 3 டைல்கள் (எ.கா: மூங்கில் 3, 4, 5).

Kong: ஒரே மாதிரி இருக்கும் 4 டைல்கள்.

Pair: ஒரே மாதிரி இருக்கும் 2 டைல்கள் (விளையாட்டை முடிக்க இது கட்டாயம் தேவை).

மா ஜாங் - Mahjong game rules
மா ஜாங் - Mahjong game rules

நகர்த்தல்கள் (Turns): ஒவ்வொரு ஆட்டக்காரரும் தன் முறை வரும்போது, சுவரிலிருந்து ஒரு டைலை எடுப்பார். பின் தன் கையிலிருக்கும் தேவையில்லாத ஒரு டைலைக் கீழே போடுவார்.

வெற்றி (Mahjong!): யார் முதன்முதலில் 4 செட்களையும் (Pung/Chow/Kong) 1 ஜோடியையும் (Pair) சேர்த்து மொத்தம் 14 டைல்களைச் சரியாகச் சேர்க்கிறாரோ, அவர் “மா ஜாங்!” என்று கூறி வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

மா ஜாங் விளையாட்டின் நன்மைகள்

மூளைத்திறன் மற்றும் நினைவாற்றல் மேம்பாடு: உங்கள் கை டைல்கள், எதிராளிகள் போடும் டைல்கள், மற்றும் சுவரில் மீதமிருக்கும் டைல்களைத் தொடர்ந்து கவனிக்க வேண்டியிருப்பதால், நினைவாற்றலும் கவனக் குவிப்பும் அதிகரிக்கும்.

மன அழுத்தம் குறைதல்: கவனத்தை ஒருமுகப்படுத்தி விளையாடும் போது, அன்றாட வாழ்க்கையின் பதற்றமும் மன அழுத்தமும் குறைகிறது.

சமூகப் பிணைப்பு: நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து விளையாடுவதால் உறவுகள் பலப்படும். குறிப்பாக, முதியவர்களுக்குத் தனிமையைப் போக்க இது சிறந்த விளையாட்டாகும்.

மூளை முதிர்ச்சித் தடுப்பு: முதியவர்களுக்கு வரும் அல்சைமர் போன்ற மறதி நோய்களைத் தள்ளிப்போடவும், மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் பெரிதும் உதவுகிறது என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

இதையும் படியுங்கள்:
பெரிய செலவை வைக்கும் வீடு! தப்பிப்பது எப்படி? மாதாந்திர பராமரிப்பு டிப்ஸ்!
மா ஜாங் - Mahjong game rules

முடிவெடுக்கும் திறன்: எந்தக் காயை வைத்திருக்க வேண்டும், எதைக் கீழே போடவேண்டும் என்று நொடிக்கு நொடி திட்டமிடுவதால், விரைவாகச் சரியான முடிவெடுக்கும் ஆற்றல் வளரும்.

மா ஜாங் விளையாட்டின் தீமைகள்:

1.சுவாரசியமான விளையாட்டு என்பதால், மணி கணக்கில் நேரம் போவதே தெரியாமல் விளையாடக் கூடும். இதனால் பிற முக்கியமான பணிகள் பாதிக்கப்படலாம்.

2.பல இடங்களில் இந்த விளையாட்டுப் பணத்தைச் பந்தயமாக வைத்து விளையாடப்படுகிறது. இதனால் நிதி இழப்பும் குடும்பத்தில் மனக்கசப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது.

3.ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்து விளையாடுவதால் முதுகு வலி, கழுத்து வலி, கண் எரிச்சல் மற்றும் உடற்பயிற்சியின்மை போன்ற உடலாரோக்கியப் பிரச்னைகள் உருவாகலாம்.

4.தொடர் தோல்விகள் அல்லது பந்தயப் பணத்தை இழக்கும்போது மன உளைச்சலும் கோபமும் ஏற்பட வாய்ப்புண்டு.

மா ஜாங் என்பது அறிவுக்கும் உத்திக்கும் வேலை கொடுக்கும் ஒரு அற்புதமான பாரம்பரிய விளையாட்டாகும். பணத்திற்காகச் சூதாடாமல், குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் ஒரு மனமகிழ் பொழுதுபோக்காகவும் மூளைக்கான பயிற்சியாகவும் விளையாடும் வரை மா ஜாங் நமக்குச் சிறந்த நன்மைகளையே தரும்!

இதையும் படியுங்கள்:
ஜீரோ பட்ஜெட் ஹோம் டெக்கோர்: மன அழுத்தத்தைப் போக்கி வீட்டைப் பசுமையாக்கும் எளிய ரகசியம்!
மா ஜாங் - Mahjong game rules