இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் 4வது ஆட்டம் டிராவில் முடிந்தாலும், இந்தியாவிற்கு அது வெற்றிகரமான போட்டி தான். அழுத்தமான சூழ்நிலையில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி போட்டியை டிரா செய்தனர். குறிப்பாக ஆல்ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தரின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 143 ஓவர்களை எதிர்கொண்டது.
இரண்டாவது இன்னிங்ஸில் ஓர் அணி அழுத்தமான சூழலில் இத்தனை ஓவர்களை சமாளித்து ஆல் அவுட் ஆகாமல் விளையாடுவது சாதாரண ஒன்றல்ல. இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் குறித்து அவ்வப்போது விமர்சனங்கள் எழுந்தாலும், அணியின் வெற்றிக்காக அவர் வீரர்களை ஊக்கப்படுத்துகிறார். இதற்காக முன்னாள் வீரர்களின் வரலாற்றை அவர் எடுத்துக்காட்டாக கூறுவதில்லை. வீரர்கள் தங்கள் சொந்த வரலாற்றை எழுத வேண்டும் என கூறுகிறார்.
இன்றைய தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூட 2009 இல் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி இந்திய அணி டிரா செய்ய உதவினார். இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியை இந்திய அணி வெற்றிகரமாக டிரா செய்ததும் கவுதம் கம்பீருக்கு பழைய நினைவுகள் கண்முன் வந்து போயிருக்கலாம். இருப்பினும் வரலாறுகளைப் பற்றி பேசி வீரர்களின் நேரத்தை அவர் வீணடிக்க எப்போதும் நினைப்பதில்லை. நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தால், உங்கள் வரலாற்றை நீங்களே எழுதுங்கள்; அதுதான் இந்திய அணியின் வெற்றிக்கும், வருங்காலத்திற்கும் பங்களிக்கும் என வீரர்களிடம் கவுதம் கம்பீர் சொல்லியிருக்கிறார்.
இதுகுறித்து கம்பீர் மேலும் கூறுகையில், “இந்திய அணியில் பல வீரர்கள் சாதனைகளைப் படைத்துள்ளனர். நான் விளையாடிய நல்ல இன்னிங்க்ஸ் கூட எனக்கு நினைவில் இல்லை. ஏனெனில் அதெல்லாம் வரலாறாக மாறி விட்டது. இது உங்களுடைய நேரம். வரலாற்றைப் பின் தொடராமல், உங்கள் வரலாற்றை எழுத முயற்சி செய்யுங்கள். அழுத்தமான சூழ்நிலையில் கவனமுடன் விளையாடி அதிலிருந்து வெளியே வர வேண்டியது முக்கியம். கடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்களின் செயல்பாடு மற்ற வீரர்களுக்கும் ஊக்கமளிக்கும் விதமாக அமைந்துள்ளது. வெற்றி தோல்வி பற்றியெல்லாம் கவலைப்படாமல், கடைசி வரை போராட வேண்டும்.
இந்திய அணியைத் தற்போது மாற்ற வேண்டிய அவசியமில்லை. இளம் வீரர்களுடன், அனுபவம் வாய்ந்த வீரர்களும் இருப்பதால் இந்திய அணி சமநிலையில் உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் கடைசி 2 நாட்களில் தொடர்ச்சியாக 5 செஷன்களை விளையாடுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. தற்போதைய இந்திய வீரர்கள் இதனைச் செய்து காட்டியுள்ளனர். இந்திய அணி சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதை இது உணர்த்துகிறது” என கம்பீர் கூறினார்.
இளம் வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கவுதம் கம்பீர், அடுத்து வரும் தொடர்களை எப்படி கையாளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அடுத்து ஆகஸ்ட் மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர், செப்டம்பர் மாதத்தில் ஆசிய கோப்பை மற்றும் அடுத்த ஆண்டு டி20 உலக்கோப்பை என இந்திய அணியின் போட்டி அட்டவணை நீள்கிறது. இந்நிலையில் வீரர்களின் செயல்பாட்டில் முன்னேற்றத்தைக் கொண்டு வர நினைக்கும் தலைமைப் பயிற்சியாளரின் நடவடிக்கைகள் பலனளிப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.