

அந்தப் பள்ளிச் சிறுவன் ஆவலுடன் காத்திருந்தான். கால்களில் ‘பேட்‘ தரித்து, கைகளில் ‘க்ளவுஸ்‘ அணிந்து மனதில் பொங்கும் உணர்ச்சிப் பிரவாகத்துடன் காத்திருந்தான். அடுத்து அவன் களத்தில் இறங்கி, தன் திறமையை பேட்டிங்கில் நிரூபிக்க வேண்டும். அவன் - அமோல் மஜும்தார் (Amol Muzumdar).
ஆனால் இவனுக்கு முன், மைதானத்தில் இறங்கிய சச்சின் டெண்டுல்கரும், வினோத் காம்ளியும், அந்த ஆசாத் மைதானத்தில் புது சரித்திரம் படைத்தார்கள். ஆமாம், இருவருமாகச் சேர்ந்து 664 ரன்கள் குவித்தார்கள்.
மஜும்தார் காத்திருந்தான், காத்திருந்தான்…. அந்த இன்னிங்ஸும், சாதனை படைத்த இரட்டையரின் பேட்டிங்கோடு முடிந்தது. அதனால் மஜும்தாருக்கு பேட் செய்ய வாய்ப்பே கிடைக்கவில்லை.
அந்த வாய்ப்பு கிட்டாமல் போனாலும், மஜும்தார் தன் திறமையை வெளிப்படுத்தாமல் இல்லை. ரஞ்சி போட்டிகளில் தன் முதல் அனுபவத்திலேயே அரியானா அணிக்கு எதிராக, மும்பை அணி சார்பில் விளையாடி, 260 ரன்கள் குவித்தான்.
1994ம் ஆண்டில் சுடர்விட்ட இந்த சாதனை, தொடர்ந்து ரஞ்சி போட்டிகளில் 11,000 ரன்களாக அவன் கணக்கில் குவிந்தது. அவற்றில் 30 சதங்கள்! சராசரியாக 50 ரன்கள்! ஆனாலும் அவனுக்கு சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் குழுவில் சேர அழைப்பு வரவில்லை.
ஆமாம், அமோலைவிட கிரிக்கெட் ஆர்வலர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்திய கிரிக்கெட் அணி பெயர்ப் பட்டியலில் அவருடைய பெயர் இடம்பெறும் என்று எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தது உண்மை. கடந்த முப்பது ஆண்டுகளாக இவருடைய அர்ப்பணிபும், ஆற்றலும் தேர்வுக் குழுவினர் கண்களை விட்டு எப்படித் தப்பின என்பது, யாருக்கும் புரியாத புதிர்.
அமோலைவிட குறைந்த திறமை கொண்டவர்கள், குறைந்த சாதனை படைத்தவர்கள், கிரிக்கெட் உலகத்தால் பாராட்டப்பட்டார்கள். ஆனால் அந்த வெளிச்சம் கொஞ்சம்கூட அமோல் மீது விழவே இல்லை.
ஆனாலும் அமோல் காத்திருந்தார். கிரிக்கெட் விளையாட்டுக்கு விசுவாசமாக இருந்தார். உள்ளூர் போட்டிகளில் பரிமளித்த தனக்கு வாய்ப்பு அளிக்கபடாததால், அகில உலகத்திற்குத் தன் பராக்கிரமத்தை வெளிக்காட்ட இயலாமல் போனது.
இருந்தாலும், கிரிக்கெட் தொடர்பு அவரை விட்டு விலகவில்லை. 2023ம் ஆண்டு இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு அனுபவமும், ஆற்றலும் மிக்க பயிற்சியாளர் ஒருவர் தேவைப்பட்டார். இந்தப் பொறுப்பை அமோல் ஏற்றார். பெண்கள் அணியில் ஒவ்வொருவருக்கும் பாசமிகு அண்ணனாக, கண்டிப்பான குருவாக, கனிவான தாயாகப் பணியாற்றினார்.
அதுவரை மும்பை மைதானங்களில் விளையாடினாலும், இந்திய அளவில்கூட பெரிதாக அறியப்படாமல் மங்கியிருந்த அந்த மகளிர் கிரிக்கெட் குழு, கொஞ்சம் கொஞ்சமாக விஸ்வரூபம் எடுத்தது. இரண்டே வருடங்களில் அடுத்தடுத்து அகில உலக அங்கீகாரமும், தொடர்ந்த வெற்றிகளும் இந்தக் குழுவைத் தேடி வந்தன.
தங்கள் திறமையால் கிரிக்கெட் உலகத்தையே திரும்பப் பார்க்க வைத்த இந்தக் குழுவை அயராமல் ஊக்குவித்து, அரிய நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்து, தனித்தனியே ஒவ்வொரு வீராங்கனையின் ப்ளஸ், மைனஸை மிகச் சரியாகக் கணித்து அவர்களை புடம் போட்ட தங்கங்களாக்கினார் அமோல் மஜும்தார்.
அதன் பயன் – நேற்று முன்தினம் (நவம்பர் 2-ம்தேதி) ஆஸ்திரேலியாவை வென்று உலகக் கோப்பையை நம் அணி கைப்பற்றியது. இரண்டு ஆண்டுகளாக இவர் தீட்டிய பட்டைகளாக இந்திய அணி உலக அரங்கில் ஜொலிக்கிறது!
தன் குழுவின் சார்பாக அவருக்கு நன்றிக் கடனை கேப்டன் ஹர்மன் ப்ரீத் கௌர் எப்படித் தெரிவித்தார் தெரியுமா? அரங்கமே நேரலையாகப் பார்க்க, உலகமே காணொலியாகப் பார்க்க, பயிற்சியாளர் அமோல் மஜும்தார் கால்களில் விழுந்துதான்!
பொதுவாக ஒருவருக்கு ஏற்படும் ஏமாற்றங்கள், அவருக்குள் உத்வேகத்தை வளர்த்து, அந்த ஏமாற்றங்களையே தன்னை உயர்த்தும் ஏணிப்படிகளாகக் கொண்டு சிகரத்தை எட்டுவது வழக்கம். ஆனால் அமோல் மஜும்தாரின் ஏமாற்றங்கள், அவர் வளர்த்த அணிக்கு அந்தப் புகழைத் தந்திருக்கின்றன.