பத்திரிக்கை செய்தி:
திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில், (CUTN) 2024-2025 ஆம் ஆண்டுகளுக்கான, தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆடவர் கோ கோ போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகள் உடற்கல்வி மற்றும் விளையாட்டுத் துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த போட்டிகள் டிசம்பர் 27 ஆம் தேதி முதல் டிசம்பர் 31, 2024 வரை தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றன. தென்னிந்திய மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த 1,044 திறமையான வீரர்களை ஒன்றிணைத்து, அவர்களை 72 அணிகளாக ஒருங்கிணைத்து மாபெரும் போட்டியாக நடத்தப்பட்டது.
நான்கு வெளிப்புற அரங்குகள் மற்றும் இரண்டு உட்புற அரங்குகளில் கோ கோ போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ச்சியான மழையினையும் பொருட்படுத்தாமல் விளையாட்டு வீரர்கள் உற்சாகமாக போட்டிகளில் கலந்துக் கொண்டனர். உயரிய விருதுகளுக்காக, கோகோ வீரர்கள் அனைவரும் தங்கள் அணிக்காக சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.
தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆடவர் கோ கோ ஆட்டங்களின் இறுதிப் போட்டியை பிரமாண்டமான முறையில் டிசம்பர் 31, 2024 அன்று தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் நடத்தியது. ஐந்து நாட்கள் நடந்த விறுவிறுப்பான போட்டிகளில் சிறப்பாக விளையாடி, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மங்களூர் பல்கலைக்கழகம் முதலிடத்தை பிடித்தது.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தேவாங்கேரே பல்கலைக்கழகம் 2-வது இடத்தையும், தமிழகத்தைச் சேர்ந்த பாரதியார் பல்கலைக்கழகம் 3 -வது இடத்தையும் பிடித்தது.கேரளப் பல்கலைக்கழகம் 4- வது இடத்தை பிடித்தது. இந்த நான்கு நட்சத்திர அணிகளும், பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான கோ கோ போட்டிகளில் தேசிய அளவில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பை பெற்றனர்.
கோ-கோ போட்டி நிறைவு விழா, சிறப்பு விருந்தினராக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் டாக்டர் டி.மணிகண்டன் வருகை தந்து சிறப்பித்தார். போட்டியாளர்களின் அசைக்க முடியாத மன உறுதியையும், வெற்றிக்காக போராடுவதையும் பெரிதும் பாராட்டினார்.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.கிருஷ்ணன், நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, விளையாட்டுத்திறன் மற்றும் முழுமையான வளர்ச்சியை ஊக்குவிப்பதில் பல்கலைக்கழகத்தின் அர்ப்பணிப்பைப் பாராட்டினார். பதிவாளர். பேராசிரியர் ஆர். திருமுருகன், நூலகர். முனைவர் ஆர்.பரமேஸ்வரன் ஆகியோரும் கல்வித்துறையில் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து வீரர்களிடம் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
உடற்கல்வி மற்றும் விளையாட்டுத் துறைத் தலைவர் டாக்டர் எஸ்.ஜெயராமன் தலைமையில் இந்தப் போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டன. அவருக்கு உறுதுணையாக டாக்டர் ஒய். நாகராஜா, டாக்டர் கே. விஷ்ணுவர்தன் ரெட்டி, டாக்டர்.எஸ்.பிந்து மாதவன் மற்றும் டாக்டர் எஸ்.அகிலா ஆகிய ஆசிரிய உறுப்பினர்கள் குழு இருந்தது.