யாருடைய இடமும் நிரந்தரம் இல்லை. அன்று 1974 - 75 ல் நடந்தது. மறுபடியும் 2025 ல் நடைப் பெற்றுள்ளது.
முதலில் 1974-75 ல் நடந்ததைப் பற்றி பார்ப்போம்.
மைக் டென்னஸ் தலமையில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் தொடர் விளையாட சென்றனர்.
மைக் டென்னஸ், அணியில் இருப்பதே பெரிய விஷயம்; அவருக்கு கேப்டன் பதவியா என்ற பேச்சு, அணி ஆஸ்திரேலியாவிற்கு வரும் முன்பே பரவலாக எழுந்தது.
சில சிறந்த வீரர்கள் இருந்த பொழுதும் டென்னஸ் கேப்டனாக தேர்வு செய்யப் பட்டார். அணியில் உள் கட்சி பூசுல் வேறு இருந்தது.
ஆஸ்திரேலிய வேக பந்து வீச்சாளர்கள் லில்லி, தாம்ப்சன் பந்துக்களை எதிர் கொள்ள இங்கிலாந்து வீரர்கள் திணறினார்கள், குறிப்பாக கேப்டன் மைக் டென்னஸ் ஆட்டம் படு சுமாராக தான் இருந்தது. பேட்டிங்கியில் சொல்லிக்கொள்கிற மாதிரி அவர் ரன்கள் அதிகம் எடுக்கவில்லை.
இரண்டாவது டெஸ்டில் முடிவு செய்தார் டெஸ்ட் விளையாடுவதில் இருந்து ஒதுங்கிக் கொள்வது என்று. நான்காவது சிட்னி டெஸ்ட்டில் முடிவு செய்து அதை அமுலும் படுத்தினார். ஆம் 4 வது டெஸ்டில் விளையாடவில்லை.
அவருக்கு பதிலாக ஜான் எட்ரிட்ச் அந்த டெஸ்டில், இங்கிலாந்து அணியை கேப்டனாக வழி நடத்தினார்.
மைக் டென்ன்ஸ் எடுத்த இந்த முடிவுக்கு பாராட்டும் கிடைத்தது. உடன் விமரிசிக்கவும் பட்டார்.
அந்த தொடரை 5 - 1 என்ற வித்தியாசத்தில், ஆஸ்திரேலிய அணி வென்றது. 4 வது டெஸ்டிலும் (மைக் டென்ன்ஸ் கேப்டன் மற்றும் வீரராக விளையாடாத பொழுதும்) இங்கிலாந்து அணி வெல்லவில்லை என்பது வேறு விஷயம்.
தற்போது 2025ல் நடைபெற்றது என்ன?
ரோஹித் சர்மா ஐந்தாவது சிட்னி டெஸ்ட்டில் தலைமை ஏற்றும், விளையாடவில்லை.
கடந்த சில டெஸ்ட் மேட்ச்சுக்களாகவே, ரோஹித் சர்மாவின் டெஸ்ட் ஆட்டங்கள் மிகவும் சுமாராக உள்ளன. விரைவில் அவுட் ஆகி அணிக்கு அழுத்தம் அதிகரிக்க வைத்து வந்துள்ளார்.
மேலும் இவ்வளவு டெஸ்டுக்கள் மற்ற வகை கிரிக்கெட் ஆட்டங்கள் பல வருடங்களாக ஆடி வரும் ரோஹித், அடிப்படை ஆட்டங்களை வெளிப்படுத்த திணறியது வியப்பாக மட்டும் அல்லாமல் ரசிகர்களுக்கு மிக்க வேதனை அளித்துள்ளது என்பது உண்மை.
சரிவர விளையாடாததால் அவர் மீது அழுத்தம் ஒவ்வொரு டெஸ்டிலும் அதிகரித்து வந்துள்ளது.
தன்னம்பிக்கையும் குறைய ஆரம்பித்து அது சரிவர தலைமை பொறுப்பில் செயல்பட விடாமல் செய்து விட்டது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
பேட்ஸ்மனாகவும், கேப்டனாகவும் மிகவும் சுமாராக செயல்படுவது ஒவ்வொரு டெஸ்டிலும் பட்டவர்த்தனமாக காணப்பட்டது.
நடைபெறும் இந்த தொடரில் முதல் டெஸ்டில் பும்ரா சிறப்பாக வழி நடத்தி இந்திய அணிக்கு மகத்தான வெற்றி பெற்று தந்தார். (அந்த டெஸ்டில் ரோஹித் விளையாடவில்லை!)
ஆனால் அடுத்த டெஸ்டுகளில் ரோஹித் வழிநடத்தும் பொழுது ஆஸ்திரேலிய அணிக்கு அதிக அழுத்தம் கொடுக்க தவறிவிட்டார்.
அது மட்டும் அல்லாமல், கேப்டனாக நின்று பொறுப்புடன் டெஸ்ட் ஆட்டம் ஆடுவதற்கு மறந்து, ஏதோ டி 20 மாதிரி ஆட்டம் ஆடி வாய்ப்புகளை தவற விட்டு மேட்ச்களை இழந்தார்.
வயது வேறு அவர் பக்கம் இல்லை. மேலும் அவர் எப்பொழுது ஓய்வை அறிவிப்பார் என்ற பேச்சும் வலம் வர ஆரம்பித்து விட்டது.
சிறப்பாக ஆடக் கூடிய வீரர்கள் வரிசையில் இருக்கிறார்கள். ரோஹித் விளையாடவில்லை என்றாலும், வழி நடத்த திறமைசாலிகள் உள்ளனர். இந்த அழுத்தங்கள் அவரை மேலும் சோர்வடைய வைத்துள்ளன.
இத்தகைய சூழ்நிலையில் இந்த டெஸ்ட் விளையாடாமல் ஒதுங்கிக் கொண்டது ஒரு சிறந்த முடிவு. சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு மறுபடியும் புத்துணர்சியுடன் விளையாடி முழு திறனையையும் காட்டுவாரா ரோஹித் சர்மா?