
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒரு வணிக ரீதியிலான தொடர் என கருதப்பட்டாலும், பல இளம் வீரர்களின் கனவை நிறைவேற்றி வருகிறது. ஆண்டுதோறும் சில புதிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் சாதித்து வருகின்றனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி, இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்றவர்களும் இங்கு உள்ளனர். அவ்வகையில், தான் விளையாடிய முதல் போட்டியிலேயே ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்து விட்டார் அஷ்வனி குமார்.
மும்பை அணியின் புதிய வேகப்புயலாக களத்தில் கர்ஜித்தார் அஷ்வனி குமார். ஐபிஎல் வரலாற்றில் தான் விளையாடிய முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனையும் படைத்து விட்டார். மும்பை அணியின் பந்துவீச்சுக்கு ஆணிவேராக இருந்தவர் ஜஸ்பிரீத் பும்ரா. தற்போது காயம் காரணமாக பும்ரா விளையாடாத சூழலில், அவரது இடத்தை நிரப்ப ஒரு இளம் வீரரைத் தேடிச் சென்றது மும்பை அணி நிர்வாகம்.
பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் ஜன்ஜேரி கிராமத்தைச் சேர்ந்தவர் வேகப் புயல் அஷ்வனி குமார். கிரிக்கெட்டின் மீதிருந்த ஆர்வத்தால் வெயில், மழை என எதையும் பார்க்காமல் 11 கிமீ பயணம் செய்து தினந்தோறும் பயிற்சியை மேற்கொண்டு வந்துள்ளார். எளிய குடும்பத்தில் பிறந்ததால் பயிற்சிக்கு செல்வதற்கு கூட பணப் பற்றாக்குறை நிலவியது. இருப்பினும் சைக்கிளில் சென்றாவது பயிற்சியை முடித்து விடுவாராம். விடியற்காலை 5 மணிக்குச் சென்றால் வீடு திரும்ப இரவு 10 மணி ஆகி விடுமாம்.
பயிற்சிக்கு தரமான ஷூ இல்லாத நிலையில், நண்பர்கள் தான் ஷூ மற்றும் பந்தை வாங்கிக் கொடுத்தனர். எந்நிலையிலும் பயிற்சியையும், முயற்சியையும் விடாமல் தொடர்ந்ததன் காரணத்தால் தான், இன்று மும்பை அணிக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்றார் அஷ்வனி குமார். கடந்த ரஞ்சி கிரிக்கெட் சீசனில் பஞ்சாப் அணிக்காக சிறப்பாக பந்து வீசியவரை அடையாளம் கண்டு, மும்பை அணி ரூ.30 இலட்சத்திற்கு ஏலம் எடுத்தது.
தனது பெயர் பொறித்த ஜெர்சியை அணிய வேண்டும் என்ற ஆசையுடன் காத்திருந்தவருக்கு, மும்பை அணி மிகப்பெரிய வாய்ப்பை வழங்கியது. இப்போது அஷ்வனி குமார் பெயர் பொறித்த ஜெர்சியை அணிய அவரது ஊர் மக்கள் பலரும் ஆசைப்படுகிறார்கள். தான் கஷ்டத்தில் இருந்த போது உதவிய நண்பர்களுக்கு பிரதிபலனாக, அவரது கிராமத்தில் உள்ள கிரிக்கெட் பயிற்சி அகாடெமிக்கு கிரிக்கெட் கிட் மற்றும் பந்துகளை வாங்கிக் கொடுத்துள்ளார் அஷ்வனி.
வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் மிட்செல் ஸ்டார்க் போல சாதிக்க வேண்டும் என்ற வேட்கையுடன் களத்தில் நுழைந்திருக்கிறார். இவரது சிறப்பான பந்துவீச்சு தொடரும் பட்சத்தில், நிச்சயமாக இந்தியாவின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக வலம் வருவார்.
“பஞ்சாபைச் சேர்ந்த வீரன் என்பதற்கு ஏற்றாற்போல் தைரியமாக பந்து வீசு. உன்னைக் கண்டு எதிரணி பேட்ஸ்மேன்கள் மிரள வேண்டும். மகிழ்ச்சியாக பந்து வீசு” என கேப்டன் ஹர்திக் பாண்டியா கொடுத்த உத்வேகத்தால் ரஹானே, ரிங்கு சிங், மணிஷ் பாண்டே மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதோடு முதல் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருதையும் வென்று தான் பிறந்த மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார் அஷ்வனி குமார்.