
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி அதில் சிம்மாசனமிட்டு வெற்றித்தலைவனாக அமர்ந்திருப்பவர் அஜித். அஜித்குமாரைப் பொறுத்தவரையில், சினிமாவில் உள்ள மற்ற பிரபலங்களை காட்டிலும் முற்றிலும் வித்தியாசமானவர். தனக்கு என்ன தோன்றுகிறதோ எதை பற்றியும் கவலைப்படாமல் அதை செய்யும் துணிச்சல் இவரிடம் மட்டுமே உண்டு. இவர், சினிமா நடிகர்களுக்கு என்று இருக்கும் பழக்க வழக்கங்களை தாண்டி இப்படி தான் நான் இருப்பேன் என தனக்கென தனி பாதையை வகுத்து அந்த வழியில் பயணித்து ஜெயித்தும் வருகிறார்.
இவரது நடிப்பில் கடைசியாக ‘குட் பேட் அக்லி' படம் கடந்த ஏப்ரல் 10-ம்தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது. அஜித்தை வைத்து படத்தை இயக்க, பல முன்னனி இயக்குனர்கள் போட்டி போட்டு காத்துக் கொண்டிருக்க, ஆனால் அவரோ தனக்கு மிகவும் பிடித்த கார் ரேஸில் கவனம் செலுத்தி வருவது மட்டுமில்லாமல் அடுத்த ஆண்டு வரை புதிய படங்களில் ‘கமிட்' ஆகமாட்டேன் எனவும் ஏற்கனவே அறிவித்து விட்டார்.
அந்த வகையில் சினிமா மட்டுமின்றி பந்தயங்களில் ஆர்வம் காட்டி வரும் அஜித்குமார், திரையுலகில் உச்சத்தில் இருந்த போதிலும் கார் ரேசிலும் ஈடுபாடுடன் கலந்து கொண்டு சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். 54 வயதில் கார் ரேசில் நுழைந்து, சாதனைக்கு வயது தடையல்ல என்பதை நிரூபித்து உலக நாடுகளில் நடக்கும் கார் பந்தய போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை அள்ளி வருவதுடன் உலக அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் கார் ரேஸில் கலந்து கொண்ட இவரது ‘அஜித்குமார் ரேஸிங்’ அணி ஒருமுறை முதலிடத்தையும், ஒரு முறை இரண்டாவது இடத்தையும், இரண்டு முறை மூன்றாவது இடத்தையும் பிடித்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் 'AJITHKUMAR RACING' என்ற யூடியூப் சேனலை தொடங்கிய அஜித் அதில் தனது ரேசிங் அணி பங்கேற்கும் ரேஸ்கள் அனைத்தையும் இந்த சேனலில் ஒளிபரப்பு செய்து வருகிறார்.
இந்த நிலையில், அஜித்குமார் ரேஸிங் கார் பந்தய நிறுவனத்துடன் இந்தியாவின் முதல் ஃபார்முலா ஒன் ஓட்டுநர், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் இணைந்துள்ளார். அதாவது நரேன் கார்த்திகேயன் அஜித்தின் கார் பந்தய நிறுவனத்தில் ஓட்டுநராக ஓப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் அஜித்குமார் ரேஸிங் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ‘நரேன் கார்த்திகேயனை அஜித்குமார் ரேஸிங்கிற்கு வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்’ என்று பதிவிடப்பட்டுள்ளது.
மேலும் நரேன் கார்த்திகேயன் போன்ற திறமை வாய்ந்த ஒருவருடன் பந்தயத்தில் ஈடுபடுவது ஒரு பாக்கியம் என்று கூறிய அஜித் தனது பாராட்டைத் தெரிவித்தார். இந்த ‘ஆசிய லீ மான்ஸ்’ போட்டியில் நரேனுடன் சேர்ந்து கலந்துகொள்வது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்றும் பதிவிட்டுள்ளார்.
அஜித்தை தனக்கு பல வருடங்களாகத் தெரியும் என்று அஜித்துடனான தனது நீண்டகால நட்பை உற்சாகமாக பகிர்ந்து கொண்டார் நரேன். ‘அஜித் தொழில்முறையாக பந்தயத்தில் ஈடுபடுவதைப் பார்ப்பது அருமையாக இருக்கிறது. அவருடன் இந்தப் பயணத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும், மேலும் ஒரு நம்பமுடியாத பயணத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்தியாவின் முதல் ஃபார்முலா ஒன் ஓட்டுநரான நரேன், 1990-ம் ஆண்டு முதல் கார் பந்தயத்தில் ஜொலித்து வருகிறார். நரேன், உலகளவில் ஃபார்முலா ஆசியா, சூப்பர் பிக்ஸ் கொரியா, பிரிட்டிஷ் ஃபார்முலா ஃபோர்டு மற்றும் சூப்பர் ஜிடி x டிடிஎம் ட்ரீம் ரேஸ் போன்ற பல கார் பந்தயங்களில் முதலிடம் பெற்று இந்தியாவின் கார் பந்தைய நட்சத்திரமாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 2005-ம் ஆண்டு ஜோர்டானில் நடைபெற்ற ஃபார்முலா - 1 பந்தயத்தில் பங்கேற்ற முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றதுடன் அப்போட்டியில் 18-ம் இடமும் பிடித்தார். இந்தியாவில் இன்று வரை ஒரே ஒரு பார்முலா 1 கார் பந்தய வீரர் இவர் மட்டுமே என்பதன் மூலம் அவரது பெருமையை உணரலாம்.