
இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத வீரர் விராட் கோலி. நவீன கால கிரிக்கெட்டின் ரன் மெஷின் என்று கூட இவரை அழைக்கின்றனர். டெல்லியைச் சேர்ந்த விராட் கோலி ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் அவ்வப்போது தங்களுக்குப் பிடித்தமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது வழக்கம். அவ்வகையில் கோலிக்கு மிகவும் பிடித்த பாடல் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்தவர் என்றாலும், தமிழ்ப் பாடலை மிகவும் விரும்பிக் கேட்பாராம் விராட் கோலி. அப்படி எந்தப் பாட்டை கோலி அடிக்கடி கேட்கிறார் தெரியுமா?
ஐபிஎல் தொடரில் தோனி களத்திற்கு வரும் போது அவ்வப்போது ஒரு பாடலை ஒலிக்கச் செய்வார்கள். அதில் ‘நீ சிங்கம் தான்’ பாடலும் ஒன்று. இந்தப் பாடலைத் தான் தனக்கு மிகவும் பிடிக்கும் என சமீபத்தில் விராட் கோலி தெரிவித்தார். பெங்களூர் அணி நிர்வாகம் சார்பில் நடைபெற்ற பேட்டியொன்றில் கோலி இதனைத் தெரிவித்தார்.
அந்தப் பேட்டியில், “எனக்கு மிகவும் பிடித்த பாடலைக் கேட்டால் நீங்கள் நிச்சயமாக ஆச்சரியம் அடைவீர்கள் என்று சொல்லி," 'நீ சிங்கம் தான்' பாடலை மொபைல் போனில் காண்பித்தார்.
கன்னட மொழியில் வெளியான மஃப்டி திரைப்படத்தை தமிழில் பத்து தல என்ற பெயரில் ரீமேக் செய்தார் ஒபிலி என்.கிருஷ்ணா. இப்படத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக் மற்றும் ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தில் வரும் ‘நீ சிங்கம் தான்’ என்ற பாடல் பலம் வாய்ந்த ஹீரோவைப் போற்றுவதாக எழுதப்பட்டது. அதாவது சவால்களை எதிர்த்து தனி ஆளாய் போராடும் ஒரு நாயகனுக்காக இப்பாடலை எழுதி இருந்தார் பாடலாசிரியர் விவேக்.
4.07 நிமிடங்கள் வரை இருக்கும் இந்தப் பாடலை சித் ஸ்ரீராம் பாட, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். இப்படத்தில் 5 பாடல்கள் இருந்தாலும், இந்தப் பாடல் தான் மிகவும் பிரபலமடைந்தது. பத்து தல படத்தில் வரும் இந்தப் பாடல் கோலியின் கவனத்திற்கு எப்படிச் சென்றது என அவரது ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
இப்போது தான் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் அதிகளவில் உருவாக்கப்படுகிறதே! ஒருவேளை இந்தப் பாடலை வைத்து கோலிக்கு ரீல்ஸ் வீடியோஸ் செய்ததன் மூலம், கோலி இந்தப் பாடலைப் கேட்டிருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. அதேநேரம் கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எம்.எஸ் தோனி களத்திற்கு வரும் போதெல்லாம், டிஜே நீ சிங்கம் தான் பாடலை ஒலிக்கச் செய்தார். இதன் மூலமாகவும் கோலி இந்தப் பாடலைக் கேட்டிருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.
எப்படி இருந்தாலும் அவ்வளவு பெரிய கிரிக்கெட் வீரருக்கு ஒரு தமிழ்ப் பாடல் பிடித்தமான பாடல்கள் வரிசையில் இருப்பது தமிழ் சினிமாவிற்கு பெருமை தானே! கோலியின் விருப்பமான பாடல்கள் தேர்வில், தான் நடித்த பாடல் இருப்பதைத் தெரிந்து கொண்ட நடிகர் சிம்பு மற்றும் படத்தின் இயக்குநர் ஒபிலி என்.கிருஷ்ணா தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.