அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக ராகுல் ட்ராவிட் தொடரப்போவது இல்லை என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்திய அணிக்காக 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, ராகுல் டிராவிட் தனது தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். அதன் பிறகு பல ஐபிஎல் அணிகள் அவரை அணுகின. ஆனால், ராகுல் டிராவிட் தனது பழைய அணியான ராஜஸ்தான் ராயல்ஸுடன் மீண்டும் இணைவதையே விரும்பினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சி.இ.ஓ ஜேக் லஷ் மெக்ரம், புதிய ஜெர்சியை டிராவிட்டுக்கு அளித்து வரவேற்றார்.
ராகுல் ட்ராவிட் 2012 மற்றும் 2013 ஐபிஎல் சீசன்களில் அவர் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக விளையாடினார். அதன் பின்னர், 2014 மற்றும் 2015-ல் அந்த அணியின் இயக்குநராகவும், வழிகாட்டியாகவும் செயல்பட்டார். இந்த காலகட்டத்தில், இளம் வீரர்களுக்கு வழிகாட்டுவதில் டிராவிட் பெரும் பங்கு வகித்தார்.
மீண்டும் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ட்ராவிட் ஓராண்டுக்கும் குறைவாகவே அந்தப் பொறுப்பில் இருந்தார். அவர் 2024 செப்டம்பர் 6 அன்று அதிகாரப்பூர்வமாகப் பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ராகுல் டிராவிட் விலகுவதாக அந்த அணி உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராகுல் நீண்ட காலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வளர்ச்சிக்கு பெரிய தூண்டுதலாக இருந்துள்ளார். அவரது தலைமைப் பண்பு பல தலைமுறை வீரர்களுக்கு உத்வேகமளித்துள்ளது, அணியின் வலிமைக்கு காரணமாயிற்று. அத்துடன், அணியின் கலாச்சாரத்தில் நீங்கா இடம் பிடித்துவிட்டார்.
அணி நிர்வாகத்தில் செய்யப்பட்ட மாற்றங்களின் ஒரு பகுதியாக, ராகுலுக்கு அணியில் பெரிய பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால், அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், வீரர்களும், உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களும், அணிக்கு அவர் ஆற்றிய சிறந்த சேவைக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.