ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகளை நான்கு நாட்களுக்கு மாற்ற வேண்டும் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்தது. அதுவும் ஐந்து நாட்களுக்கு குறைவான நாட்களிலேயே ஆட்டத்தை முடித்தது. சமீபக்காலமாக இந்திய அணி விளையாடும் டெஸ்ட் போட்டிகள் ஐந்து நாட்களுக்கு குறைவான நாட்களிலேயே முடிந்துவிடுகிறது. சில போட்டிகள் மழை காரணமாக நின்றது.
மேலும் கடைசியாக நடைபெற்ற போட்டிப்போல் விரைவில் ஒரு அணி தோற்றுவிடுகிறது. இதனால் ஐந்து நாட்கள் வரை போட்டி நடைபெறுவது கிடையாது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மைக்கேல் வாகன், "டெஸ்ட் கிரிக்கெட்டை நாம் ஐந்து நாட்களில் இருந்து நான்கு நாட்களாக குறைக்க வேண்டும்.
தற்போது வீரர்கள் ரசிகர்களை பொழுதுபோக்கும் வகையில் விளையாடி வருகிறார்கள். இதனால் வியாழக்கிழமை தொடங்கும் டெஸ்ட் போட்டி ஞாயிற்றுக்கிழமை முடிவடையும் படி நடத்த வேண்டும். இதன் மூலம் அட்டவணையை சரியாக நம்மால் தயார்படுத்த முடியும். முந்தைய காலத்தில் வீரர்கள் பொறுமையாக விளையாடுவார்கள்.
ஆனால் தற்போது அனைத்து வீரர்களுமே அதிரடியாக விளையாடுகிறார்கள். போட்டியை விரைவாக முடிக்க வேண்டும். விரைவாக வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் விளையாடுகிறார்கள். எனவே உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் நிர்வாகிகள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை 5 நாளிலிருந்து நான்கு நாட்களாக குறைக்க வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டு இங்கிலாந்து அணியும் ஐயர்லாந்து அணியும் நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடியது. ஆனால், இதன் ஆட்டம் மூன்றாவது நாள் மாலையே முடிவடைந்தது. நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டி என்ற ஒரு விஷயம் ஏற்கனவே உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக அளவு நடைபெற்று வரும் நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலும் இந்த மாற்றம் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிக்கு முன்னரெல்லாம், இரு அணிகளும் சமநிலையில் விளையாடி முடிக்கும் வரை நீடிக்கும். இது இத்தனை நாட்கள் என்ற கணக்கு இருக்காது. இதன்பின்னரே ஐந்து நாட்கள் கொண்டு வரப்பட்டது. இப்போது நான்கு நாட்களாக குறைக்க வலியுறுத்தப்படுகிறது.