2022-ல் ஆஸ்திரேலியாவில் எனக்கு விஷம் கலந்த உணவு கொடுக்கப்பட்டது: ஜோகோவிச்!

Novak Djokovic
Novak Djokovic
Published on

ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நாளை தொடங்குகிறது. இதில் 10 முறை சாம்பியனும், 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளருமான முன்னாள் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) உள்பட முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இந்த போட்டிக்காக ஜோகோவிச் மெல்போர்ன் சென்று தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் 2022-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்க மெல்போர்ன் சென்ற ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி போடாததால் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதுடன் விசா ரத்து செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். அந்த சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நடவடிக்கையை எதிர்த்து அவர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ததால் அங்குள்ள ஓட்டலில் ஓரிரு நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு இருந்தார். அப்போது அவருக்கு வழங்கப்பட்ட உணவில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டதாக 37 வயது ஜோகோவிச் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
முதல்வர் பெயரில் மூன்று மாத ரீசார்ஜ்… எச்சரித்த சைபர் க்ரைம் போலீஸார்!
Novak Djokovic

இது குறித்து ஜோகோவிச் சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஆன்லைனில் வெளியாகி இருக்கிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:-

2022-ம் ஆண்டு கொரோனா தடுப்பூசி பிரச்சனை காரணமாக ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதி மறுத்த பிறகு மெல்போர்னில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு இருந்த போது எனக்கு சில உடல் நலப்பிரச்சினைகள் ஏற்பட்டன. எனக்கு விஷம் கலந்த சில உணவுகள் வழங்கப்பட்டதால் தான் இந்த உடல் நலக்கோளாறு ஏற்பட்டது என்பதை உணர்ந்தேன். நான் செர்பியா திரும்பி பரிசோதனை செய்து பார்த்த போது எனக்கு வழங்கப்பட்ட உணவில் விஷத் தன்மை இருந்ததை கண்டுபிடித்தேன். எனக்கு அளிக்கப்பட்ட உணவில் அதிக அளவில் உலோகத் தன்மை இருந்தன. எனது ரத்தத்தில் ஈயம், பாதரசம் ஆகியவை அதிகப்படியாக இருந்தது தெரியவந்தது. இதனை நான் யாரிடமும் வெளிப்படையாக சொல்லவில்லை.

சமீபத்தில் நான் ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் பாஸ்போர்ட் பரிசோதனைக்கு செல்லுகையில் அந்த பழைய சம்பவம் எனது மனதில் வேதனையை ஏற்படுத்தியது. ஆனால் ஆஸ்திரேலிய மக்கள் மீது எனக்கு எந்த விரோதமும் இல்லை. கடந்த சில வருடங்களில் என்னை சந்தித்த ஆஸ்திரேலிய மக்கள் பலரும் தங்களது அரசாங்கத்தால் நான் நடத்தப்பட்ட விதத்துக்கு வருத்தம் தெரிவித்தனர். மேலும் அரசும் மாறிவிட்டது. அவர்கள் எனக்கு விசாவை வழங்கினர். அதற்கு நன்றி உள்ளவனாக இருக்கிறேன். மேலும் ஆஸ்திரேலியாவில் இருப்பதை விரும்புவதாகவும் கூறினார்.

இதையும் படியுங்கள்:
16 வருடங்கள் சாப்பிடாத பெண்… என்ன காரணம்?
Novak Djokovic

இருப்பினும், ஆஸ்திரேலியாவில் என்னை தடுப்பு காவலில் வைத்திருந்தவர்களை அதன்பிறகு ஒருபோதும் சந்தித்ததில்லை என்றும் அவர்களைச் சந்திக்க எனக்கு விருப்பமில்லை என்றும் அவர் கூறினார். மேலும் ஒருவேளை அவர்களை மீண்டும் சந்திக்க நேர்ந்தால் கைகளை குலுக்கி விட்டு சென்று விடுவேன் என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com