

கால்பந்து உலகக் கோப்பையை முன்னிட்டு, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள குயின்ஸ் (Queens) பகுதியில், ஷியா சாலை (Shea Road) மற்றும் மெரிடியன் சாலை (Meridian Road) சந்திப்புக்கு கால்பந்து ஜாம்பவான் பீலேவின் (Pele) நினைவாக 'பீலே வே' (Pelé Way) என்று பெயரிடப்பட்டுள்ளது. அவருக்கு ஏன் இந்த மரியாதை? வாருங்கள் பார்க்கலாம்.
'கால்பந்தின் மன்னன்' என்றும் கால்பந்து உலகின் ஜாம்பவான் எனவும் போற்றப்படுபவர் பீலே (Pelé), பிரேசில் நாட்டு அணிக்காக பல சாதனைகளை செய்து அந்நாட்டின் அடையாளமாக திகழ்ந்திருக்கிறார். கால்பந்து வரலாற்றில் 1958, 1962, 1970-களில் நடந்த மூன்று உலகக்கோப்பைகளை வென்ற ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றவர். தனது வாழ்நாளில் 1,281 கோல்களை அடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
பிரேசிலில் 1940-ஆம் ஆண்டு அக்டோபர் 23-ஆம் தேதி பிறந்தார். எட்சன் அரான்டெஸ் டோ நாசிமெண்டோ (Edson Arantes do Nascimento) என்பது இவரது இயற்பெயர். பிரேசிலின் ட்ரெஸ் கோராஸ் (Tres Coracoes) என்ற நகரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். குடும்ப வறுமை காரணமாக சிறுவயதில் தேநீர் விற்று வந்தார். கால்பந்து மீதான ஆர்வம் காரணமாக காசு இல்லாததால் காலுறைகளில் (Socks) துணிகளை அடைத்து பந்து போல செய்து தெருக்களில் விளையாடி பயிற்சி பெற்றார்.
தொழில்முறை விளையாட்டு வீரராக தனது 15-வது வயதில் பிரேசிலின் 'சாண்டோஸ்' (Santos) கால்பந்து கிளப்பில் இணைந்தார். தனது 16 வயதில் கொரியன் தியான்ஸ் அணிக்கு எதிராக தனது முதல் கோலை அடித்தார்.
16 வயதிலேயே பிரேசில் தேசிய அணிக்காக அறிமுகமானார். தனது 17-வது வயதில்1958 உலகக் கோப்பையில் விளையாட களமிறங்கி, அடுத்ததாக வேல்ஸ் அணிக்கு எதிரான கால் இறுதி போட்டியில், பீலே உலக கோப்பை போட்டியில் தனது முதல் கோல் கணக்கைத் தொடங்கினார். இந்த கோலினை அடிக்கும் போது பீலேவுக்கு வயது 17 ஆண்டுகள் 235 நாட்கள் மட்டுமே. உலகக் கோப்பை வரலாற்றில் மிக இளம் வயதில் கோல் அடித்தவர் என்ற பெருமையும் அப்போது பீலேவுக்கு இந்த கோலால் கிடைத்தது. அரை இறுதி ஆட்டத்தில் பிரான்சுக்கு எதிராக பீலே 'ஹாட்ரிக் கோல்' அடிக்க உலகமே உன்னிப்பாக கவனிக்க தொடங்கியது. இளம் வயதில் ஹாட்ரிக் கோல் அடித்த வீரர் என்ற பெருமைக்கும் பீலே சொந்தக்காரர் ஆனார்.
உலகக் கோப்பையை வென்ற இளம் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். 1958 (ஸ்வீடன்), 1962 (சிலி), பிரேசில் அணி தனது அடுத்த இரண்டு உலகக் கோப்பையை வெல்ல உதவினார். 1970 (மெக்சிகோ), மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை முத்தமிட்டார்.
பீலே, உலகக்கோப்பை போட்டிகளில் 10 கோல் அடிக்க உதவும் அசிஸ்ட்களை (assist) செய்துள்ளார். இது இன்று வரை யாராலும் முறியடிக்கப்படாத சாதனையாகும். இதில் குறிப்பாக, 1958 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி போட்டியில் 1 அசிஸ்ட் மற்றும் 1970 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி போட்டியில் 2 அசிஸ்ட்களையும் செய்துள்ளார். உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் அதிக அசிஸ்ட்களை (3) செய்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
110 நாடுகளைச் சேர்ந்த 5 லட்சம் பேர் கொண்ட கருத்துக்கணிப்பில் 'கால்பந்தாட்ட கிங் ' என கூறப்பட்டவர் பிரேசில் நாட்டின் பீலே. 'கருப்பு வைரம்' என்று அழைக்கிறார்கள் பீலே. 1977 ம் ஆண்டு ஓய்வு பெற்றார். தனது 22 ஆண்டில் 1363 ஆட்டங்களில் 1281 கோல்களை அடித்துள்ளார். அது ஓர் உலக சாதனை இதில் 6 முறை ஒரு ஆட்டத்தில் 5 கோல்களையும், 30 முறை 4 கோல்களையும், 92 முறை ஹாட்ரிக் அடித்து சாதனை புரிந்தார். 92 முறை சர்வதேச போட்டிகளில் கேப்டனாக 97 கோல்களை அடித்து சாதனை புரிந்துள்ளார்.
உலகக் கோப்பை போட்டியிலிருந்து விலகிக் கொண்ட பிறகு வட அமெரிக்காவில் கால்பந்தை பிரபலப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார். அங்கு அவர் நியூயார்க் காஸ்மோஸ் அணிக்காக (1975–1977) விளையாடி, அமெரிக்காவில் கால்பந்தின் மதிப்பை உயர்த்த உதவினார்.
பீலேயின் அசாத்திய திறமையால், 1961-ஆம் ஆண்டு பிரேசில் அதிபர் இவரை 'தேசியச் சொத்து' (National Treasure) என அறிவித்தார். 1999-இல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இவரை 'நூற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீரர்' எனத் தேர்ந்தெடுத்தது. கால்பந்து விளையாட்டை உலக அளவில் புகழடையச் செய்த பீலே, 1977-ல் ஓய்வு பெற்றார். அதன் பிறகு உலக அமைதிக்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவும் ஐ.நா (UN) அமைப்பில் தூதராகப் பணியாற்றினார்.
பீலே 2022 டிசம்பர் 30-ல் தனது 82-வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவர் வெறும் கால்பந்து வீரர் மட்டுமல்ல, அவர் ஒரு உலகளாவிய நிகழ்வு. அவரது வாழ்க்கை கதை நமக்கு கற்பிப்பது என்னவென்றால், திறமை, அர்ப்பணிப்பு மற்றும் பணிவு ஆகியவற்றின் கலவை எவ்வாறு ஒரு நபரை உலகளாவிய அடையாளமாக மாற்றக்கூடும் என்பதைத்தான்.