
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3 போட்டிகளில் இரண்டில் இந்தியா தோல்வி அடைந்துள்ளதால், 4-வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனிடையே இரு அணிகளுக்கும் இடையேயான 4 ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் ஜூலை 23 முதல் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதனையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். நான்காவது டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுவிட்டால் தொடரைக் கைப்பற்றி விடும். இதனால் இந்த போட்டி இந்திய அணிக்கு முக்கியமான ஒன்றாக அமையும். இதே போன்று போட்டி டிராவில் முடிந்தாலும் இந்தியாவால் இந்த தொடரை வெல்ல முடியாது.
இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பும்ரா மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டதால் கடைசி இரண்டு போட்டியில் அவர் எந்த போட்டியில் விளையாடுவார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன்படி அவர் 4-வது டெஸ்டில் ஆடுவாரா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. ஆனால் நான்காவது போட்டியில் வெற்றி பெற வேண்டுமெனில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா அந்த போட்டியில் விளையாடுவது அவசியம். கடைசி இரண்டு போட்டிகளிலுமே அவர் விளையாடினால் மட்டுமே இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு உறுதியாகும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்.
இதை இந்திய முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார் விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், ‘ஒரு சுற்றுப்பயணத்தின் போது பந்து வீச்சாளரே எந்த டெஸ்டில் ஆடுவது என்பதை தேர்ந்தெடுத்து விளையாடுவதை நான் ஆதரிக்க மாட்டேன். அவர் முழு உடல்தகுதியுடன் இருந்தால், நாட்டுக்காக அனைத்து போட்டியிலும் ஆட வேண்டும். பும்ரா உலகத்தரம் வாய்ந்த வீரர். ஒரு சுற்றுப்பயணத்துக்கு நீங்கள் வந்து விட்டால் அனைத்து ஆட்டங்களிலும் ஆட வேண்டியது அவசியமாகும்.
நீங்கள் முழு உடல் தகுதியுடன் இல்லை என்றால், எந்த போட்டியிலும் ஆட வேண்டாம். முதல் டெஸ்டுக்கு பிறகு ஏறக்குறைய 7-8 நாட்கள் இடைவெளி இருந்தது. என்றாலும் 2-வது டெஸ்டுக்கான ஆடும் லெவனில் பும்ராவை சேர்க்காததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒருவேளை இந்த முடிவை தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் ஏற்றுக்கொள்ளலாம்’ என்றார்.
இது தொடர்பாக இர்பான் பதான் கூறும் போது, எல்லா அணிகளும் அவர்களுடைய சிறந்த வீரர் விளையாட வேண்டும் என்று விரும்பும். ஆனால் அது அந்த வீரருடைய பணிச் சுமையை சார்ந்தது. அவர் சோர்வாக இருப்பதாக உணர்கிறாரா? மற்ற ஏதும் சிக்கல் உள்ளதா? என்பதை பொருத்தது. 3-வது போட்டிக்கும், 4-வது போட்டிக்கும் இடையில் 9 நாட்கள் இடைவெளி உள்ளது. இது குணமடைவதற்கு போதுமானதை விட அதிகமான நாட்களாக இருக்கும்.
இது தொடரை தீர்மானிக்கும் போட்டி. காயம் இல்லையென்றால், அவர் கட்டாயம் விளையாட வேண்டும். ஐசிசி சாம்பியன்ஷிப்பில், இதுபோன்ற முக்கிய சூழ்நிலையில், மாற்றம் செய்வது அணி நிர்வாகம் அல்லது பந்து வீச்சாளர்களுக்கு சிறந்தது அல்ல. இதுபோன்ற சூழ்நிலையில், பும்ரா அணியில் இருப்பது கூடுதல் மதிப்பை கொடுக்கும் என்று கூறினார்.
இது குறித்து அனில் கும்ப்ளே கூறும்போது, இந்திய அணிக்கு நான்காவது போட்டி மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது. ஏனெனில் நான்காவது போட்டியில் ஒருவேளை நாம் தோற்கும் பட்சத்தில் இந்த தொடரை இழந்து விடுவோம். எனவே என்னை பொறுத்தவரை நான்காவது போட்டியில் பும்ரா விளையாடியாக வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இத்தகைய சூழலில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்குக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பும்ரா பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் பரவி வரும் நிலையில் அவருக்கு மாற்று வீரராக அர்ஷ்தீப் சிங் களமிறங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையே இந்திய அணியின் மருத்துவக் குழுவினர் ஹர்ஷிப் சிங்குக்கு முதல்கட்ட சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர் நான்காவது டெஸ்டில் விளையாடுவாரா அல்லது தவிர்ப்பாரா என்பது ஓரிரு நாட்களில் தெரியவரும் என இந்திய அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.