கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விவோ ப்ரோ கபடியானது, தற்போது இந்த வருடம் விவோ ப்ரோ கபடியின் சீசன் 12 நேற்று (ஆகஸ்ட் 29ஆம் தேதி) தொடங்கியுள்ளது. கபடிக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஒவ்வொரு வருடங்களும் வரும் இந்த கபடி போட்டி திருவிழாவிற்காக ரசிகர்கள் ஆர்வமாய் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக நேற்று தொடங்கிய கபடி திருவிழாவில் முதல் போட்டியானது, இரவு எட்டு மணி அளவில் தொடங்கப்பட்டது. தமிழ் தலைவாஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளுக்கு இடையே முதலில் போட்டியானது நடைபெற்றது. இந்தப் போட்டியானது விசாகப்பட்டினத்தில் உள்ள விஸ்வநாத் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியானது 38 என்ற புள்ளிக் கணக்கில் தெலுங்கு டைட்டன்சை (புள்ளிகள் 35) வீழ்த்தியது.
தமிழ் தலைவாஸின் கேப்டனாக, பவன் ஷெராவத் உள்ளார். அதேபோல் தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக, விஜய் மாலிக் உள்ளார்.
அதேபோல் இரண்டாம் போட்டியில், பெங்களூரு புல்ஸ் மற்றும் புனேரி பல்டன் ஆகிய இரு அணிகளுக்கு இடையே போட்டியானது நடைபெற்றது. விறுவிறுப்பாக சென்ற போட்டியானது இறுதியில் இரண்டு அணிகளும் (32-32) சமமான புள்ளிகளை எடுத்தன.
பெங்களூர் புல்ஸ் அணியின் கேப்டனாக, அங்குஸ் ராதே உள்ளார். அதேபோல் புனேரி பல்டனின் கேப்டனாக, அஸ்லாம் இனாம்தார் உள்ளார்.
இந்த கபடி போட்டியில் தலா 12 அணிகள் இரு முறை ஒவ்வொரு அணிகளிடம் மோதும்.
தமிழ் தலைவாஸ், புனேரி பல்டன், ஜெய்ப்பூர் பிங் பேந்தர்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், யூ.பி யோத்தா, பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யூ மும்பா, பாட்னா பைரேட்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் போன்ற அணிகள் கபடி போட்டியில் களம் காணப் போகின்றன
பாட்னா பைரேட்ஸ் அணியானது தொடர்ச்சியாக சீசன் 3, சீசன் 4, சீசன் 5 என்று மூன்று முறை இறுதிப் போட்டியை வென்றது. மூன்றாவது முறையாக தங்கள் பட்டத்தை, சாதனையையும் தக்க வைத்துக் கொண்ட ஒரே அணியாகும். ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் சீசன் 1 மற்றும் சீசன் 9 ஆகியவற்றில் இறுதிப் போட்டியை இரண்டு முறை வென்றுள்ளது. அதேபோல் யு மும்பா சீசன் இரண்டிலும், பெங்களூரு புல்ஸ் சீசன் ஆறிலும், பெங்கால் வாரியர்ஸ் சீசன் ஏழிலும், தபாங் டெல்லி கே.சி சீசன் எட்டிலும், புனேரி பால்டன் சீசன் பத்திலும் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் சீசன் 11லும் தலா ஒரு பட்டத்தை வென்றுள்ளன. நடப்பு சாம்பியனாக ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியானது விளங்குகிறது.
தமிழ் தலைவாஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், யூ.பி யோத்தா, தெலுங்கு டைட்டன்ஸ் ஆகிய நான்கு அணிகள்தான் இதுவரை எந்த சீசனிலும் பட்டத்தை வெல்லாத அணிகளாகும்.
தமிழ் தலைவாஸ்சின் ரசிகர்கள் இந்த முறையாவது தமிழ் தலைவாஸ் அணி இறுதிப் போட்டியில் வெல்லுமா என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் மற்ற மூன்று அணிகளின் ரசிகர்களும் தங்களின் அணி வெல்ல வேண்டும் என்ற ஏக்கத்தில் இருக்கிறார்கள். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் இறுதியில் யார் வெல்வார்கள் என்று..!