Cheteshwar Pujara
Test Cricket

புஜாராவின் சேவை இந்திய அணிக்கு அவசியம் தேவை!

Published on

கிரிக்கெட் அரங்கில் வீரர்கள் பலரும் விரும்புவது டெஸ்ட் போட்டிகளைத் தான். நவீன கால கிரிக்கெட்டில் டி20 போட்டிகள் இளசுகளை வெகு விரைவிலேயே கவர்ந்து விட்டாலும், டெஸ்ட் போட்டிகளுக்கான மவுசு இன்னும் குறையவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்களைக் குவிக்கும் வீரர்கள் பலர் உள்ளனர். ஆனால் விக்கெட்டுகள் சரியும் போது, தூணாய் நின்று அணியை சரிவில் இருந்து மீட்டெடுப்பதோடு, கணிசமாக ரன்களையும் குவிக்கும் வீரர்கள் வெகு சிலரே. இந்தியாவில் அப்படிப்பட்ட வீரர்களைப் பட்டியலிட்டால் முதலில் நினைவுக்கு வருபவர் ராகுல் டிராவிட் தான்.

டிராவிட்டின் பொறுப்பான டெஸ்ட் இன்னிங்ஸைப் பார்த்து ‘இந்தியாவின் தடுப்புச் சுவர்’ என்றும் இவரை வர்ணித்தனர். இவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் டிராவிட்டுடன் சம காலத்தில் விளையாடிய விவிஎஸ் லட்சுமணன். இவர்கள் இருவரும் ஆஸ்திரேலியாவில் ஒருநாள் முழுக்க விக்கெட்டை இழக்காமல் விளையாடிய சம்பவம் வரலாற்றில் என்றுமே நிலைத்திருக்கும். இவர்களின் ஓய்வுக்குப் பிறகு அந்த இடத்தை நிரப்பப் போகும் வீரர் யார் என்ற கேள்விக்கு விடையாய் வந்தவர் தான் செதேஷ்வர் புஜாரா.

டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் புஜாரா தான் சமீப காலங்களில் இந்தியாவின் தடுப்புச் சுவராக இருந்துள்ளார். ஒரு கிரிக்கெட் வீரர் 100 டெஸ்ட் போட்டிகளை விளையாடுவது சாதாரண ஒன்றல்ல. இந்தியாவிற்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,195 ரன்களைக் குவித்துள்ளார் புஜாரா. ஒரு இன்னிங்க்ஸில் அதிக பந்துகளை சந்தித்த வீரரும் இவர் தான். அதுவும் ஆஸ்திரேலியாவின் வேகங்களை எதிர்த்து 525 பந்துகளை எதிர்கொண்டு இந்தச் சாதனையைப் படைத்தார்.

கடந்த சில ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளிலும் அதிரடி ஆட்டம் தலைதூக்கத் தொடங்கி விட்டது. இதனால் தான் என்னவோ புஜாரா போன்ற தடுப்பாட்ட வீரர்களுக்கு அணியில் இடம் கிடைக்காமல் போய் விட்டது. இருப்பினும் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்க போராடி வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் புஜாரா இடம் பிடிக்காத நிலையில், அவரது முயற்சி மட்டும் நின்றபாடில்லை. தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி வரும் புஜாரா, தனது விக்கெட்டை எதிரணிக்கு அவ்வளவு எளிதில் கொடுத்து விடுவதில்லை.

கடந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இழந்தது. ஓரிரு வீரர்களைத் தவிர, மற்றவர்களுக்கு பொறுமை என்பதே இல்லாத வண்ணம் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடி தோல்வியை சந்தித்தனர். அந்நேரத்தில் தான் புஜாரா போன்ற தடுப்பாட்ட வீரரின் அவசியத்தை உணர்ந்தது இந்திய அணி. ஆகையால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் புஜாரா நிச்சயமாக சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்.

இதையும் படியுங்கள்:
டெஸ்ட் போட்டிகளில் அதிக பந்துகளை சந்தித்த வீரர் சச்சின் டெண்டுல்கரா?
Cheteshwar Pujara

சுழற்பந்து வீச்சு மற்றும் வேகப்பந்து வீச்சை சமாளித்து பௌலர்களை சோர்வடையச் செய்யும் வேலையை புஜாரா பல போட்டிகளில் கச்சிதமாக செய்துள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காபா டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் தான் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டார். ஆனால் உண்மையில் முக்கிய காரணமாக இருந்தவர் புஜாரா தான்.

பல மணி நேரம் களத்தில் நின்று பௌலர்களை சோர்வடையச் செய்ததால் தான், ரிஷப் பந்தால் அதிரடியாக விளையாட முடிந்தது. இதனை ஆஸ்திரேலிய பௌலர்களே ஒப்புக் கொண்டனர். ஆனால் இந்தியாவில் மட்டும் புஜாராவை யாரும் புகழவில்லை. ரன் குவிப்பது மட்டும் டெஸ்ட் போட்டி அல்ல. களத்தில் பல மணி நேரம் பொறுமையாக விளையாடி பௌலர்களை களைப்படையச் செய்வதும் டெஸ்ட் போட்டியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக கருதப்படும்.

தற்போதைய இந்திய அணியில் இதனைச் செய்வதற்கு யாருமில்லை என்பதே கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்து . தற்போது 37 வயதாகும் புஜாராவால் இன்னும் 3 ஆண்டுகளுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட முடியும். டெஸ்ட் போட்டிகளில் புஜாராவின் சேவை இந்திய அணிக்கு அவசியம் தேவை என்பதை தேர்வுக்குழு உணர வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ரிஷப் பந்த் தன்னைத் தானே கீழிறக்கி கொள்வது சரியா? - சத்தேஷ்வர் புஜாரா ஓபன் டாக்!
Cheteshwar Pujara
logo
Kalki Online
kalkionline.com