வெற்றிக்கான தேடலில் முயற்சியை கைவிடாத பஞ்சாப் கிங்ஸ்!

Punjab Kings
IPL 2025
Published on

உலகளவில் மிகப்பெரிய கிரிக்கெட் தொடராக பார்க்கப்படும் ஐபிஎல் ஒரு நீண்ட தொடர் என்பது பலரும் அறிந்ததே. கிட்டத்தட்ட 2 மாதங்கள் நடைபெறும் இந்தத் தொடரில் இறுதிப்போட்டியில் பட்டம் வெல்லும் அணியைத் தான் அனைவரும் கொண்டாடுவார்கள். ஒரு அணி வெற்றி பெற்று கொண்டாட்டத்தில் திளைக்கும் போது, மற்றொரு பக்கம் தோல்வி கண்ட அணி சோகத்தில் ஆழ்ந்திருக்கும்.

பொதுவாக பலரும் வெற்றி பெற்ற அணியையே அதிகளவில் உற்று நோக்குவார்கள். கேமிராக்கள் கூட தோற்ற அணியின் வீரர்களை காட்டுவதில்லை. இருப்பினும் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வகையில் சிறப்பாக ஆடிய இரு அணிகளும் பட்டத்தை வெல்ல தகுதி வாய்ந்தவை தான். ஆனால் அன்றைய தினம் யார் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்துகிறார்களோ அவர்கள் தான் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் செல்கின்றனர்.

இறுதிப்போட்டியில் தோல்வி கண்ட அணி வெற்றிக்காக கடுமையாக போராடி இருக்கும். வெற்றி பெற்ற அணியின் வீரர்களை மட்டுமே புகழும் நாம், வெற்றிகரமான தோல்வியைப் பெற்ற அணியையும் பாராட்டித் தான் ஆக வேண்டும்.

ஒவ்வொரு விளையாட்டிலும் வீரர்கள் தங்களின் போராட்ட குணத்தை வெளிப்படுத்துவார்கள். வெற்றிக்கான தேடலில் முடிவு எதுவாயினும், முயற்சி மட்டும் தோற்பதில்லை. பெங்களூர் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோற்றிருந்தாலும் கூட, அவர்களின் போராட்ட குணத்திற்கு நாம் மரியாதை அளிக்க வேண்டும்‌. எந்தவொரு அணியும் எதிரணிக்கு அவ்வளவு எளிதாக வெற்றியை விட்டுக் கொடுக்காது.

பஞ்சாப் அணியும் அதற்கேற்ப இறுதிவரை போராடியது. பஞ்சாபின் ஷஷாங்க் சிங் கடைசி நேரத்தில் சிக்ஸர் மழை பொழிந்தார். இருப்பினும் பெங்களூர் அணிக்கு வெற்றி உறுதியானதும், அவர் அடித்த சிக்ஸர்களைப் பற்றி பேச இங்கு யாருமே இல்லை. அதுவும் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜாஸ் ஹேசில்வுட் வீசிய கடைசி ஓவரில் 3 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரியை அடித்தார். வெற்றி இனி நம்வசம் இல்லை என்று தெரிந்தும் கூட, தனது போராட்ட குணத்தை மட்டும் அவர் இழக்கவில்லை. அவரது போராட்டத்திற்கு வெற்றி மட்டும் தான் கிடைக்கவில்லை. அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தும் அது அணியின் வெற்றிக்கு உதவவில்லை என்ற வருத்தத்தில் தன்னை அறியாமலேயே அழுதார் ஷஷாங்க் சிங்.

ஷஷாங்க் சிங் மட்டுமின்றி, பஞ்சாப் அணியின் அனைத்து வீரர்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக அளித்தனர். ஆனால் முடிவு அவர்கள் எதிர்பார்த்தபடி இல்லை. வெறும் 6 ரன்களில் தான் பஞ்சாப் தோல்வியடைந்தது.

இதையும் படியுங்கள்:
ஐபிஎல் வரலாற்றில் முறியடிக்கவே முடியாத 3 தனிநபர் சாதனைகள்!
Punjab Kings

விளையாட்டில் வெற்றியும், தோல்வியும் சகஜம் தான். 18 ஆண்டு கால ஏக்கம் இன்று பெங்களூர் அணிக்கு நிறைவேறி விட்டது. ஆனால் பஞ்சாப் அணிக்கு 18 ஆண்டுகளைக் கடந்தும் அந்த ஏக்கம் இன்னும் தீரவில்லை. இரண்டு முறை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற பஞ்சாப் அணிக்கு சாம்பியன் பட்டம் கைக்கு எட்டவில்லை. நடப்பாண்டு ஸ்ரேயஸ் ஐயரின் தலைமையில் இளம் இந்திய வீரர்களின் அதிரடியில் இறுதிப்போட்டி வரை சென்ற பஞ்சாப் கிங்ஸ், அடுத்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வெல்ல வாழ்த்துகள்‌.

இதையும் படியுங்கள்:
'கிங்' கோலி கைகளில் ஐபிஎல் கோப்பை! கண்களில் ஆனந்த கண்ணீர்! Kohli - RCB 18 வருட பயணம்!
Punjab Kings

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com