
குடும்பத்தில் இருந்தாலும், கூட்டத்தில் இருந்தாலும் ஒவ்வொரு மனிதனும் தனித்தனி மனிதர்தான். தாயும் பிள்ளையும் ஆன போதிலும் வாயும் வயிறும் வேறு வேறு தான். இதில் உள்ள பெரிய தெளிவை நாம் அறிந்து, தெரிந்து, புரிந்து, உணர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தனித்தனி மனிதன்தான். இந்த பூமிக்கு வந்த போது ஒவ்வொருவரும் தனித்தனியாகத்தான் வந்தோம். போகும் போது தனித்தனியாகத் தான் போகப் போகின்றோம்.
வாழ்கின்ற வாழ்க்கையும் தனித்தனி. இதை மறைக்கவோ, மறுக்கவோ புறக்கணிக்கவோ முடியாது. இந்த உண்மையை ஒவ்வொருவரும் ஒப்புக் கொள்ள வேண்டும். அந்த உண்மையில் இருந்துதான் விழிப்புணர்வே ஆரம்பமாகிறது.
தான் உண்மையிலேயே என்ன செய்ய வேண்டும்? என்ன செய்தால் அது தனக்கு ஏற்புடையதாக இருக்கும்? என்ன வாழ்க்கை வாழ விரும்புகிறோம்? என்ன வாழ்க்கை வாழ்ந்தால் நன்றாக இருக்கும்? வாழ்க்கை விருப்பத் தேர்வுகள் என்னென்ன? தேர்வுகளை தேர்ந்தெடுத்து விட்டோமா? போன்ற பல கேள்விகள் தோன்றும்.
அதன்வழி கிடைக்கின்ற பதில்களைக் கொண்டு தன்னைத்தானே உணர்ந்து தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள நிறைய வழிகள் பிறக்கின்றன. அவைகளைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொருவரும் வாழ வேண்டும். அப்படி வாழ்கின்ற வாழ்க்கை தனக்கு உகந்ததாக இருக்க வேண்டும்.
இப்படி ஒவ்வொருவருமே தன்னுடைய வாழ்க்கையை வாழ முற்படும்போதுதான் மற்றவர்களுடைய அதாவது, பிற மனிதர்களுடைய வாழ்க்கையையும் மதித்து அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைக்க முடியும். வாழ விடவும் முடியும். வாழ வழி வகுத்துக் கொடுத்திடவும் முடியும்.
தானும் வாழ்ந்து மற்றவரையும் வாழ வைத்து வரப் போகின்ற எதிர்காலச் சந்ததியினரையும் வாழ வைப்பதுதான் இந்தப் பூமிக்கு வந்திருக்கின்ற ஒவ்வொரு மனிதனின் தலையாய பொறுப்பாகும்.
அதுமட்டுமல்ல, சிறந்ததொரு மனித சேவையும் ஆகும். இத்தகைய சிறந்ததொரு மனித காரியத்தை மனித சேவையை ஒவ்வொருவருமே பொறுப்பாக செயலாற்றினால் தான் அர்த்தமுள்ள, பிரயோஜனமுள்ள, ஆக்கபூர்வமான சாதனைகள் நிறைந்த வெற்றி வாழ்க்கை அமையும்.
அப்படிப்பட்ட அர்த்தமுள்ள, ஆக்கபூர்வமான சாதனைகள் நிறைந்த வெற்றிகரமான வாழ்க்கையை ஒவ்வொருவரும் அமைத்துக் கொள்ள ஒவ்வொருவரும் நல்ல விழிப்புணர்வை அடைந்திருக்க வேண்டும்.