

150 வருடங்களாக விளையாடப்பட்டு வரும் டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரம் பல ஏற்ற தாழ்வுகளை கண்டு வந்ததுடன் பல்வேறு சாதனைகளுக்கு காரணமாகவும் அமைந்துள்ளது.
கிரிக்கெட் டெஸ்ட் வரலாற்றில் ஏற்பட்ட சில அரிய நிகழ்வுகளில் ஒன்றைப் பற்றி இங்கு காண்போம்.
மேற்கு இந்திய கிரிக்கெட் டெஸ்ட் வீரர்கள் மூவர் பற்றி சில விவரங்கள்.
பொதுவாக ஜோடியாக இரண்டு வீரர்கள் பவுலிங் அல்லது பேட்டிங்கில் சேர்ந்து ஆடி சாதனைகள் பல படைத்துள்ளனர்.இந்த மூன்று வீரர்கள் சில ஒற்றுமைகள் கொண்டு சாதித்து சுமார் 10 வருடங்கள் சேர்ந்து டெஸ்ட் மேட்சுக்கள் ஆடி அசத்தியுள்ளனர்.மூவரின் பெயர்களில் ஆங்கில முதல் எழுத்து W ல் அமைந்தது ஒரு முக்கிய ஒற்றுமை ஆகும்.
அவர்கள் Worrel, Walcott and Weeks (ஒறேல், வால்காட், வீக்ஸ்) ஆவார்கள். இவர்கள் ஆட்ட திறமைகளால் புகழ் பெற்ற த்ரீ டபிள்யூஸ் ( famous Three W s ) என்று அழைக்கப்பட்டனர்.
இந்த மூவரும் கிட்டத்தட்ட 18 மாதங்கள் இடை வெளியில் மேற்கு இந்திய தீவுகளின் பார்படாஸ் பகுதியில் பிறந்தவர்கள்.மூவரின் தாயார்களுக்கும் இவர்கள் பிறக்கும் பொழுது பிரசவம் பார்த்தது ஒரே தாதி ( mid wife ) என்று பரவலாக நம்பப்படுகிறது.
ஒறேல், வால்காட், வீக்ஸ் மூவரும் தங்கள் இளம் பருவத்தில் கிரிக்கெட் விளையாடியதும் , பிற்காலத்தில் முதல் தர கிரிக்கெட்டில் முத்திரை பதித்ததும் பார்படாஸ் மண்ணில் மற்றும் அணிக்காக அதோடு நின்று விடாமல் மூவரின் நட்ப்பும் தொடர்ந்தது மேற்கு இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் அணிக்காக சேர்ந்து ஆடி அசத்திய போதும்.
1948 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் மேட்சில் (பிரிட்ஜ் டவுன் ) மொத்தம் 12 வீரர்கள் அறிமுகம் ஆனார்கள். இங்கிலாந்து அணிக்காக 5. மேற்கு இந்திய அணி வீரர்கள் 7. அதில் தனி திறமைகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முத்திரை பதித்தவர்கள் ஜிம் லேக்கர் ( ஒரே டெஸ்டில் 19 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதித்தவர். மேற்கு இந்திய வீரர்கள் வால்காட் , வீக்ஸ் ).
அடுத்த டெஸ்டில் ( போர்ட் ஆப் ஸ்பெயின் ) அறிமுக ஆனவர் ஒறேல். இவர் அறிமுக டெஸ்டில் எடுத்த ரன்கள் 97.
இந்த மூன்று வீரர்களும் சேர்ந்து ஆடிய கடைசி டெஸ்ட் ஓவல் மைதானத்தில் 1957 ஆகஸ்டில், இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்த இடைப்பட்ட 10 வருடங்களில் இந்த மூவரும் சேர்ந்து ஆடியது 29 டெஸ்டுக்கள்.
பெரும்பாலான டெஸ்டுக்களில் மூவரும் வரிசையாக அடுத்து அடுத்து களம் இறங்கி தங்கள் அசத்தலான
பேட்டிங் திறமைகளை வெளிப்படுத்தி எதிரணியினருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தனர்.
ஒறேல் நேர்த்தியாகவும், நிதானமாகவும், அடித்தும் ஆடும் திறமை கொண்டவர். இவர் தான் பிற்காலத்தில் மேற்கு இந்திய தீவுகளின் முதல் கருப்பு இன கேப்டனாக திகழ்ந்தவர்.
மனிதாபிமானம் கொண்ட இவர் ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் சரித்திரத்தின் முதல் டை டெஸ்டின் கேப்டனாக இருந்தவர். ( First ever tied test )
இந்திய கேப்டன் நாரி கண்ட்ராக்டர் தலையில் அடி பட்டு உயிருக்கு போராடிய பொழுது ஒறேல் இரத்தம் கொடுத்தது அல்லாமல் அந்த மருத்துவமனையில் இருந்து அவர் உயிர் பிழைக்க உதவிகள் செய்தார்.
இவர் வாழ்ந்தது 42 வருடங்களே. 51 டெஸ்ட். 3860 ரன்கள். 9 சதங்கள். சராசரி 49.48 ரனகள். அதிக பட்சம் 261 ரன்கள்.69 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
வால்காட் 6 அடிக்கு மேல் உயரம் கொண்ட இவர் 44 டெஸ்டுகளில் குவித்த ரன்கள் 3798.சதங்கள் 15. சராசரி ரன்கள் 56.68.. அதிக பட்சம் 220. இவர் மறைந்தது 80 வயதில். அடித்து ஆடுபவதில் வல்லவர். உயரமாக திகழ்ந்த பொழுதும் முதல் கால கட்டத்தில் விக்கெட் கீப்பராகவும் விளையாடியவர். பிடித்த கேட்சுக்கள் 53. செய்த ஸ்டம்பிங்கள் 11.
மூன்றாவது புகழ் பெற்ற W வீரர் வீக்ஸ் ஒரு சிறந்த பேட்ஸ்மன் ஆக கருதப் பட்டவர்.குட்டையாகவும், பருமனாக காட்சியளித்த வீக்ஸ் பேட்டிங்கில் எல்லா வகை ஆட்டங்களிலும் திறமை கொண்டவர்.
1948 ல் கிங்ஸ்டன் டெஸ்டில் வீக்ஸ் இங்கிலாந்து அணிக்கு எதிராக 141 ரன்கள் எடுத்தார். அடுத்த தொடர் இன்னிங்ஸ்களில் மேலும் 4 சதங்கள் ( வரிசையாக மொத்தம் 5 சதங்கள் குவித்து ) மகத்தான சாதனை படைத்தார்.அந்த 4 சதங்கள் இந்திய மண்ணில் எடுத்தது. முறையே டெல்லி 128 பம்பாய் 194, கல்கத்தா 162 & 101.
தொடர்ந்த மெட்ராஸ் டெஸ்டின் முதல் இன்னிங்சில் தனது பேட்டிங்கை சிறப்பாக வெளிப் படுத்தி அடுத்த சதத்தை நெருங்கி வந்த தருணத்தில் வீக்ஸ் சர்ச்சைக்கு உரிய முறையில் அவுட் கொடுக்கப் பட்டு அந்த சதத்தை மிஸ் செய்தார். அவர் எடுத்த ரன்கள் 90.
அந்த சுற்றுப் பயணத்தில் வால்காட் எடுத்த இரண்டு சதங்கள். டெல்லி 152, கல்கத்தா 108.
வீக்ஸ் தொடர்ந்து 7 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 50 ரன்களுக்கு மேல் எடுத்த சாதனையாளாரும் ஆவார்.
1953 - 54 ல் நான்காவது டெஸ்ட் மேட்சில் இங்கிலாந்து அணிக்கு எதிராக வீக்ஸ், ஒறேல், வால்காட் மூவரும் ஒரே இன்னிங்சில் சதங்கள் எடுத்து அசத்தினார்கள்.வீக்ஸ் 206, ஒறேல் 167, வால்காட் 124.
வீக்ஸ் மற்றும் ஒறேல் ஜோடி சேர்ந்து மூன்றாவது விக்கெட்டிற்கு குவித்த ரன்கள் 338.
வால்காட்டும் ஒறேல் ஜோடி சேர்ந்து ஒருமுதல் தர மேட்சில் குவித்த ரன்கள் 574.
வால்காட் 314*, ஒறேல் 255*
வால்காட் , வீக்ஸ் ஜோடி 242 ரன்கள் எடுத்தனர் இங்கிலாந்து அணிக்கு எதிராக 1950 லார்ட்ஸ் டெஸ்டில் இந்த டெஸ்டில் சதம் அடித்த வால்காட் ஸ்கோர் 168* .
வீக்ஸ் தனது 95 வது வயதில் மறைந்தார். 48 டெஸ்டுகள். 4455 ரன்கள். சராசரி 58.61. சதங்கள் 15. அதிக பட்சம் 207.
ஒறேல், வால்காட், வீக்ஸ் மூவருக்கும் சர் பட்டம் வழங்கி கவுரவிக்கப் பட்டனர். இவர்கள் மூவரின் பங்களிப்புக்களுக்காக பார்படாஸ் , மேற்கு இந்திய தீவில் பல்கலைகழகம் அருகில் ஒரு விளையாட்டு மைதானத்திற்கு 3Ws என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதை தவிர இந்த மைதானத்தில் மிகப்பெரிய ஸ்டம்புக்கள் சிலை நிறுவப்பட்டுள்ளது.
இந்த மைதானத்தின் பூங்காவில் ஒறேல், வால்காட், வீக்ஸ் மூவரின் மார்பளவு சிலைகள் ( bust ) அலங்கரிக்கின்றது.
சர் பிராங் ஒறேல் ( Sir Frank Worrell)
சர் கிளைதே வால் காட் ( சர் Clyde Walcott )
சர் ஏவெர்டன் வீக்ஸ் ( Sir Everton Weeks )
மூவரும் தங்கள் தனி திறமைகளால் மேற்கு இந்திய கிரிக்கெட் அணிக்கு குறிப்பாக பேட்டிங்கில் ரன்களை குவித்து மதிப்பை உயர்த்த காரணகர்த்தாக்களாக திகழ்ந்தனர் என்பது மறுக்க , மறக்க முடியாத உண்மையாகும்.