RIP அன்ஷுமன் கெய்க்வாட் - மிக மெதுவான இரட்டை சதத்திற்கு சொந்தக்காரர்!

Anshuman Gaekwad
Anshuman Gaekwad
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் அன்ஷுமன் கெய்க்வாட் நேற்று மரணமடைந்தார். ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நீண்ட நாட்கள் நோயுடன் போராடிக் கொண்டிருந்தார். சென்ற மாதம்வரை லண்டனில் சிகிச்சை மேற்கொண்டிருந்த அவர் சமீபத்தில்  பரோடாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி புதன்கிழமையன்று (31 ஜூலை 2024) காலமானார். 

அன்ஷுமன் கெய்க்வாட், இந்திய அணியின் பயிற்சியாளராக இரண்டு முறை பணியாற்றி உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளராகவும் அவர் இருந்துள்ளார். 1997 இல் ஒரு முறையும் 2000 இல் இடைக்கால பயிற்சியாளராக ஒரு முறையும் இவர் பணியாற்றியுள்ளார். ஆஸ்திரேலியாவை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் வென்றது, சுதந்திரக் கோப்பை வெற்றி (Independence Cup) , பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு சீரிஸை சமன் செய்தது அனைத்தும் இவர் பயிற்சியாளராக இருந்தபொழுது  நடந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுகள். அந்த பாகிஸ்தான் ஆட்டத்தில் தான் ஒரு இன்னிங்சில் அனில் கும்ப்ளே பத்து விக்கட்களையும் வீழ்த்திச் சாதனை புரிந்தார். 

ஹெல்மெட்கள், சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத அந்தக் காலத்தில் கவாஸ்கருடன் இணைந்து துவக்க ஆட்டக்காரராகக் களமிறங்கினார் கெய்க்வாட். பாகிஸ்தானுக்கு எதிராக 671 நிமிடங்கள் ஆடி இவர் எடுத்த 201 ரன்கள் முதல் தரக் கிரிக்கெட் போட்டிகளில் அடிக்கப்பட்ட மிக மெதுவான இரட்டை சதமாக அந்தச் சமயத்தில் இருந்தது! அந்த அளவு, பந்து வீச்சாளர்களைக் களைப்படைய வைப்பது இவரது பாணி. 

மேற்கிந்திய பயணத்தின்போது ஹோல்டிங் வீசிய ஒரு பவுன்சர் இவர் காதுகளைப் பதம் பார்த்து ரத்தம் கொட்டியது. அதற்கெல்லாம் பயப்படாமல் ஒரு பிளாஸ்டர் போட்டுக் கொண்டு ஆட்டத்தைத் தொடர்ந்தார். மைதானத்தில் இருந்த ரசிகர்கள் "அடித்து வீழ்த்து அவனை" என்று கோஷம்  போட்டனர். "சாதாரணமாகவே வெளியில் உள்ள சத்தம் என்னைப் பாதிக்காது. இதில் பிளாஸ்டர் போட்டுக் காதுகள்  மூடிவிட்டதால் எனக்கு எதுவும் கேட்கவே இல்லை" என்று சிரித்துக் கொண்டே சொன்னார் கெய்க்வாட். அவர்கள் அடுத்தடுத்துப் போட்ட பவுன்சர்களை தைரியமாக எதிர்கொண்டு 81 ரன்கள் அடித்த பிறகே ஆட்டமிழந்தார். அனைவரிடமும் பாராட்டுகளையும் கைதட்டல்களை பெற்ற  ஒரு இன்னிங்ஸ் அது. இந்தப் போட்டிக்குப் பிறகு அந்தக் காதுக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. 

இதையும் படியுங்கள்:
இந்திய டென்னிஸ் நாயகன் ரோகன் போபண்ணா!
Anshuman Gaekwad

சமீபத்தில், கபில்தேவ் மற்றும் சந்தீப் பாட்டில் இருவரும் இவரது மருத்துவ செலவுக்கு உதவ வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் போர்டிடம் கோரிக்கை விடுத்தனர். போர்டும் ஒரு கோடி ரூபாய் அவருக்கு அளித்தது. நாற்பது டெஸ்ட் போட்டிகள் பதினைந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இப்போது இருக்கும் மூத்த ஆட்டக்காரர்கள் அனைவராலும் விரும்பப்பட்டவராகவும், மதிக்கப்பட்டவராகவும் இருந்தார். நாற்பது டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் எழுபது இன்னிங்ஸ்களில் 1985 ரன்கள் எடுத்துள்ளார். இவருடைய மறைவுக்கு பிரதமர் மோடி, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா, சௌரவ் கங்குலி உள்ளிட்ட மூத்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் தங்கள் இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com