சிங்கமா கர்ஜிச்சவங்க... இப்ப பூனையா மாறிட்டாங்களே - ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் சோகக் கதை..!

Rise and Fall of Sri Lankan Cricket Team
Rise and Fall of Sri Lankan Cricket Team
Published on

Rise and Fall of Sri Lankan Cricket Team:

90-களின் இறுதியில் பிறந்தவர்களிடமும், 2000-களில் கிரிக்கெட் பார்த்தவர்களிடமும் கேட்டுப்பாருங்கள், இலங்கை அணி என்றால் என்ன? என்று. அர்ஜுன ரணதுங்காவின் கெத்து, சனத் ஜெயசூர்யாவின் அதிரடி, முரளிதரனின் சுழல் வித்தை என்று சிலிர்ப்போடு சொல்வார்கள். ஒரு காலத்தில் இந்தியாவிற்கே சிம்ம சொப்பனமாக விளங்கிய அணி அது. 

ஆனால், இன்று கத்துக்குட்டி அணிகளிடம் கூடத் தோற்றுப்போகும் நிலையில் இலங்கை அணி இருப்பதைப் பார்க்கும்போது, உண்மையான கிரிக்கெட் ரசிகர்களுக்கு நெஞ்சம் வலிக்கிறது. உலகக்கோப்பையை வென்று, உலகத்தையே ஆண்ட ஒரு அணி, எப்படி இவ்வளவு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது? 

இலங்கையின் எழுச்சி!

இலங்கை கிரிக்கெட்டின் பொற்காலம் என்றால் அது 1996 உலகக்கோப்பை வெற்றிதான். அர்ஜுன ரணதுங்க என்ற ஒரு தலைவன், அந்தச் சிறிய தீவு நாட்டை உலக அரங்கில் தலைநிமிரச் செய்தான். அதன் பிறகு அரவிந்த டி சில்வா, ஜெயசூர்யா, சமிந்த வாஸ், முரளிதரன் என்று ஜாம்பவான்கள் உருவானார்கள். 

அவர்களைத் தொடர்ந்து சங்கக்கரா, மஹேலா ஜெயவர்தனே, தில்ஷன், மலிங்கா போன்ற வீரர்கள் அணியைத் தாங்கிப் பிடித்தார்கள். 2007 உலகக்கோப்பை இறுதிப்போட்டி, 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டி, 2012 மற்றும் 2014 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி எனத் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினார்கள். உலகின் எந்த அணியாக இருந்தாலும் இலங்கையை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல என்ற நிலை இருந்தது.

வீழ்ச்சியின் ஆரம்பம்!

இலங்கை அணியின் சரிவு, சங்கக்கரா மற்றும் ஜெயவர்தனே போன்ற ஜாம்பவான்களின் ஓய்வுக்குப் பிறகுதான் தொடங்கியது. பொதுவாக, ஒரு பெரிய வீரர் ஓய்வுபெறும்போது, அவருக்கு மாற்றாக இன்னொரு வீரரை அந்த அணி தயார் செய்து வைத்திருக்கும் (இந்தியாவில் சச்சினுக்குப் பிறகு கோலி வந்தது போல). ஆனால், இலங்கை கிரிக்கெட் வாரியம் அடுத்தத் தலைமுறை வீரர்களைச் சரியாக வளர்க்கத் தவறிவிட்டது. அனுபவமில்லாத இளம் வீரர்கள், சரியான வழிகாட்டுதல் இன்றி தத்தளிக்க ஆரம்பித்தனர்.

அரசியல், ஊழல்!

இலங்கை அணியின் இந்த மோசமான நிலைக்கு மிக முக்கியக் காரணம் 'அரசியல்'. கிரிக்கெட் வாரியத்தில் அரசியல்வாதிகளின் தலையீடு அதிகமானதால், திறமையான வீரர்களை விட, சிபாரிசு உள்ளவர்களுக்கே வாய்ப்பு கிடைத்தது. அடிக்கடி கேப்டன்களை மாற்றுவது, பயிற்சியாளர்களைத் தூக்குவது என்று எந்த ஒரு நிலையான தன்மையும் இல்லாமல் போனது. இது வீரர்களின் மன உறுதியை வெகுவாகப் பாதித்தது. மேலும், ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் வீரர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாத அளவுக்கு வாரியத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடி ஆகியவை அணியைச் சிதைத்தன.

இதையும் படியுங்கள்:
பழைய துண்டை தூக்கிப் போடும் முன் இதை ஒருமுறை படியுங்கள்... அப்புறம் வருத்தப்படுவீங்க!
Rise and Fall of Sri Lankan Cricket Team

ஒழுக்கமின்மை!

பழைய வீரர்களிடம் இருந்த அந்தப் போர்க்குணம், ஒழுக்கம் இன்றைய வீரர்களிடம் குறைந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஃபிட்னஸ் பிரச்சனைகள், களத்திற்கு வெளியே நடக்கும் சர்ச்சைகள் என வீரர்கள் தங்கள் கவனத்தைச் சிதறடித்தனர். இதன் உச்சக்கட்டமாகத்தான், சமீபத்திய ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் வெறும் 50 ரன்களுக்குச் சுருண்டு, சொந்த மண்ணில் அவமானத்தைச் சந்தித்தது இலங்கை அணி.

வெற்றி தோல்வி என்பது வீரர்களுக்கு மட்டுமல்ல, அணிகளுக்கும் சகஜம் தான். ஆனால், ஒரு சாம்ராஜ்யமே சீட்டுக்கட்டு போலச் சரிவதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இலங்கை கிரிக்கெட் மீண்டும் எழுந்து வர வேண்டுமானால், வாரியத்தில் இருக்கும் அரசியல் களையப்பட வேண்டும். திறமையான இளம் வீரர்களுக்குச் சரியான வாய்ப்பும், கால அவகாசமும் கொடுக்கப்பட வேண்டும். 

இதையும் படியுங்கள்:
பொன்வண்டுகளின் அதிசய உலகம்: 50 ஆண்டு கால தவம்!
Rise and Fall of Sri Lankan Cricket Team

ஏனென்றால், கிரிக்கெட் உலகம் சுவாரஸ்யமாக இருக்க வேண்டுமென்றால், அந்த பழைய 'இலங்கைச் சிங்கங்கள்' மீண்டும் கர்ஜிக்க வேண்டும் என்பதே அனைத்து ரசிகர்களின் விருப்பம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com