

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு,2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. காலே மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி மிக சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது. கே. எல். ராகுல் மற்றும் தேவ்தூத் படிக்கல் ஆகியோர் ரன்களை குவித்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தினை அளித்தனர். இந்திய அணி சார்பில் கே.எல்.ராகுல் 82 ரன்களும் , படிக்கல் 167 ரன்களும் எடுத்தனர். முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 462 /10 ஸ்கோரை எட்டியது.
அடுத்து களம் இறங்கிய இலங்கை அணி 284 ஸ்கோர் அடித்து ஆட்டமிழந்தது. இலங்கை அணியின் தினுஷா 100 ரன்களும் நிரோஷன் திக்வெல்ல 80 ரன்களும் எடுத்து அணி பாலோ ஆன் செய்வதை தடுத்தனர். இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 193 ஸ்கோரை மட்டுமே குவித்தது. இந்த இன்னிங்சில் ரிசப் பண்ட் மட்டும் அதிகபட்சமாக 66 ரன்களை அடித்தார்.
ரிஷப் இந்த போட்டியில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 பிரம்மாண்ட சிக்சர்களை விளாசியுள்ளார். அவர் அடித்த இமாலய சிக்சர்கள் இலங்கை பந்து வீச்சாளர்களை மிரள வைத்தது. ரிஷப் அடித்த சிக்சில் பந்து மைதானத்தையும் தாண்டி பறந்து , நகர சாலையில் விழுந்துள்ளது. இந்த சாதனை சிக்சர் உடன் மேலும் பல உலக சாதனைகளை ரிஷப் படைத்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 100 சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 4918 பந்துகளை எதிர் கொண்டு ரிஷப் இந்த சாதனையை செய்துள்ளார். மேலும் ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் 6578 பந்துகளை செய்த இந்த சாதனையை(100 சிக்சர்கள்), மிகக் குறைவான பந்துகளை எதிர் கொண்டு ரிஷப் முறியடித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் 138 சிக்கர்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் பிராண்டன் மெக்கலம் 107 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
அத்துடன் ரிஷப் விரைவாக சிக்ஸர்கள் அடித்து குறைந்த காலத்திலேயே இந்த இடத்தினை பிடித்துள்ளார்.இந்த டெஸ்ட் போட்டி தொடங்கும் முன்னரே ரசிகர்கள் காத்திருந்த அந்த தருணத்தை ரிஷப் பூர்த்தி செய்துள்ளார். விரைவில் ரிஷப் இரண்டாம் இடத்தை பிடிப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
காலே டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவும் ஒரு குறிப்பிட்ட வாழ்நாள் சாதனையையும் செய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 4000 ரன்களை கடந்தும் , 350 விக்கெட்டுகளையும் சாய்த்த உலகின் 4-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், பேட்டிங்கில் 5248 ரன்களைக் கடந்தும் பவுலிங்கில் 434 விக்கெட்டுகளை எடுத்தும் உலகின் மிகச் சிறந்த ஆல்ரவுண்டராக முதலிடத்தில் இருக்கிறார். இந்தப் பட்டியலில் இயன் போத்தம் 5200 ரன்களைக் குவித்தும் 383 விக்கெட்டுகளை எடுத்தும் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் டேனியல் வெட்டோரி 4531 ரன்கள் குவித்தும், 362 விக்கெட்டுகளை சாய்த்தும் சாதனை செய்துள்ளார்.
தற்போது இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 175 /6 ரன்களை எடுத்துள்ளது , மேலும் 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையை நோக்கி தள்ளாடி வருகிறது .