இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோரை அழைத்து சில முக்கியமான கேள்விகளை பிசிசிஐ கேட்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
சமீபத்தில் ஆஸ்திரேலியா இந்திய அணிகளிடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்தது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்தது. அதுவும் ஐந்து நாட்களுக்கு குறைவான நாட்களிலேயே ஆட்டத்தை முடித்தது. இரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பானில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் தொடங்கியது.
மூன்றாவது போட்டி ட்ராவில் முடிந்தது. இதனையடுத்து நான்காவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது. அதேபோல் ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியா அணியே வெற்றிபெற்றது.
இதை அடுத்து 3 - 1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றது. ஆஸ்திரேலியா அணி சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு பார்டர் கவாஸ்கர் தொடரைக் கைப்பற்றியது.
இதற்கு முன்னர் நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி விளையாடியது. அதிலும் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனால் கேப்டன் ரோஹித் ஷர்மா மீதும், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மீதும் விமர்சனங்கள் எழுந்தன.
ஆஸ்திரேலியா அணியுடனான தொடர் மிகவும் முக்கியமானதாக கருதப்பட்ட நிலையில், அதிலும் இந்திய அணி தோல்வியடைந்ததால் கேப்டனும் பயிற்சியாளரும் மீண்டும் விமர்சிக்கப்பட்டார்கள்.
அதேபோல் ஆஸ்திரேலியா உடனான தொடரில் மிகவும் முக்கியமாக பேசப்பட்டது அஸ்வினின் ஓய்வுதான். இதற்கு அவர் தந்தை விமர்சனம் செய்திருந்தார்.
ஆகையால், பிசிசிஐ உயர் அதிகாரிகள் மற்றும் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் அது குறித்து விவாதிக்க கூட்டத்தை நடத்த உள்ளனர். அதில் இந்திய அணி பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்க உள்ளனர்.
அவர்களிடம் இந்திய அணியின் தோல்வி குறித்தும், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் குறித்தும், கடைசி போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா விலகியது பற்றியும் கேள்விகள் கேட்கப்பட உள்ளன. இவற்றை தாண்டி அஸ்வினின் திடீர் ஓய்வுக்கு என்ன காரணம் என்பது குறித்தும் கேள்வி கேட்க உள்ளனராம். இதன் பின்னணியில் என்ன நடந்திருக்கிறது என்பதை அறிய பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது.
ஒருவேளை அஸ்வின் ஓய்வை அறிவிக்க முடிவெடுத்திருந்தால், தொடர் முடிந்த பிறகு அறிவித்திருக்கலாம். ஆனால், அவசரமாக ஓய்வை அறிவித்தது ரசிகர்களுக்கும் கிரிக்கெட் வட்டாரத்தினருக்கும் மிகப்பெரிய ஷாக்காக அமைந்தது குறிப்பிடத்தக்கது.