
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். ‘பிளே-ஆப்’ சுற்றை எட்டுவதற்கு 9 வெற்றிகள் தேவையாகும்.
இதுவரை எந்த அணியும் அடுத்த சுற்றை உறுதி செய்யவில்லை. இன்னும் 14 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியிருப்பதால் இனி ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த நிலையில் இன்றிரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்றிரவு நடந்த 57-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொண்டது.
‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்கள் ரமனுல்லா குர்பாஸ் 11 ரன்னிலும், சுனில் நரின் 26 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
மிடில் வரிசையில் கேப்டன் அஜிங்யா ரஹானே 48 ரன்களும், ஆந்த்ரே ரஸ்செல் 38 ரன்களும், மனிஷ் பாண்டே 36 ரன்களும் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சவாலான ஸ்கோருக்கு வித்திட்டனர். இதனால் 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது.
சென்னை தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது 4 ஓவர்களில் 31 ரன் மட்டுமே வழங்கி 4 விக்கெட்டுகளை அள்ளினார்.
அடுத்து 180 ரன் இலக்கை நோக்கி ஆடத்தொடங்கிய சிஎஸ்கே அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ஆயுஷ் மாத்ரே, டிவான் கான்வே இருவரும் ரன் கணக்கை தொடங்கும் முன்பே நடையை கட்டி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.
3-வது வரிசையில் களம் புகுந்த புதுமுக பேட்ஸ்மேன் உர்வில் பட்டேல் சிறிது நேரம் சிக்சர் மழை பொழிந்து ரசிகர்களை குஷிப்படுத்திய நிலையில் 31 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
அதனை தொடர்ந்து களம் இறங்கிய அஸ்வின் 8 ரன்னிலும், ஜடேஜா 19 ரன்னிலும் ஆட்டம் இழந்தால் சிஎஸ்கே அணி தடுமாறத்தொடங்கியது. ஒரு கட்டத்தில் 5.2 ஓவர்களில் 60 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடிய சிஎஸ்கே அணியை டிவால்ட் பிரேவிசும், ஷிவம் துபேவும் ஜோடி போட்டு சிஎஸ்கே அணியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றதுடன் பிரேவிஸ் 52 ரன்னிலும், ஷிவம் துபே 45 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினர். கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்ட போது களம் இறங்கிய தோனி முதல் பந்தை சிக்சர் அடித்த நிலையில் கம்போஜ் பவுண்டரி அடித்து சுபம் போட்டார். இதனால் சிஎஸ்கே 19.4 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 183 ரன்கள் குவித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட சிஎஸ்கே அணிக்கு இது ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது.