

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வலம் வருகிறது. இதுவரை ஐந்து முறை கோப்பையை உச்சி முகர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ், கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் சொதப்பி வருகிறது. அதிலும் குறிப்பாக நடப்பாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் முதல் முறையாக கடைசி இடத்தைப் பிடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
சென்னையின் கேப்டன் எம்எஸ் தோனியால் அதிக நேரம் பேட்டிங் செய்ய முடியாத சூழலில், அவருக்கான மாற்று வீரரைத் தேடி வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் கேபடன் சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் மாற்றப் போவதாக கடநத சில மாதங்களாக பேச்சுகள் அடிபட்டன.
தற்போது ஆல்ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரனை ராஜஸ்தான் அணிக்கு கொடுத்து விட்டு, சஞ்சு சாம்சனை வாங்கி விட்டது சென்னை அணி. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் 19 ஆவது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் அபுதாபியில் டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கு முன்பாக ஐபிஎல் அணிகள் தாங்கள் தக்க வைக்கும் மற்றும் விடுவிக்கப் போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். அதோடு அணிகளுக்குள் வர்த்தக ரீதியாக டிரேடிங் முறையில் வீரர்களையும் மாற்றிக் கொள்ளலாம்.
தோனிக்குப் பிறகு சென்னை அணியை சிறப்பாக வழி நடத்த சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் வாங்க ராஜஸ்தான் அணியை நாடியது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம். ஆனால் சஞ்சு சாம்சனுக்கு மாற்றாக நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த சாம் கரன் ஆகியோரை ராஜஸ்தான் அணி கேட்டது. இரு அணி நிர்வாகத்திற்கும் இடையே கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தையில் இருந்த இந்த டிரேடிங் முறை, இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதன்படி 2 ஆல்ரவுண்டர்களை ராஜஸ்தானிற்கு கொடுத்து விட்டு, சஞ்சு சாம்சனை சென்னை அணி வாங்கியது. இந்த டிரேடிங் முறையை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஐபிஎல் நிர்வாகங்கள் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளன.
மேலும் 2026 ஐபிஎல் தொடரில் இளம் வீரர்களை களமிறக்க சென்னை அணி திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், தீபக் ஹூடா, டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகிய 6 வீரர்களை விடுவிக்கத் திட்டமிட்டுள்ளது.
கடந்த 11 சீசன்களாக தொடர்ந்து ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன், 4,027 ரன்களைக் குவித்துள்ளார். பல சீசன்களாக ராஜஸ்தான் அணியை சிறப்பாக வழி நடத்திய சஞ்சு சாம்சனுக்கும், அணி நிர்வாகத்திற்கும் இடையேயான உறவில் கடந்த ஐபிஎல் தொடரின் போது விரிசல் ஏற்படத் தொடங்கியது.
ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களுள் ஒருவரான ரஞ்சித் பர்தாகூரின் உறவினர் தான் ரியான் பராக். இந்நிலையில் ரியான் பராக்கை ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஆக்க அணி நிர்வாகம் கடந்த தொடரிலேயே முயற்சி செய்தது. அதற்கேற்ப ஒரு சில போட்டிகளில் ரியான் பராக் கேப்டன்சியும் செய்தார். இதனால் தான் சஞ்சு சாம்சனை மிக எளிதாக சென்னை அணிக்கு விட்டுக் கொடுத்துள்ளது ராஜஸ்தான் அணி.
கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னை அணி கோப்பையைக் கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தவர் ரவீந்திர ஜடேஜா. கடைசி இரண்டு பந்துகளில் ஜடேஜா ஒரு சிக்சர் மற்றும் ஒரு ஃபோர் அடித்து, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற அந்தத் தருணத்தை இன்றும் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். இந்நிலையில் ஜடேஜாவை டிரேடிங் செய்தது சென்னை அணிக்கு இழப்பு தான் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்