
இந்தியாவில் ஆண்டுதோறும் பிசிசிஐ சார்பில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் 18 வது சீசனை பூர்த்தி செய்த ஐபிஎல் தொடரில், ஏகப்பட்ட சாதனைகள் படைக்கப்பட்டன. பல இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபித்தனர். அதோடு இதுவரை கோப்பையை வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கோப்பையை வென்று பல ஆண்டுகள் கனவை நனவாக்கியுள்ளது.
விராட் கோலியின் கைகளில் எப்போது ஐபிஎல் கோப்பை தவழும் என எதிர்ப்பார்த்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு, நடப்பாண்டில் அது நடந்தேறி விட்டது. இறுதிப்போட்டியில் பஞ்சாப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய பெங்களூர் அணிக்கு இந்தாண்டு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. உலகக்கோப்பை மற்றும் ஐபிஎல் போன்ற பெரிய கிரிக்கெட் தொடர்கள் நடந்து முடிந்த பின், பலரும் சிறந்த 11 வீரர்களைத் தேர்வு செய்வது வழக்கமானது தான். அவ்வகையில் இந்தியாவின் முன்னாள் வீரர் வீரேந்திர ஷேவாக் 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஐபிஎல் அணியைத் தேர்வு செய்துள்ளார்.
இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வழிநடத்திய ஸ்ரேயஸ் ஐயரை கேப்டனாகத் தேர்ந்தெடுத்துள்ளார். இந்த அணியில் ஒரே ஒரு தமிழக வீரர் மட்டுமே இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் டைட்டன்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய தமிழக வீரர் சாய்சுதர்ஷன் மற்றும் விராட் கோலியை தொடக்க வீரர்களாகத் தேர்ந்தெடுத்துள்ளார் ஷேவாக். லக்னோ அணியில் அதிரடி காட்டிய நிக்கோலஸ் பூரனை 3வது வீரராகத் தேர்ந்தெடுத்துள்ளார். மிடில் ஆர்டர் பேட்டிங்கில் ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹென்ரிச் கிளாசென் ஆகியோரைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
நூர் அகமது மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் ஸ்பின்னர்கள் இடத்தைப் பிடித்துள்ளனர். வேகப்பந்து வீச்சுக்கு ஜஸ்பிரீத் பும்ரா, ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் பிரசித் கிருஷ்ணாவைத் தேர்ந்தெடுத்துள்ளார். இம்பேக்ட் வீரராக பெங்களூர் அணியின் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா இடம் பெற்றுள்ளார்.
பெங்களூர் அணி கோப்பையைக் கைப்பற்றியதில் முக்கிய பங்கு வகித்தவர் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர் பிரசித் கிருஷ்ணா. டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசும் யார்க்கர் மன்னன் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் அடங்கிய வேகப் பந்துவீச்சு கூட்டணி நிச்சயமாக அபாயகரமானதாக இருக்கும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகளை எடுத்த இளம் வீரர் நூர் அகமது உடன், சீனியர் வீரர் குல்தீப் யாதவ் காம்பினேஷன் அமர்க்களம்.
பேட்ஸ்மேன்களை பொறுத்தவரை சாய் சுதர்ஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அதிக ரன்குவிப்புப் பட்டியலில் உள்ளவர்கள். நிக்கோலஸ் பூரன், ஸ்ரேயஸ் ஐயர், ஹென்ரிக் கிளாசென் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகிய மூவரும் அணிக்குத் தேவைப்படும் நேரத்தில் அதிரடியாக ரன் குவிக்கும் திறன் படைத்தவர்கள்.
ஒட்டுமொத்தத்தில் ஷேவாக் தேர்வு செய்த ஐபிஎல் அணியில் இடம் பெற்றவர்கள் அனைவருமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்கள் தான். இவர்கள் தவிர மற்ற வீரர்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக வழங்கி இருந்தாலும், ஷோவாக்கின் பார்வையில் இந்த 12 வீரர்கள் தான் சிறந்தவர்களாக இருக்கின்றனர்.