
இந்தியாவில் நடத்தப்படும் மிகப்பெரிய கிரிக்கெட் தொடர் ஐபிஎல். வெளிநாட்டு வீரர்களும் இதில் பங்கேற்பதால் உலகம் முழுக்க பிரபலமான விளையாட்டுத் தொடராக ஐபிஎல் இருக்கிறது. இந்திய அளவில் நடக்கும் ஐபிஎல் தொடரைப் போலவே, மாநிலங்கள் அளவிலும் டி20 தொடர்கள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் தமிழ்நாட்டில் நடக்கும் டிஎன்பிஎல் தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தளிக்க இருக்கிறது.
இளம் வீரர்களின் கிரிக்கெட் கனவை நிறைவேற்ற பல கிரிக்கெட் தொடர்கள் நடத்தப்படுகின்றன. இதில் தமிழ்நாடு அளவில் நடைபெறும் டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் ஐபிஎல் அணி உரிமையாளர்களின் கவனத்தைப் பெறுகிறார்கள். அவ்வகையில் ஷாருக்கான், சாய் சுதர்ஷன், சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர், நடராஜன் மற்றும் முருகன் அஷ்வின் உள்ளிட்ட பல தமிழ்நாட்டு வீரர்கள் ஐபிஎல் விளையாடியதற்கு முக்கிய காரணமே டிஎன்பிஎல் தான்.
கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டிஎன்பிஎல் தொடரில் இதுவரை 8 சீசன்கள் நிறைவடைந்துள்ளன. இதில் சேப்பாக் கில்லீஸ் 4 முறையும், திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் ஆகிய அணிகள் தலா 1 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. 9வது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இத்தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான திண்டுக்கல் டிராகன்ஸை எதிர்கொள்கிறது கோவை கிங்ஸ்.
கடந்த சீசனில் கோவை அணி இறுதிப்போட்டியில் திண்டுக்கல்லிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. ஆகையால் இம்முறை முதல் ஆட்டத்திலேயே திண்டுக்கல் அணியை தோற்கடிக்க கோவை அணி முயற்சிக்கும். அதோடு நடப்பு சாம்பியன் தனது பலத்தை மீண்டும் நிரூபிக்கும் என்பதால் இப்போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நகரத்தில் போட்டிகள் நடைபெற உள்ளன. அவ்வகையில் கோவை, சேலம், திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் ஆகிய நகரங்களில் அடுத்தடுத்து போட்டிகள் நடக்கவுள்ளன. இன்று முதல் ஜூலை 6 ஆம் தேதி வரை மொத்தம் 32 போட்டிகள் நடக்கவுள்ளன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், திருப்பூர் தமிழர்கள், திருச்சி கிராண்ட் சோழா என மொத்தம் 8 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றுகளின் முடிவில் டாப் 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். பிளே ஆஃப் போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி திண்டுக்கல்லில் நடைபெற இருக்கிறது.
கிட்டத்தட்ட தொடர்ந்து 2 மாதங்கள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தளித்த 2025 ஐபிஎல் தொடர் முடிந்து விட்டது. இதனால் அடுத்து எப்போது ஒரு நீண்ட கிரிக்கெட் தொடர் வரும் என்ற எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருந்த ரசிகர்களின் தாகத்திற்கு டிஎன்பில் தொடர் தீனி போடவிருக்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் கலக்கிய தமிழக வீரர்களான சாய் சுதர்ஷன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் இங்கிலாந்துக்கான டெஸ்ட் தொடரில் இடம் பெற்றதால், டிஎன்பிஎல் தொடரில் விளையாட மாட்டார்கள்.