
சில நாட்களாக, ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனின் வெளியேற்றம் தொடர்பாக கிரிக்கெட் உலகில் பரபரப்பாகி பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ஆல்ரவுண்டர் அஸ்வின் வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி மீண்டும் கிரிக்கெட் உலகில் புயலை கிளப்பி உள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த சீசனில் மீண்டும் இணைந்த தமிழக சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் 9 ஆட்டத்தில் ஆடி 7 விக்கெட் எடுத்தார். கடந்த சீசனில் அவரை ரூ.9.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கி இருந்தது சிஎஸ்கே அணி நிர்வாகம்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் ஐந்து முறை பட்டம் வென்ற அணிகளில் ஒன்றாகவும், அதிகளவு ரசிகர்களை கொண்ட அணியாகவும் வலம் வருவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியாகும்.
ஐபிஎல் தொடக்க காலத்தில் இருந்து சிறந்த அணிகளில் ஒன்றாக இருந்த சிஎஸ்கே அணிக்கு கடந்த சீசன் சொல்லிக் கொள்ளும் வகையில் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். கேப்டன் ருதுராஜுக்கு மாற்றாக தோனி கேப்டன் பொறுப்பை ஏற்ற போதிலும் அணியால் வெற்றிப்பாதைக்கு திரும்ப முடியாமல் முதல் சுற்றோடு வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
இந்த சூழலில்தான் அடுத்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பழைய பாணியில் தனது ஆதிக்கத்தை செலுத்தும் வகையில் அதற்கான பணிகளை நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தான் சிஎஸ்கே அணியில் இருந்து அஸ்வின் வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. கடந்த 2008 முதல் 2015 வரையில் சிஎஸ்கே அணியில் பிரதான வீரராக வலம் வந்த அஸ்வின், அதன் பின்னர் புனே, பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான் அணிகளுக்காக ஐபிஎல் விளையாடி இருந்தார். இந்த நிலையில் தான் கடந்த சீசனில் மீண்டும் சிஎஸ்கே நிர்வாகம் அவரை ஏலத்தில் எடுத்தது.
மீண்டும் அவர் சிஎஸ்கே அணிக்கு திரும்பியது அப்போது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அளவிற்கு கடந்த சீசன் அவருக்கு கைக்கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். கடந்த சீசனில் 9 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றிய அஸ்வின் 186 பந்துகள் வீசி 283 ரன்களை கொடுத்தது அனைவரையும் அதிர்ச்சியடைச்செய்தது.
இந்த நிலையில்தான் எதிர்வரும் ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனை முன்னிட்டு சிஎஸ்கே அணியில் இருந்து அஸ்வின் விலக முடிவு செய்துள்ளதாகவும், 19-வது ஐபிஎல் போட்டியையொட்டி நடக்கும் ஏலத்திற்கு முன்பாக அஸ்வின் சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக அவர் சென்னை அணி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும், வீரர்களை தக்கவைப்பு மற்றும் விடுவிப்புக்கான கால அவகாசம் இன்னும் சில மாதம் இருப்பதால் சென்னை அணி நிர்வாகம் இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்காது என்றும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் சிஎஸ்கே வீரர் அஸ்வின் வேறு ஐபிஎல் அணிக்கு டிரேட் செய்யப்படவோ அல்லது விடுவிக்கப்படவோ வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து தன்னை விடுவிக்கும்படி சஞ்சு சாம்சன் கேட்டுக் கொண்டுள்ள நிலையில் இவ்விரு அணிகளும் சாம்சன், அஸ்வின் ஆகியோரை பரஸ்பரம் அடிப்படையில் மாற்றிக்கொள்ளக்கூடும் எனவும் யூகங்கள் இணையத்தில் கிளம்பியுள்ளன.
எதுவாக இருந்தாலும் ஐபிஎஸ் ஏலம் நடக்க இன்னும் சில மாதங்கள் இருப்பதால் ஊகங்கள் அடிப்படையில் கருத்து சொல்வது சரியாக இருக்காது கடைசியில் முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்று ரசிகர்களும், கிரிக்கெட் வல்லுநர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.