இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமனம்

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
Shubman Gill
Shubman Gill
Published on

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் பர்மிங்காமில் ஜூலை 2-ந் தேதியும், 3-வது டெஸ்ட் லார்ட்சில் ஜூலை 10-ந் தேதியும், 4-வது டெஸ்ட் மான்செஸ்டரில் ஜூலை 23-ந் தேதியும், 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஓவலில் ஜூலை 31-ந் தேதியும் தொடங்குகிறது. 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணியின் முதல் தொடர் இதுவாகும்.

இந்த மாதம் தொடக்கத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வு பெற்றதால் அவர்களது இடத்தை நிரப்பப்போவது யார்? அடுத்த கேப்டன் யார்? என்று அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் எதிர்பார்த்தபடி சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:
டி20 அணியில் சுப்மன் கில் இருக்கவே கூடாது – ஸ்ரீகாந்த்!
Shubman Gill

ஐ.பி.எல். போட்டியில் குஜராத் அணியை சிறப்பாக வழி நடத்தி வரும் சுப்மன் கில் மூன்று வடிவிலான போட்டியிலும் இந்திய அணிக்காக நல்ல பங்களிப்பை அளித்து வருகிறார். அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரரான அவருக்கு கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய டெஸ்ட் அணியின் 37-வது கேப்டனாகி இருக்கும் 25 வயது சுப்மன் கில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் இதுவரை கேப்டனாக இருந்தது கிடையாது. 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த ஜிம்பாப்வே 20 ஓவர் தொடரில் இந்திய அணியை வழிநடத்தினார். அதில் இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. சுப்மன் கில் இதுவரை இந்திய அணிக்காக 32 டெஸ்டில் விளையாடி 5 சதம், 7 அரைசதத்துடன் 1,893 ரன்கள் எடுத்துள்ளார்.

இதன் மூலமாக இந்திய டெஸ்ட் அணியின் 5-வது இளம் கேப்டன் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றுள்ளார். வெளிநாடுகளில் ஒரு சதத்தை கூட விளாசாத சுப்மன் கில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துணை கேப்டனாக விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி வருமாறு:-

சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், லோகேஷ் ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரெல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.

இதையும் படியுங்கள்:
நான் இப்போது இப்படி இருக்க சச்சின்தான் காரணம் – சுப்மன் கில்!
Shubman Gill

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com