
கிரிக்கெட்டில் மிகவும் அதிர்ஷ்டம் இல்லாத அணி என்றால் அது தென்னாப்பிரிக்கா தான். திறமையாக வீரர்கள் பலர் இருந்தும் கூட ஐசிசி கோப்பையைக் கைப்பற்ற முடியாமல் கடந்த 27 ஆண்டுகளாக தவித்து வந்தது தென்னாப்பிரிக்கா. 1998 இல் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை தென்னாப்பிரிக்கா வென்றது. அதன்பிறகு பல முறை நாக் சுற்றுகளில் வெற்றி பெறாமல் சொதப்பியது. ஜோக்கர் அணி என்று கூட தென்னாப்பிரிக்காவை சிலர் விமர்த்தனர். 27 ஆண்டுகளாக எத்தனையோ கஷ்டங்களையும், அவமானங்களையும் கடந்து வந்த தென்னாப்பிரிக்கா அணி, 2025 இல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் கோப்பைக் கனவை நனவாக்கி விட்டது.
மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11 ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங்கைத் தொடங்கிய ஆஸ்திரேலியா ககிசோ ரபடாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்மித் 66 ரன்களையும், தென்னாப்பிரிக்கா தரப்பில் ரபாடா 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்தது ஆஸ்திரேலியா. பேட் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட் ஆகிய மூவரின் வேகத்தில் 138 ரன்களுக்கு சுருண்டது தென்னாப்பிரிக்கா. ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து 74 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியா மீண்டும் சொதப்பியது. 70 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்நேரத்தில் கடைநிலை பேட்டர்கள் பொறுப்பாக விளையாடி 200 ரன்களைக் கடக்க உதவினர். இறுதியில் 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, தென்னாப்பிரிக்காவிற்கு 282 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
டெஸ்ட் போட்டிகளில் 200 ரன்களே கடினமான இலக்கு தான். இருப்பினும் தென்னாப்பிரிக்கா 282 ரன்கள் என்ற இலக்கை எப்படி விரட்டப் போகிறார்கள் என்ற பரபரப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியது. ஆனால் பொறுமையுடன் விளையாடிய மார்க்ரம் சதம் விளாச, தென்னாப்பிரிக்கா 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி வெற்றியை ருசித்தது. இதன்மூலம் 27 ஆண்டு கால கோப்பைக் கனவை நனவாக்கி சாதனைப் படைத்துள்ளது பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி.
சிறப்பாக செயல்பட்டு 136 ரன்களைக் குவித்ததோடு, 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய எய்டன் மார்க்ரம் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து ரபாடா 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்த முறை கோப்பை மிஸ் ஆகாது என தென்னாப்பிரிக்காவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் மஹாராஜ் தெரிவித்திருந்தார். ககிசோ ரபாடாவும் ஆஸ்திரேலியாவை எதிர் கொள்ளத் தயார் என்று சொல்லியிருந்தார். முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் தேசமே உங்கள் பின்னால் நிற்கும் என தென்னாப்பிரிக்க வீரர்களை ஊக்கப்படுத்தி இருந்தார்.
தற்போது சொன்னதை செய்து காட்டி கோப்பையைத் தட்டி தூக்கியுள்ளது தென்னாப்பிரிக்கா. தென்னாப்பிரிக்கா கோப்பை வென்றதில் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி தான்.